வியாழன், 9 ஏப்ரல், 2026

இஸ்லாமாபாத்திற்கு வருகை தரும் ஈரானிய குழு!!

அமெரிக்காவுடனான மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக ஈரானிய உயர்மட்டக் குழு வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தைப் பாகிஸ்தானுக்கான ஈரானிய தூதுவர் ரேசா அமிரி மொகடம் (Reza Amiri Moghadam) உறுதிப்படுத்தியுள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இஸ்ரேலிய ஆட்சியின் தொடர்ச்சியான போர்நிறுத்த மீறல்களால் ஈரானிய பொதுமக்களிடையே சந்தேகம் நிலவியபோதிலும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அழைப்பை ஏற்று இந்த வருகை அமைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் முன்மொழிந்துள்ள பத்து அம்சத் திட்டத்தின் அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படும் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf), புதன்கிழமை அன்று பேசுகையில் சற்று கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

லெபனான் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் இஸ்ரேல் ஏற்கனவே போர்நிறுத்தத்தை மீறிவிட்டதாகவும், இத்தகைய சூழலில் பேச்சுவார்த்தை நடத்துவது நியாயமற்றது என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இருப்பினும், இராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரானியத் தரப்பு இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முன்வந்துள்ளது.

இந்த முரண்பாடான நிலைப்பாடுகளுக்கு மத்தியில் சனிக்கிழமை தொடங்கும் பேச்சுவார்த்தையில் எத்தகைய உடன்பாடு எட்டப்படும் என்பது சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது. 

 அமெரிக்கத் தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தலைமையிலான குழு இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. 

 ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது மற்றும் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான முக்கிய முடிவுகள் இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks