அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழில் வளர்ச்சி, 18ம் நூற்றாண்டில் துரிதமானது.
வளர்ச்சியடைந்த நாடுகளில் 24 மணிநேரத்தில் 12 முதல் 18 மணித்தியாலங்கள் வரை வேலை செய்ய வேண்டுமென தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
1886 ஆம் ஆண்டு மே மாதத்தில் சிகாகோவின் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் 8 மணி நேர வேலைக் கோரிக்கையை முன்வைத்து நடந்த போராட்டத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடுதான் மே தினத்தின் வித்தாக அமைந்தது.
இந்த அலை உலகெங்கும் பரவி, 1889-ல் பெரிஸில் நடந்த சர்வதேச சோசலிச மாநாட்டில் மே 1-ஆம் திகதி தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
உலக வரலாற்றோடு பின்னிப் பிணைந்த இந்த மே தினத்திற்கு இலங்கையில் ஒரு நீண்ட மற்றும் உணர்ச்சிகரமான வரலாறு உண்டு.
இலங்கையின் மே தின வரலாற்றில் ஏ.ஈ. குணசிங்கவின் பங்கு மிக முக்கியம் இடம் வகிக்கின்றது.
இலங்கை தொழிற்சங்க இயக்கத்தின் தந்தை என அறியப்படும் இவர், 1927-ஆம் ஆண்டில் இலங்கையில் முதன்முதலாக மே தினத்தைக் கொண்டாடினார்.
1933-ல் ஏ.ஈ. குணசிங்கவின் தலைமையில் கொழும்பு பிரைஸ் பூங்காவிலிருந்து காலி முகத்திடல் வரை ஒரு பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற தொழிலாளர்கள் சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து, வாத்தியங்கள் முழங்க நடனங்களுடன் அணிவகுத்துச் சென்றனர்.
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த முதல் பேரணியில் அரசியல் முழக்கங்கள் எதுவும் எழுப்பப்படவில்லை.
அது முழுக்க முழுக்க உழைப்பின் கொண்டாட்டமாகவே இருந்தது.
1935-ல் லங்கா சமசமாஜக் கட்சி உருவான பிறகு, மே தினம் ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்தது. 1956-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மே 1-ஆம் திகதியை அரச விடுமுறை தினமாக அறிவித்தார்.
இது தொழிலாளர் உரிமைகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். 1960-களில் கொழும்பு வீதிகள் இடதுசாரி கட்சிகளின் சிவப்பு நிறக் கொடிகளால் நிறைந்திருந்தன, இது 'சிவப்பு மே தினம்' என்று அழைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக