புதன், 8 ஏப்ரல், 2026

போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகள் சம்மதம் !!

இடைக்கால போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகள் சம்மதம் தெரிவித்து உள்ளதால் மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் படிப்படியாக தணிகிறது. 

போர் நிறுத்த அறிவிப்பு தங்களுக்கு கிடைத்த வெற்றி என ஈரான் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அறிவித்து உள்ளார். லெபனான் மற்றும் பிற இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள அமெரிக்கா, இஸ்ரேல் ஒப்பு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

போர் நிறுத்தம் அமலில் இருக்கும் இரண்டு வாரங்களுக்கு ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்று ஈரான் தரப்பு தகவல் தெரிவித்து உள்ளது. ஈரானிய ஆயுதப் படைகளுடனான ஒருங்கிணைப்பின் மூலம் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்து சாத்தியமாகும் என்று ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் கூறி இருக்கிறார்.

பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறுதல், தங்கள் நாட்டின் மீதான தடைகளை நீக்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைளை ஈரான் முன்வைத்துள்ளது. 

தங்கள் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை அமைய வேண்டும் என ஈரான் விருப்பம் தெரிவித்து உள்ளது. இதனிடையே இடைக்கால போர் நிறுத்தம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி, தற்காலிகமாக தாக்குதலை மட்டுமே நிறுத்தி இருப்பதாகவும், இது போருக்கான முடிவல்ல என்றும் கூறி இருக்கிறார். 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எங்களை சீண்டாதவரை நாங்கள் அமைதி காப்போம் என்றும் ஈரான் கூறி இருக்கிறது. இந்நிலையில் தமது கோரிக்கையை ஏற்று உடனடியாக போர் நிறுத்தம் அறிவித்த அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் ஷெரீப் நன்றி தெரிவித்து கொண்டுள்ளார். 

அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ள போரில் தொடர்புடைய நாடுகளை நாளை மறுநாள் இஸ்லாமாபாத் வர செபாஷ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார். இந்த பேச்சுவார்த்தைகள் "நீண்ட கால அமைதியை அடைவதில் வெற்றி பெறும்" என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். 

அதே போல ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்காக, ஈரானிய வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks