புதன், 31 டிசம்பர், 2025

களுத்துறை நுகேகொட வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு!!

களுத்துறை, நுகேகொட போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர், "ராஜவத்த சதுவா" என அழைக்கப்படும் நாராயணகே திலீப் சதுரங்க எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்./

 இவர் கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி போதைப்பொருள் குற்றச்சாட்டுத் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் ஆவார். 

சிறையில் இருந்தபோது கடந்த 29 ஆம் திகதி சிறைக்கைதிகள் சிலரால் தாக்கப்பட்டமையினால் இவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


 அறுவை சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த குறித்த கைதியின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்த கைதிக்கு தற்போது அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வைத்தியசாலை வளாகத்தில் பெரும் பதற்றமான சூழல் நிலவியதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks