புதன், 31 டிசம்பர், 2025

கலாசூரி லதா வல்பொல விடைபெற்றார்


8 தசாப்தங்களாக இலங்கை ரசிகர்களின் செவிகளுக்கு இன்பம் சேர்த்த பழம்பெரும் , சிங்கள பாடகி லதா வல்பொல தனது வாழ்க்கை பயணத்தை நிறைவு செய்து இன்று விடைபெற்றார். 

 அன்னாரது இறுதிக்கிரியைகள் பூரண அரச அனுசரணையுடன் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்றதன் பின்னர், பூதவுடல் பொரளை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இது பெருந்திரளான மக்களின் சோகங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது. லதா வல்பொலவின் பூதவுடல் பொரளை ஜயரத்ன 'ரெஸ்பெக்ட்' மலர்சாலையிலிருந்து இன்று முற்பகல் 9.00 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

 அவரை நேசித்த, அவரது குரலால் ஆறுதலடைந்த ரசிகர்கள், சக கலைஞர்கள் மற்றும் பெருமளவானோர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை முதல் சுதந்திர சதுக்க வளாகத்திற்கு வருகை தந்தனர். சுதந்திர சதுக்கத்தின் மேல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த லதா வல்பொலவின் பூதவுடல் மத சடங்குகளை மேற்கொள்வதற்காக இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கீழ் தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

 பௌத்த மத வழிபாடுகளுக்கமைய பாம்சுக்கூல வழங்கப்பட்டதன் பின்னர் கிறிஸ்தவ மத வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அரச அஞ்சலிக் கூட்டம் ஆரம்பமானதுடன், கலாசூரி லதா வல்பொலவின் இறுதிக்கிரியைகள் பூரண அரச அனுசரணையுடன் நடைபெற்றன. 

பின்னர் கலாசூரி லதா வல்பொல, தனது பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் சக கலைஞர்களிடமிருந்தும் தன்னை நேசித்த பெருந்திரளான அன்பு ரசிகர்களிடமிருந்தும் விடைபெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks