கனடா அரசு சீனாவுடன் முழுமையான வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்து கொண்டால், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் அனைத்துப் பொருட்கள் மீதும் உடனடியாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
கனடா தனது நாட்டைச் சீனப் பொருட்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான ஒரு ‘பின்வாசல்’ (Backdoor) அல்லது ‘இறங்குதுறை’யாகப் பயன்படுத்த முனைவதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
“சீனா கனடாவை உயிருடன் விழுங்கிவிடும் அதன் வணிகங்கள், சமூகக் கட்டமைப்பு மற்றும் அன்றாட வாழ்க்கையை முழுமையாக அழித்துவிடும்” என்று ட்ரம்ப் தனது பாணியில் எச்சரித்துள்ளார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி அண்மையில் பெய்ஜிங்கிற்குச் சென்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்தித்தார்.
அதன் விளைவாக கனடிய விவசாயப் பொருட்கள் மீதான வரியைச் சீனா குறைத்துள்ளது.
அத்துடன் சீனாவிடமிருந்து 49,000 மின்சார வாகனங்களை மிகக் குறைந்த வரி விகிதத்தில் இறக்குமதி செய்யக் கனடா ஒப்புக் கொண்டுள்ளது.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஜனவரி 16-ஆம் திகதி மார்க் கார்னி சீனா சென்றபோது, “அவர் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்து கொள்வது நல்லதுதான்” என்று ட்ரம்ப் முதலில் ஆதரவளித்திருந்தார்.
ஆனால், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கடும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த மிரட்டலானது அண்மையில் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில், ட்ரம்ப்பின் கொள்கைகளை மார்க் கார்னி மறைமுகமாக விமர்சித்ததைத் தொடர்ந்து வந்துள்ளது.
கனடா அமெரிக்காவால்தான் பிழைத்திருக்கிறது என்பதை மார்க் நினைவில் கொள்ள வேண்டும்” என்றும் ட்ரம்ப் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த அதிரடி 100% வரி மிரட்டல் காரணமாக, கனடாவின் மின்சார வாகன (EV) சந்தையில் பாதிப்பு ஏற்படலாம் என கருதப்படுகின்றது.
கனடா சீனாவிடமிருந்து 49,000 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய இணங்கியுள்ளது.
இதற்குப் பதிலடியாக அமெரிக்கா 100% வரி விதித்தால், கனடாவில் தயாரிக்கப்படும் வாகன உதிரிபாகங்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாமல் போகும்.
கனடாவின் வாகன உற்பத்தித் துறை (Automotive Sector) அமெரிக்க சந்தையையே முழுமையாக நம்பியுள்ளது. 100% வரி விதிக்கப்பட்டால், கனடாவில் உள்ள பல வாகன உற்பத்தி ஆலைகள் மூடப்படும் அபாயம் ஏற்படும்.மேலும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரிபாகங்களின் விலை கனடாவில் பல மடங்கு உயரும்,
இது சாதாரண மக்களின் வாகனக் கனவை பாதிக்கும்.
அத்துடன் தினமும் சுமார் 3.6 பில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தகம் இவ்விரு நாடுகளுக்கு இடையே நடைபெறுகிறது. 100% வரி என்பது இந்த வர்த்தகத்தை முற்றுமுழுதாக முடக்கிவிடும்.
உணவுப் பொருட்கள், எரிபொருள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என அன்றாடத் தேவைகளுக்கு இரு நாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன.
வரி விதிப்பால் இரு நாடுகளிலும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படும்.
எல்லைப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வர்த்தக நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்.
ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்க டொலருக்கு நிகரான கனடிய டொலரின் (CAD) மதிப்பு ஏற்கனவே பலவீனமடையத் தொடங்கியுள்ளது.
கனடாவில் முதலீடு செய்யவிருந்த பல சர்வதேச நிறுவனங்கள், இந்த வர்த்தகப் போர் அச்சத்தால் தங்களது திட்டங்களை நிறுத்தி வைக்கக்கூடும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக