ஞாயிறு, 26 ஜூலை, 2026

தெஹிவளை பெல்லன்வில படுகொலை பின்னணி அம்பலம்!

பெல்லன்வில உணவக உரிமையாளரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மின்னேரியா இராணுவ முகாமிலிருந்து துப்பாக்கிகளைக் கடத்திய சம்பவத்தின் சந்தேகநபர் எனத் தெரியவந்துள்ளது. பெல்லன்வில பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரை நேற்று (25) இரவில் சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை நவகமுவ பொது மயானத்திற்கு அருகில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். 


தெஹிவளை - பொரலஸ்கமுவ வீதியில் பெல்லன்வில நடைபாதை நுழைவாயிலுக்கு எதிரில் உள்ள உணவகத்திற்கு அருகில் நேற்று இரவு 7.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், குறித்த உணவக உரிமையாளரை இலக்கு வைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த வேளையில், உணவக உரிமையாளர் உணவகத்திற்கு வெளியே சிகரெட் புகைத்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அவரது வயிற்றுப் பகுதியில் காயமேற்பட்டதையடுத்து, அவர் உணவகத்திற்குள் ஓடிச் சென்றுள்ளார். 

பின்னர் அவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், காயங்களின் தீவிரத்தன்மை காரணமாக உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் உணவகத்தின் உரிமையாளரான மல்லவ ஆரச்சிகே நெல்சன் சுதத் அமரசிங்க எனப்படும் 55 வயதுடைய நபராவார். நேற்று இரவே சம்பவ இடத்திற்கு வந்த பொரலஸ்கமுவ பொலிஸார், கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கின. 

 முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழந்த உணவக உரிமையாளர் 'கொஸ் மல்லி' எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் உறவினர் எனத் தெரியவந்துள்ளது. அதற்கமைய, கொஸ் மல்லியின் எதிர்த்தரப்பான 'சண்டோ' அல்லது 'அசங்க' என்பவர்களே இத்துப்பாக்கிச் சூட்டை வழிநடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விசாரணைகளைத் தொடங்கிய பொலிஸார், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் குறித்த தகவல்களை ஏனைய பகுதி பொலிஸ் சோதனைக் சாவடிகளில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்தனர். அதற்கமைய, குறித்த தகவல்களுக்குப் பொருத்தமான மோட்டார் சைக்கிளும் இரு நபர்களும் நவகமுவ பகுதியில் நடமாடுவதைக் கண்ட பொலிஸ் அதிகாரிகள் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளனர். 

அப்போது, குறித்த இருவரும் தங்கள் மோட்டார் சைக்கிளை நவகமுவ, நிஸ்சரண சித்பிம பொது மயானத்திற்கு அருகில் நிறுத்திவிட்டு, முகமூடிகள் மற்றும் கையுறைகளைக் கழற்றிவிட்டு அவ்விடத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்ததைக் கண்டறிந்துள்ளனர். 

இரு சந்தேகநபர்களையும் கைது செய்த பொலிஸார் சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அவர்களின் கைபேசிகளைப் பரிசோதித்தபோது பெல்லன்வில கொலை தொடர்பான குரல் பதிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கொலைச் சம்பவம் தொடர்பில் அவ்விருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மேலும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி பெறப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks