புதன், 11 மார்ச், 2026

ஈரான் மீதான தாக்குதலில் 140 அமெரிக்க வீரர்கள் காயம்-பென்டகன்

ஈரான் மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பத்திலிருந்து இதுவரை சுமார் 140 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் பென்டகன் ஊடகப் பேச்சாளர் ஷான் பார்னெல் நேற்று (10) தெரிவித்தார். 

 "Operation Epic Fury ஆரம்பமானது முதல் கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் சுமார் 140 அமெரிக்க இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்" என பார்னெல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். "காயமடைந்தவர்களில் பெரும்பான்மையானோருக்குச் சிறிய அளவிலான காயங்களே ஏற்பட்டுள்ளன. 

அவர்களில் 108 பேர் ஏற்கனவே பணிக்குத் திரும்பியுள்ளனர். 8 வீரர்கள் தொடர்ந்தும் பலத்த காயமடைந்தவர்களின் பட்டியலில் உள்ளதுடன், அவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன." உயிரிழப்பு ஏற்படக்கூடிய அல்லது ஆபத்தான நிலையிலுள்ள வீரர்களே 'பலத்த காயமடைந்தவர்களின்' பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் முன்னர் CNN செய்திச் சேவையிடம் தெரிவித்திருந்தார்.

 இதுவரை இப்போராட்டத்தில் 7 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் இறுதியாக உயிரிழந்த வீரரின் உடல், கௌரவ மரியாதைகளுடன் கடந்த திங்கட்கிழமை மாலை டெலாவேரில் உள்ள டோவர் (Dover) விமானப்படைத் தளத்திற்குக் கொண்டு வரப்பட்டது. 

தாக்குதல்களின் தீவிரத்தைப் பொறுத்து வீரர்கள் உடனடியாகச் சிகிச்சை பெறாத சந்தர்ப்பங்களும் உள்ளதால், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அவ்வப்போது மாறுபடவோ அல்லது அதிகரிக்கவோ வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களின் விலை உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!!

குறித்த எச்சரிக்கையை ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பான UNCTAD விடுத்துள்ளது. இது வாழ்க்கைச் செலவு அழுத்தங்களைத் தீவிரப்படுத்தும் எனவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


இது குறித்து இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எரிசக்தி, உரம் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயரக்கூடும்.

இது குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தும். UNCTAD இன் தரவுகளின்படி, உலகளாவிய கச்சா எண்ணெயில் 38 சதவீதமும், எல்பிஜி (LPG) எரிவாயுவில் 29 சதவீதமும் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (LNG) 19 சதவீதமும் ஹோர்முஸ் நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படுகின்றன.

உலகளவில் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படும் உரங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே பயணிக்கின்றது.இந்த நீரிணை ஊடாக அனுப்பப்படும் தயாரிப்புகளில் 84 சதவீதமானவை ஆசிய நாடுகளையே சென்றடைகின்றன. எனவே, இதன் தாக்கம் ஆசியப் பிராந்தியத்திலேயே மிக அதிகமாக உணரப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ மெக்சிகோ எப்ஸ்டீன் சோதனையும், அம்பலமாகும் உண்மைகளும்!

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் அமைந்துள்ள ஜாப்ரி எப்ஸ்டீனுக்குச் சொந்தமான ‘சோரோ ரான்ச்’ பண்ணை இல்லத்தில், மாநில அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இணைந்து தற்போது அதிரடிச் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

2026 மார்ச் 09ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் தேடுதல் நடவடிக்கையானது, அண்மையில் பகிரங்கப்படுத்தப்பட்ட ‘எப்ஸ்டீன் கோப்புகளில்’ இடம்பெற்றுள்ள புதிய தகவல்களின் அடிப்படையிலேயே முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

குறிப்பாக, இப்பண்ணை வீட்டின் மலைப்பாங்கான பகுதிகளில் சிறுமிகளின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சியூட்டும் சந்தேகத்தின் பேரில், நிலத்தடி ரேடார் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிரத் தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றது

 இந்தச் சோதனையின் போது, பண்ணை வீட்டின் இரகசியப் பகுதிகளிலிருந்து சில பழைய கணினி வன்வட்டுக்கள் (Hard Drives) மற்றும் கண்காணிப்பு ஒளிப்பதிவுத் தரவுகள் மீட்கப்பட்டுள்ளதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த பாலியல் கடத்தல் வலையமைப்பின் இரகசியங்களை வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன், எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளிண்டன், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்ட உலகளாவிய முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இந்தக் கோப்புகளில் அடிபடுவது, இந்த விசாரணையின் முக்கியத்துவத்தைச் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே முதன்முறை கருணைக் கொலை செய்ய, உச்சநீதிமன்றம் அனுமதி !!

கடந்த 13 ஆண்டுகளாக செயலற்ற நிலையில் உள்ள ஹரிஷ் ராணா என்பவரை கருணைக் கொலை செய்ய, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் மொகாலியில் உள்ள தனது கல்லூரியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஹரிஷ் ராணா, அதன் பிறகு சுயநினைவின்றி படுத்த படுக்கையாகவே இருந்து வருகிறார். 

அவரது தந்தை அசோக் ராணா, தனது மகனின் துன்பத்தைப் பார்க்க முடியாமலும், சிகிச்சைக்குத் தேவையான நிதி வசதி இல்லாததாலும், மகனைத் தானாக மரணிக்க அனுமதிக்க வேண்டும் (Passive Euthanasia) என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார். 

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை வழங்கிய மருத்துவ அறிக்கையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த அறிக்கையில், ஹரிஷ் ராணாவின் உடல் முழுவதும் படுக்கைப் புண்கள் (bed sores) அதிகமாக இருப்பதாகவும், அவர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதையும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

"இந்த அறிக்கை மிகவும் மனவேதனையை அளிக்கிறது; அந்த இளைஞரை இதே நிலையில் தொடர்ந்து இருக்க விடுவது மனிதாபிமானமற்றது," என்று நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, கேவி விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹரீஷ் ராணாவின் உயிர்காக்கும் கருவிகளை அகற்றி கருணை கொலை செய்ய அனுமதி வழங்கியது. மேலும் வீட்டில் உள்ள ஹரீஷ் ராணாவை ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வந்து ஏய்ம்ஸ் டாக்டர்கள் முறையான வழிமுறைகளை பின்பற்றி அவருக்கு உயிர் நீக்க சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர்.

 நீண்டகால சிகிச்சை அளித்தும் குணமடையாததால் உயிர் காக்கும் சிகிச்சையை கண்ணியமான முறையில் நிறுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.

செவ்வாய், 10 மார்ச், 2026

அமெரிக்கா ஈரானுக்குள் தனது தரைப்படையை அனுப்பத் திட்டமிட்டால்!!

அமெரிக்கா ஈரானுக்குள் தனது தரைப்படையை அனுப்பத் திட்டமிட்டால், அது வரலாற்றில் அந்த நாடு செய்யும் மிக மோசமான தவறுகளில் ஒன்றாக அமையப் போகின்றது. 

இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஈரானின் புவியியல் அமைப்பு ஒரு இயற்கையான கோட்டையைப் போலச் செயல்படுவது மிக முக்கியமான காரணமாகும். ஈரான் என்பது ஈராக் போன்ற சமவெளிப் பரப்பு கொண்ட நாடு அல்ல; அது இயற்கையிலேயே ஒரு தற்காப்புக் கோட்டையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஈரானின் மேற்கு மற்றும் தென்மேற்கு எல்லைகள் முழுவதும் சக்ரோஸ் (Zagros) மலைத்தொடரால் சூழப்பட்டுள்ளன. ஈராக் மற்றும் துருக்கியின் எல்லை நெடுகிலும் நீண்டு கிடக்கும் இந்த மலைப்பகுதி கடினமான பாறைகளையும், மிக உயரமான சிகரங்களையும் கொண்டது.

இந்த மலைகளில் உள்ள குறுகிய பாதைகள் எதிரிப் படைகளை எளிதாக முடக்கி, பதுங்கித் தாக்குவதற்கு (Ambush) ஈரானியப் படைக்குச் சாதகமாக அமையும். 1980-ல் ஈராக், ஈரானின் எண்ணெய் வளமிக்க குசெஸ்தான் மாகாணத்தைக் கைப்பற்ற முயன்றது. தொடக்கத்தில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும், சக்ரோஸ் மலைகளைத் தாண்டி முன்னேற முடியாமல் எட்டு ஆண்டுகள் போர் நீடித்தது. 

இறுதியில் எந்த முடிவும் இன்றி போர் முடிவுக்கு வந்தது. இந்த மலைகள் பெரும் படைகளை நகர விடாமல் முடக்கிவிடும் ஆற்றல் கொண்டவை. ஈரானின் வடக்குப் பகுதியில் காஸ்பியன் கடலை ஒட்டி அல்போர்ஸ் (Alborz) மலைத்தொடர் அமைந்துள்ளது. இது வடக்கிலிருந்து ஒரு வெளிநாட்டுப் படை தரைவழியாக ஊடுருவுவதை கிட்டத்தட்டச் சாத்தியமற்றதாக மாற்றுகிறது.

 ஒருவேளை ஒரு வெளிநாட்டுப் படை மலைத்தொடர்களைத் தாண்டி ஈரானின் மையப்பகுதிக்குள் நுழைந்தாலும், அங்கு அவர்களுக்குக் காத்திருப்பது கொடூரமான பாலைவனங்கள். குறிப்பாக லூட் பாலைவனம் (Lut Desert) உலகின் வெப்பமான இடங்களில் ஒன்று. இங்கு வெப்பநிலை 70°C வரை உயரும். இத்தகைய அதீத வெப்பம் நவீன போர் வாகனங்களைப் பழுதாக்கும், விநியோகச் சங்கிலியை (Supply lines) துண்டிக்கும், வீரர்களைக் கடுமையாகச் சோர்வடையச் செய்யும். 

ஈரானின் புவியியல் அமைப்பு அதற்கு ஒரு இயற்கைக் கோட்டையை வழங்குகிறது என்றால், அதன் ராணுவக் கட்டமைப்பு அந்த கோட்டையை மேலும் வலிமையாக்குகிறது. மத்திய கிழக்கிலேயே மிகப்பெரிய மற்றும் மிகவும் மாறுபட்ட ஏவுகணை கையிருப்பை ஈரான் கொண்டுள்ளது. ஈரானிடம் உள்ள Shahab-3, Khorramshahr போன்ற ஏவுகணைகள் 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை. 

அமெரிக்கப் படைகள் ஈரானின் எல்லையை நெருங்கும் முன்பே, கடலில் உள்ள கப்பல்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள தளங்கள் இந்த ஏவுகணைகளின் இலக்காக மாறும். அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசை நேருக்கு நேர் மோதுவதை விட, ஈரான் "சமச்சீரற்ற போர்முறை" எனும் உத்தியைக் கையாள்கிறது. 

ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) என்பது வழக்கமான ராணுவத்தைப் போலச் செயல்படாமல், கொரில்லா போர்முறை மற்றும் மறைமுகத் தாக்குதல்களில் கைதேர்ந்தது. அமெரிக்காவிடம் நவீனத் தொழில்நுட்பம் மற்றும் வான்வழி ஆதிக்கம் இருந்தாலும், ஈரான் போன்ற ஒரு மலைப்பாங்கான நாட்டில் தரைப்படையை நிலைநிறுத்துவது என்பது "வியட்நாம் போர்" அல்லது "ஆப்கானிஸ்தான் போர்" போன்ற ஒரு நீண்ட கால மற்றும் முடிவில்லாத போராட்டமாகவே முடியும். 

ஈரானின் நிலப்பரப்பு, அதன் மக்கள் தொகை மற்றும் நவீன ஏவுகணை பலம் ஆகியவற்றைத் தாண்டி ஒரு வெற்றியைப் பெறுவது என்பது எந்தவொரு வல்லரசுக்கும் ஒரு மிகப்பெரிய சவாலாக அமையப் போகின்றது. 

அமெரிக்கா தனது தரைப்படையை ஈரானுக்குள் அனுப்பினால், அது ஈரானிய ராணுவத்துடன் மட்டுமல்லாமல், அந்த நாட்டின் புவியியலோடும் (Geography) போரிட வேண்டியிருக்கும். வரலாறு நமக்குக் கற்பிக்கும் பாடம் என்னவென்றால், இயற்கையோடு மோதிய வல்லரசுகள் எப்போதும் பெரும் பின்னடைவையே சந்தித்துள்ளன.

முகிந்தன் துரைராஜசிங்கம்

மட்டக்களப்பு குருக்கள்மடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம் பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தா விளையாட்டு மைதானத்திற்கு அருகில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழியின் அகழ்வுப் பணிகள் 2026 மார்ச் 10, செவ்வாய்க்கிழமை (இன்று) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய, நீதவான் முன்னிலையில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவினர் இந்த முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த காலங்களில் நிலப்பகுதியைச் சமப்படுத்தும் பணிகளின் போது மனித எச்சங்கள் தென்பட்டதை அடுத்து, இந்தப் பகுதி மனிதப்புதைகுழியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அகழ்வின் மூலம் கண்டெடுக்கப்படும் எச்சங்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது தகவல்களுடன் ஒப்பிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 குருக்கள்மடம் பகுதியில் முன்னெடுக்கப்படும் இந்த அகழ்வுப் பணிகள், கடந்த காலப் போர்க்காலச் சம்பவங்கள் குறித்த பல உண்மைகளை வெளிக்கொணரலாம் என்பதால் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றது. 

அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, தரை மட்டத்திலிருந்து சில அடி ஆழத்தில் மனித எலும்பு எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எலும்பு எச்சங்களுடன் சிதைவடைந்த நிலையில் சில துணித் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன, இவை தடயவியல் சோதனைக்காகச் சேகரிக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் வரும் 2 நாட்கள் மட்டுமே உணவகங்கள் செயல்படும்!!

தக்காளி சாதம், கிச்சடி போன்ற தயார் நிலை உணவு தான் செய்ய முடியும் என திருப்பூர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் நாகராஜன் திருப்பூரில் பேட்டி அளித்தார். மேலும் அவர் அளித்த பேட்டியில்; சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கடையை அடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

தினசரி 2 லட்சம் பேர் உணவகத்தை நம்பி உள்ளனர். இதில் 50 ஆயிரம் பேர் முழுமையாக ஓட்டல்களை மட்டும் நம்பி உள்ளனர். அடுத்த 2 நாட்கள் மட்டுமே உணவகத்தை நடத்த முடியும். விறகு அடுப்பு வைத்து செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளது. 

1500 சிலிண்டர்கள் தினசரி தேவைப்படும் நிலையில் தட்டுப்பாடு காரணமாக அனைத்து வகை உணவுகளும் செய்ய முடியாது. தக்காளி சாதம் போன்ற உணவுகள் தான் கிடைக்கும். அனைத்து உணவகங்களும் கேஸ் அடுப்பு வைத்து அதற்கான வசதிகள் செய்துள்ள நிலையில் விறகு அடுப்பு மூலம் அனைத்து வகையான உணவுகள் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Thank You Google

Thank You Google
Thanks