அந்தவகையில் ஈழத்துப் பாகதக் கல்வெட்டுகளில் உள்ள தமிழ்ப் பெயர்களான ‘ஆய், மாற, குடி, பருமக, வேள், பரத, உதி, மருமக, சகல’ போன்று தென்னிலங்கையில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களிலும் தமிழ் பெயர்களே காணப்படுகின்றன.
ஆனால் சிங்களப் பண்பாட்டைச் சாராத இந்த பெயர்களும் அவற்றின் சின்னங்களையுடைய இந்த நாணயங்களும் குறிப்பாகத் தமிழகத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவே அழுத்திக் கூறப்பட்டாலும் இவ்வகை நாணயங்கள் தமிழகத்தில் காணப்படாது இலங்கையில் மட்டும் காணப்படுவதால் இவற்றை இலங்கைத் தமிழர் வெளியிட்ட நாணயங்கள் எனக் கருத இடமுண்டு
(புஸ்பரட்ணம் 1998:1-12, 1999:125-30, 1999M:51-59). இக்கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் தென்னிலங்கையில் எழுத்துப் பொறித்த சில தமிழ் நாணயங்கள் கிடைத்துள்ளன.
அண்மையில் ராஜாவிக்கரமசிங்கே (Rajawickremesinghe), பொபிஆராச்சி (Bopearachchi) போன்றோர் தென்னிலங்கையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மேற்கொண்ட கள ஆய்வின்போது பல்வேறு காலப் பகுதிக்குரிய நாணயங்களைக் கண்டுபிடித்தனர்.
இவற்றுள் பாகத எழுத்துப் பொறித்த நாணயங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவை ஈய (Lead) நாணயங்களாக இருப்பதால் இவற்றில் உள்ள எழுத்துகள் தேய்வடைந்துள்ளன. அவற்றுள் நல்ல நிலையில் உள்ள 44 நாணயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவை கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட கால நாணயங்கள் என்பதை எழுத்தமைதி கொண்டு கணிப்பிட முடிகிறது.
(Bopearachchi and Wickremesinghe 1999:15-17). ஆகவே இவை ஈழத்தில் இருந்த சங்ககால, சங்கமருவிய கால தமிழ் அரசுகளைக் இவை குறிப்பாக வெளிப்படுத்துகின்றன. மேலும் இதே போன்று பல்வேறு தொல்லியல் மையங்களில் இருந்து பலதரப்பட்ட நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டாலும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 44 நாணயங்களும் சமாறகம என்ற வட்டாரத்தில் உள்ள அகுறுகொட என்ற இடத்திலும் கண்டுபிடிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நாணயங்களின் முன்புறத்தில் மலர், யானை, சுவஸ்திகா, மீன், சக்கரம், ஆமை, போன்ற சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. பின்புறத்தில் பாகத எழுத்தில் தனிமனிதப் பெயர்கள், பட்டப்பெயர்கள், பொதுப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இப் பெயர்களில் பரத (Barata), நாக (Naka), நாஹஸ (Nahasa), உதிரன் (Utiran), தசபிஜன் (Tasapijan), குதஹ (Gutaha) மஜிமக (Majhimaha), புசஹ (Pusaha), சுடநாக (Cudanaka), திஸஹா (Tisaha), மலதிஸஹ (Malatisaha), பரததிஸஹ (Baratatisaha), ததஸ (Tatasa) கலபுதஹ (Kalaputaha), திரிஹ (Tiriha), தேவஹ (Devaha), ஆலய (Alaya) என்பன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன
(Bopearachchi and Wickremesinghe 1999:51-64). ஒரே பெயரில் பலர் இருந்துள்ளனர் என்பதை நாணயங்களின் கால வேறுபாட்டையும் சின்னங்களுக்கிடையிலான வேறுபாட்டையும் கொண்டு உணர முடிகிறது. இவற்றுள் தமிழ் நாணயங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இவை காலத்தால் முந்தைய பழந்தமிழகமாகத் திகழ்ந்த ஈழத்துக்குரியவை. இவை சங்க காலத்தில் காணப்படுகின்ற தமிழர் மெய்யியலாகிய சுவஸ்திக சின்னத்தைக் கொண்டு காணப்படுகின்றன.அச்சின்னம் பழந்தமிழக மெய்யியல் நெறிக்குரியது.
அதனை ஆசீவகம் என அழைப்பர். இதனை சிலப்பதிகாரம் 27-11 பாடல்
"கண்ணகி தாதை கடவுளர் கோலத்து
அண்ணல் அம் பெரும் தவத்து ஆசீவகர்முன்
புண்ணிய தானம் புரிந்து, அறம் கொள்ளவும்"
அதாவது கண்ணகியின் தந்தை மாநாய்கன் கடவுளர் எனப் போற்றப்படும் ஆசீவகத்துறவி கோலம் பூண்டு சமண மதத்தின் ஒரு பிரிவாகிய ஆசீவக தலைவன் முன் தோன்றி புண்ணிய தானம் செய்து, துறவறம் மேற்கொண்டான் என்கிறது. சங்ககாலத்தில் சமணம் என அழைக்கப்பட்டது
ஜெயினம் அல்ல, அது ஆசீவகமாகும். ஜெயினம்,பெளத்தம் போன்றவை களப்பிரர்களுடைய காலத்திலேயே பழந்தமிழகம் நுழைந்தது என்பதைத்தான் இந்த நாணயங்கள் தொல்லியல் ரீதியாக வெளிப்படுத்துகின்றன. மேலும் இவ்வாறான நாணயங்களிலும் ,கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்ற பாகத பிரயோகத்திற்கு காரணம் யாதெனில் கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த வணிகர்களின் பிராகிருதப் பெயர்களைத் தமிழில் எழுதும் சூழல் பழந்தமிழ்நாட்டில் உருவாகி இருந்ததால் அன்று தமிழர்கள் அதற்கான சில சிறப்பு எழுத்துகளை உருவாக்கி இருந்தனர்.
‘ஸ’ போன்ற எழுத்துகள் அவ்வாறு உருவாக்கப்பட்ட சிறப்பு எழுத்துகள் ஆகும். நாளடைவில் தமிழர்கள் அதனைத் தாங்கள் உருவாக்கியதால், அதனைத் தங்கள் எழுத்தாகக் கொண்டு கல்வெட்டுகளில் அதிக அளவில் பயன்படுத்தினர். அதனால் தான் தொல்காப்பியர் வட சொற்களைப் பயன்படுத்தும்பொழுது அதன் சிறப்பெழுத்துகளை நீக்கி அதனைத் தமிழ்ப்படுத்தி தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுத வேண்டும் என்று அன்றே இலக்கணம் வகுத்தார்.
ஆனால் நடைமுறையில் அதனைப் பின்பற்றாததன் விளைவே பிராகிருதச் சிறப்பு எழுத்துகள் கல்வெட்டுகளில் இருப்பதற்கான காரணங்கள் ஆகும். ஆகவே அந்த சிறப்புப் பிராகிருத எழுத்துகள் அனைத்தும் தமிழர் உருவாக்கிய எழுத்துகள்தான். பின் இந்த சிறப்பு எழுத்துகளையும் தமிழி எழுத்துக்களையும் பயன்படுத்தித்தான் அசோகன் பிராமியும், சமற்கிருத மொழிக்கான கிரந்த எழுத்து முறையும் உருவானது.
அந்த வகையில் ஈழத்தினுடைய நாணயங்கள்,கலவெட்டுக்கள் ஆகியவற்றில் காணடுகின்ற பாகத பிரயோகத்திற்கு காரணமாக அமைந்ததில் ஆசீவக நெறியை வடநாட்டில் இருந்து ஆசீவக நெறியை பின்பற்றியோரது செயலும் ஆகும். அதற்காக அதே முறையை பின்பற்றிய தமிழக, தெற்காசிய நாடுகளில் அவை தனித்தவொரு மொழியாக அடையாளம் காணப்படுவதில்லை.
இனி
உதிரன்
ஈழத்தில் கிடைத்த நாணயங்களில் இது பல வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் முன்புறத்தில் மலர் வடிவிலான சின்னமும் பின்புறத்தில் சுவத்திகா(ஆசீவக) மற்றும் உதிரன் என்ற பெயரும் காணப்படுகின்றன.
பெயரின் இறுதியில் வரும் ‘ன’ என்ற எழுத்து தமிழ் மொழிக்கே உரிய சிறப்பெழுத்தாகும். இவ்வெழுத்தைத் தமிழகப் பிராமிக் கல்வெட்டுகளிலும் (Mahadevan 1966:4-12), நாணயங்களிலும் (Krishnamurthy 1997:103-105) கொடுமணலில் கிடைத்த மட்பாண்டங்களிலும் (Rajan 1994:107) சிறப்பாகக் காணலாம். இதுவரை இலங்கையில் கிடைத்த பாகத கல்வெட்டுகளில் இவ்வெழுத்து காணப்படாவிட்டாலும் இதன் பயன்பாடு இங்கிருந்ததற்கு பூநகரியில் கிடைத்த பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்ட ஓடுகள் சிறந்த சான்றாகும் (புஸ்பரட்ணம் 1993:41).4 நாணயத்தில் உள்ள எழுத்து தமிழ் மொழிக்குரியதென்பதை விக்கிரமசிங்கா ஏற்றுள்ளார்.
ஆனால் உதிரன் என வாசிக்கவேண்டிய இப்பெயரை உதிரனா (படம் 1) என வாசித்துள்ளார் (Bopearachchi and Wickremesinghe 1999:56). இது தவறாகும்.
இப்பெயருக்கும் அதேகாலப் பாகத கல்வெட்டுகளில் வரும் உதி, உதிய போன்ற பெயர்களுக்கும் இடையே பெயரடிப்படையில் ஒருவித ஒற்றுமை காணப்படுகிறது. அதனால் அதுவும் சங்ககால பெயர்களையே குறிக்கும். இப்பெயர்கள் ஏறத்தாழ 31 கல்வெட்டுகளில் வருகின்றன.
கல்வெட்டுகளில் இப் பெயருக்குரியவர்கள் மகாராஜா, ராஜா, பருமக, கமணி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளனர் (Paranavitana 1970 : Nos, 46,550). வட இலங்கையில் பெரிய புளியங்குளத்தில் கிடைத்த நான்கு கல்வெட்டுகள் உதி என்ற சிற்றரசன் பற்றிக் கூறுகின்றன
(Paranavitana 1970 : Nos. 338-341). இப் பெயரில் சில மன்னர்கள் அநுராதபுரத்தில் ஆட்சி புரிந்ததை மகாவம்சம் கூறுகிறது (Mahavamsa xx:57). இப்பெயர்களுக்கும் தமிழ்நாட்டில் ஆட்சிபுரிந்த உதியன் சேரலாதன் என்ற சேரமன்னன் பெயருக்கும் இடையே மொழி அடிப்படையில் ஒருவித ஒற்றுமை உண்டு.
இவர்கள் மாந்தையை தலைநகராக கொண்டு இரு பிராந்தியங்களிலும் இவர்கள் ஆளும் வர்க்கமாக இருந்ததும் அவர்களுடைய மிகப்பெரிய கடற்படையும் அந்த உதியன் சேரலாதனுடைய மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி.மு 327 இல் பழந்தமிழக சேரவேந்தனாக மாந்தையில் இருந்து வட இந்திய அலக்சாண்டருடைய படையெடுப்புக்கு எதிராக போரிட்டதும் அதனால் படுகாயமடைந்த அலக்சாண்டர் கிரேக்கம் திரும்பும் வழியில் பாபிலோனில் மரணமடைந்ததும்.
அப்போரில் சிறைபிடித்த யவனர்களை இமயவரம்பன் மாந்தைக்கு இழுத்து வந்ததும் இதிகாச புராணமல்ல,அவை அப்பழுக்கற்ற வரலாற்று நிகழ்வு என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
மேலும் தென்னிலங்கையில் கிடைத்த இன்னொரு நாணயத்திலும் தமிழ்ப் பிராமிக்குரிய ‘ன’ பெயரின் இறுதியில் வருகிறது. இந் நாணயத்தின் முன்பக்கத்தில் சக்கரமும் பின்புறத்தில் பிராமி எழுத்தில் தனிநபர் பெயரும் இடம்பெற்றுள்ளன.
சில எழுத்துகள் தெளிவற்ற நிலையில் உள்ள இப் பெயரை இதை தசபிஜன் என விக்கரமசிங்கே வாசித்துள்ளார் (Bopearachchi and Wickremesinghe 1999:59). இப்பெயரின் இறுதி ‘அன்’ என்ற விகுதியோடு முடிவதால் இது தமிழில் ஆண் மகனைக் குறித்ததென்பது தெளிவாகிறது
(படம் 2). இந்த வகையில் மேற்கூறப்பட்ட இரு நாணயங்களில் வரும் பெயர்களும் தமிழுக்குரியவை என உறுதிபடக் கூறலாம்.
பரததிஸ
தென்னிலங்கையில் கிடைத்த இன்னொரு தமிழ் நாணயமாக ‘பரத’ என்ற பெயர் பொறித்த நாணயத்தைக் கூறலாம் (படம் 3). இதன் முன்புறத்தில் சுவஸ்திகாவும் இரு மீன் கோட்டுருவச் சின்னங்களும், பின்புறத்தில் ‘பரததிஸ’ (Barata Tisa) என்ற பெயரும் இடம் பெற்றுள்ளன
(Bopearachchi and Wickremesinghe 1999:53). பரத என்ற பெயர் 21 பிராமிக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றது. நாணயத்தில் வருவது போல் வட இலங்கையில் பெரிய புளியங்குளத்தில் உள்ள இரு கல்வெட்டுகளில் பரததிஸ என்ற பெயரும் சுவஸ்திகா சின்னமும் காணப்படுகின்றன
(Paranavitana 1970:Nos. 338-341) இப்பெயர் ராஜா, பருமக, கமணி போன்று ஒரு பட்டப் பெயராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இனம் அல்லது சமூகம் சார்ந்த பெயராக இருக்கலாம். இதையே நாணயத்திலும் கல்வெட்டுகளிலும் பட்டப்பெயராகப் பயன்படுத்தியுள்ளனர்.
தமிழ் மொழியில் பரத என்ற பெயருக்குச் சமமாக பரதர், பரதவர், பரவர் என்ற பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன (DED. No. 3262) சி. மலோனி என்பவர் வட மேற்கிலங்கையில் வாழும் பரதவ சமூகத்தின் தோற்றத்தைச் சங்க இலக்கியத்தில் வரும் பரவர், பரதவர் சமூகத்துடன் தொடர்புபடுத்தி இப்பெயரும் இலங்கைப் பாகத கல்வெட்டுகளில் வரும் பெயரும் ஒன்றென்றார் (Maloney 1969:224-40). இக்கருத்தே பொருத்தம் எனக் கூறும் சுதர்சன் செனிவரட்ன இச்சமூகத்தின் தோற்றத்தை இலங்கை, தென்னிந்தியப் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடர்புபடுத்திக் கூறினார்.
இதற்கு இப்பெயர் கொண்ட பாகத கல்வெட்டுகள் பல இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாட்டு மையங்களில் கண்டுபிடிக்கப்பட்டதைச் சான்றாகக் காட்டுகிறார் (Seneviratne 1985:49-50). சங்க காலத்தில் கடலும் கடல் சார்ந்த பகுதியிலும் வாழ்ந்த நெய்தல் நில மக்களாகப் பரதவர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சங்க இலக்கியத்தில் இருந்தும், தொலமியின் குறிப்பில் இருந்தும் இச்சமூகம் காவேரி நதிப் படுக்கைக்கும் தாமரபரணியாற்றுக்கும் இடைப்பட்ட கிழக்குப் பிராந்தியத்தில் வாழ்ந்ததை அடையாளம் காணமுடிகிறது. இதன் எதிர்ப்புறத்தில் அமைந்த வடக்கு, வடமேற்கு இலங்கையில்தான் இப்பெயருக்குரிய பெரும்பாலான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன (Seneviratne 1985:49-50).
சங்க இலக்கியத்தில் பரதவ சமூகத்தின் முக்கியத் தொழிலாக மீன்பிடித்தல், முத்துச் சங்கு குளித்தல், வர்த்தகம் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.
இது இலங்கையில் வாழ்ந்த பரதவ சமூகத்திற்கும் பொருந்தும். ‘பரத’ பெயர் பொறித்த நாணயத்தின் முன்புறத்தில் இரு மீன்கள் குறியீட்டுச் சின்னமாக இடம் பெற்றுள்ளன. இச்சின்னங்கள் பரதவரின் வாழ்விடத்தையும் தொழிலையும் குறிக்கின்றன எனக் கூறலாம். பொலநறுவையில் உள்ள பிராமிக் கல்வெட்டில் ‘பரத’ என்ற பெயருக்கு முன்னால் கப்பல் உருவம் வரையப்பட்டுள்ளது (Paranavitana 1970:280). இது கடலோடு இவனுக்கிருந்த தொடர்பைக் காட்டுகிறது. வட மேற்கிலங்கையில் கிடைத்த இரு கல்வெட்டுகள் ‘பரத’ என்ற கப்பல் தலைவன் அரச தூதுவனாகச் செயற்பட்டதைக் கூறுகின்றன
(Paranavitana 1970:Nos. 1049,1053,1058). இது, நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தில் அதன் தலைவன் அரச தூதுவனாகச் செயல்பட்டான் என இலக்கியங்கள் கூறுவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. அநுராதபுரத்தில் உள்ள கல்வெட்டு ஈழத்தைச் சேர்ந்த பரத (ஈழபரத) என்பவன் தமிழ்நாட்டைச் சேர்ந்த சமண (ஆசீவக) (தமிட சமண) என்பவனுடன் இணைந்து கூட்டாக வர்த்தகத்தில் ஈடுபட்டதைக் கூறுகிறது (Paranavitana 1970 LNo. 94). 5 பரத தொடர்பான நான்கு கல்வெட்டுகளில் நந்திபாதம், சுவஸ்திகா, மத்தளம், அசோக பிராமிக்குரிய ‘ம’ வடிவக் குறியீடு என்பன இடம்பெற்றுள்ளன
(Paranavitana 1970: Nos. 368, 1049,1053, 1055). இக்குறியீடுகள் அச்சுக் குத்தப்பட்ட நாணயங்களிலும் சங்ககாலப் பாண்டிய நாணயங்களிலும் இடம்பெற்றுள்ளன. இவை பரதவரின் வர்த்தக நோக்கத்தைக் காட்டுகின்றன. மகாவம்சம் குதிரை வர்த்தகத்தில் ஈடுபட்ட வணிகத் தலைவனின் பிள்ளைகளான சேனன், குத்திகனே இலங்கையில் ஆட்சிபுரிந்த முதல் தமிழ் மன்னர்கள் எனக் கூறுகிறது.
ஆனால் ஈழத்தை ஆட்சிபுரிந்த சங்ககால தமிழரசர்களாகிய உதியன்,சேரலாதன், குட்டுவன் போன்ற பெயர்களையே தமது தமிழ் மூவேந்தர் பற்றிய குறுகிய அறிவு கொண்டு அவ்வாறு உரைக்கின்றன என்பதை அறிவர்.
செனிவரட்ன இத்தமிழ் மன்னர்களைப் பரதவ குலத்துடன் தொடர்புபடுத்திக் கூறுகிறார் (Seneviratne 1985:53).
சுடநாக
தென்னிலங்கையில் ‘சுடநாக’ என்ற பெயர் பொறித்த நாணயங்கள் எண்ணிக்கையில் அதிகமாகக் கிடைத்துள்ளன.
(படம் 4). இந்நாணயங்களின் முன்புறத்தில் யானை, தொட்டியுடன் கூடிய மரக்கிளை, ஆமை, புலி போன்ற உருவம் போன்ற சின்னங்களும், பின்புறத்தில் சுடநாகஸ், சுடிநாஹ, சுடசமணஹ போன்ற பெயர்களும் இடம்பெற்றுள்ளன (Bopearachchi and Wickremesinghe 1999:57). இதே பெயர்கள் 40 பிராமிக் கல்வெட்டுகளில் வருகின்றன.
பேராசிரியர் எஸ். பரணவிதான ‘சுட’ என்ற பெயர் சமஸ்கிருத ‘சுஸ்ற’, பாளி ‘சூல்’, எலு ‘சுளு’ ஆகிய சொற்கலின் அடியாகப் பிறந்ததென்றார் (Paranavitana 1970:108). ஆனால் அறிஞர்களில் ஒரு சாரார் தமிழில் சோழ என்ற பெயரே பிராகிருதத்தில் ‘சுடா என எழுதப்பட்டதாகக் கருதுகின்றனர். இதற்கு அசோகனது 13 ஆவது பாறைப் பிரகடனத்தில் சோழ நாடு, சோட நாடு எனக் கூறப்பட்டதைச் சான்றாகக் காட்டுகின்றனர். மேலும் பௌத்த நூலாகிய வீரசோழியத்தில் ‘ழ’ வுக்குப் பதிலாக ‘ட’ பயன்படுத்தும் முறை வழக்கில் இருந்துள்ளது.
அண்மையில் சேருவில என்ற இடத்தில் கிடைத்த பிற்கால கல்வெட்டு ஒன்று சுட என்ற பெயரில் உள்ள தமிழன் ஒருவன் பௌத்தச் சங்கத்திற்குக் கொடுத்த தானம் பற்றிக் கூறுகிறது (Seneviratne 1985:52). இலங்கைப் பாகத கல்வெட்டுகள் சிலவற்றில் சுட என்ற பெயர் பட்டப்பெயராக ஆய், மாறா போன்ற தமிழ்ப் பெயர்களுடன் இணைந்து வருகிறது (Paranavitana 1970:108). இச்சான்றுகளை நோக்கும்போது சுட என்ற பெயரைத் தமிழரும் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் சோழ என்ற பெயர் வம்சத்தை அல்லது சோழ நாட்டைக் குறிக்கிறது.
தென்னிலங்கையில் கிடைத்த நாணயங்களில் இது பெயரின் முன்னொட்டுச் சொல்லாக வருவதால் வம்சம் அல்லது பட்டத்தைக் குறித்திருக்கலாம். ஆனால் கல்வெட்டுகளில் இது தனிமனிதப் பெயராகவும் இடம்பெற்றுள்ளது.
நாணயங்களில் சுட என்ற பெயருடன் இணைந்து நாஹ (யேபய, யோய), நாக (யேமய), நாஹஸ (யோயளய) போன்ற பெயர்கள் வருகின்றன
(படம் 5). இதையொத்த பெயர்கள் பட்டங்களுடனும் தனித்தும் 80 கல்வெட்டுகளில் வருகின்றன. இப்பெயர் வடமொழி சார்ந்ததென ஒரு சாரார் வாதிடும்போது பரோ, குமார் சட்டர்ஜி போன்றோர் தமிழ் மொழி சார்ந்ததெனக் கூறுகின்றனர் (Veluppillai 1980:14). இதன் மூலமொழி எதுவாக இருப்பினும் தென்னாசியாவில் பல்வேறு இன மக்களிடையே ஆட் பெயராகவும் இடப்பெயராகவும் இருந்ததற்கும், இருப்பதற்கும் சான்றுகள் உண்டு. பாளி நூல்கள் இலங்கையில் வட இந்தியக் குடியேற்றம் நிகழுமுன் இங்கு வாழ்ந்தவர்களை நாகர் (நாக) எனக் கூறுகிறது. பாகத கல்வெட்டுகளில் இதைத் தனிமனிதப் பெயராகவும் குலம் சார்ந்த (நாக குலம்) பெயராகவும் குறிப்பிட்டுள்ளனர்
(Paranavitana 1970: No. 106).
சங்க காலத்தில் நாக, நாகன் போன்ற பெயர்கள் கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் குறுநில மன்னர்களுடனும் புலவர்களுடனும் தொடர்புடையனவாக உள்ளன. சில இடப் பெயராகவும் ஊர்ப் பெயராகவும் வருகின்றன.
இலங்கையில் நாக என்ற பெயரில் அரசர்கள், சிற்றரசர்கள் ஆட்சி புரிந்ததைப் பாளி இலக்கியங்களும் (Mahavamsa, xxv : 45) பிராமிக் கல்வெட்டுகளும் உறுதிப்படுத்துகின்றன.
கி.பி முதல் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்று அங்கிருந்து படைகளுடன் வந்த இளநாக, அநுராதபுரத்தில் ஆறு ஆண்டுகள் (கி.பி 38 – 44) ஆட்சிபுரிந்தான். இவனது அரசி ஒரு தமிழ்ப் பெண்ணாவாள் (Mahavamsa xxv : 45). பழந்தமிழக வேளிர்களாகிய நாகர் தமிழர் அன்றோ அன்று வேறொரு மொழி ஈழத்தில் இருந்ததோ அவன் தமிழ் பெண்ணை மணந்ததை பிற்கால புராணங்கள் எவ்வாறாக விளிப்பதை காணுங்கள்.
வட இலங்கையில் பெரிய புளியங்குளத்தில் உள்ள நான்கு கல்வெட்டுகள் நாகச் சிற்றரசு பற்றிக் கூறுகின்றன. வடமத்திய மாகாணத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று நாக நகரைச் சேர்ந்த ஒருவனது தானம் பற்றிக் கூறுகிறது.
இதே பெயர் தென்னிலங்கையில் கிடைத்த நாணயத்திலும் வருகிறது (Karunaratne VII:82). இதே பெயர் தென்னிலங்கையில் கிடைத்த நாணயத்திலும் வருகிறது.
பாளி இலக்கியங்கள் அநுராதபுரத்திற்கு வடக்கில் உள்ள தமிழர் பிராந்தியத்தை நாகதீப எனக் கூறுகின்றன (Mahavamsa 1:54). இதை யாழ்ப்பாணம் வல்லிபுரத்தில் கிடைத்த கி.பி 4 ஆம் நூற்றாண்டுக்கு பிந்தைய பொற்சாசனமும் உறுதிப்படுத்துகிறது.
இதனை கி.பி 4 பிந்தைய என்பதற்கான காரணம் வல்லிபுரப் பொற்சாசனத்தின் எழுத்து வடிவங்களை ஆராய்ந்த இந்திய தொல்லியராளரும், தொல்லெழுத்துக் கலைஞருமான பேராசிரியர் ஏ. எச். டானி, ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் வெளியிட்ட ‘இந்திய தொல்லெழுத்துக்கலை’ (Indian Paleaography) என்ற அவரது ஆய்வு நூலில், வல்லிபுரப் பொற்சாசனத்தில் காணப்படும் எழுத்துக்கள் ஆந்திராவில் அமராவதி, நாகர்ஜுனா கொண்டா ஆகிய மையங்களில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியிலும், நான்காம் நூற்றாண்டிலும் உபயோகிக்கப்பட்ட இக்ஷ்வாகு வகை எழுத்து வடிவங்கள் எனக் கூறியுள்ளார்.
இச் சாசனத்தில் காணப்படும் அ, ஐ, உ, க, ம, ய, ற, ல, வ ஆகிய எழுத்துக்கள் இக்ஷ்வாகு வகை எழுத்துக்களே ஆகும். வல்லிபுரப் பொற்சாசனம் பற்றிய அவரது மதிப்பீடு வருமாறு:
“Of these, the gold plate inscription has an individual character of its own. In this case the lower curves of the verticals are over-emphasised and the medial i has a sharp curve to the left. The letters a, i, u, ka, ga, ma, ya, ra, la and va are all Ikshvaku forms.… In the inscription we have definite evidence of the school of Amarāvati and Nagarjunakonda writing reaching Ceylon, probably in the latter half of the third century A.D. (Dani, A.H. 1963: 221)
எனவே இவை களப்பிரர் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
இப்பெயரில் காணக்கூடிய இன்னொரு சிறப்பு, சில கல்வெட்டுகளிலும் நாணயங்களிலும் வட மொழி ‘ஹு’வுக்கு பதிலாகச் சில இடங்களில் தமிழ் ‘க’ பயன்படுத்தப்பட்டுள்ளதாகும். இதற்குத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கல்வெட்டுகளை எழுதியது காரணம் எனப் பேராசிரியர் பரணவிதானா கூறுகிறார் (Paranavitana 1983:112). இப்பின்னணியில் சுடநாக என்ற பெயர் பொறித்த நாணயங்களைத் தமிழருக்குரியதெனக் கூறலாம்.
ஆதியில் நாக என்ற பெயர் இலங்கையில் பல இன மக்களிடையே புழக்கத்தில் இருந்தாலும் இன்று அப்பெயர் தமிழர்களிடம் மட்டும் வழக்கில் இருப்பதை இங்கு நினைவுகூரலாம்.
மஜிமஹ
இங்கு கிடைத்த நாணயங்களுள் ‘மஜிமக’ என்ற பெயர் பொறித்த நாணயம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
இதன் முன்புறத்தில் இடப்புறம் நோக்கி நிற்கும் யானையும், பின் புறத்தில் விளிம்பைச் சுற்றி ஒரு வட்டமும், வட்டத்திற்குள் சிறு புள்ளிகளும், இரண்டாவது உள்வட்டத்திற்குள் பிராமி எழுத்தில் மஜிமஹ (Majhimaha) என்ற பெயரும் (படம் 6) இடம் பெற்றுள்ளன (Bopearachchi and Wickremesinghe 1999:52). இதையொத்த பெயர் இந்நாணயம் கண்டெடுக்கப்பட்ட அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 16 கல்வெட்டுகளில் வருகின்றன. இக்கல்வெட்டுகள் மஜிம மகாராஜா வழிவந்த பத்து சகோதரர் ஆட்சி பற்றிக் கூறுகின்றன.
பாளியில் மஜிம மகாராஜா என்றால் மீன் அரசன் என்பது பொருள். இதையுறுதிப்படுத்தும் வகையில் இக் கல்வெட்டுகளில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது (Paranavitana 1970: Nos556-69). ஜி.சி. மெண்டிஸ் என்ற புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் மீன் சின்னம் பொறித்த கல்வெட்டுக்குரியவர்கள் ஆதியில் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழர்களின் வழித்தோன்றல் எனவும், இவர்கள் சிங்கள மன்னர்களின் அதிகாரத்திற்கு உட்படாது சுதந்திரமாக ஆட்சி புரிந்தவர்கள் எனவும் கூறியுள்ளார்.
(Mendis 1956: 575). இதனைக் கேட்டுச் சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. சிரித்து வயிறு வலித்தால் நாம் பொறுப்பல்ல. பண்டு தொட்டு சேரர்களுடைய ஆட்சி ஈழத்தில் கி.மு 347 இல் உருவாவதற்கு முன்பாக ஈழத்தில் இருந்த இருந்த தொல்பழங்கால அரசுகள் பாண்டிய அரசுகளே. அவர்களுடைய சந்ததியினரை இது குறிப்பிடுகின்றது.
இந்த பாண்டிய அரசர்கள் தமக்கிடையே நிகழ்ந்த போரில் அழிந்துவிட்டன. அப்போரில் ஈடுபட்ட உதியஞ்சேரலாதன் அந்த போரில் ஈடுபட்ட இருதரப்பினருக்கும் பெருஞ்சோறு அளித்தான். பெருஞ்சோறு என்பது பேருக்குச் செல்வதற்கு முன்பாகவும் ,வென்ற பின்பாகவும் அளிக்கப்பட்டதாக சங்ககால பாடல்கள் கூறுகின்றன.
அந்த போரின் இறுதியில் உதியஞ்சேரலாதனுடைய ஆட்சிபுரிந்த மாந்தை தொடக்கம் கிழக்கு பிராந்திய ஈழமும் அவன் வசமாயிற்று இதனை முரஞ்சியூர் முடிநாகராயர் " ஈரைம்பதின்மருக்கு மிகுபதம் வரையாவது கொடுத்தோய், என்கிறார்.
இக்கல்வெட்டுகளின் காலம் கி.மு 4 ஆம் நூற்றாண்டுகளுக்குரியவை. நாணயத்தில் வரும் ‘மஜிமஹு’ என்ற பெயரும் இதே காலகட்டத்துக்குரியதென்பதை அதன் எழுத்தமைதி கொண்டு கணிப்பிட முடிகிறது.
மேற்கூறப்பட்ட நாணயங்களில் இருந்து பொதுவான சில முடிவுகளுக்கு வரக்கூடியதாக இருக்கிறது. இந்நாணயங்கள் கிடைத்த அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள திசமாறகம (இங்குதான் அகுறுகொட என்ற இடம் உள்ளது) பண்டைய வர்த்தகத் துறைமுகங்கள் அமைந்த பிரதேசங்களில் ஒன்றாகும்.
இதுவே பண்டைய பாண்டியர்களுடைய கோநகராகும்.இப் பிரதேசத்திற்கும் தென்னிந்தியாவுக்கும்,மேற்கில் எகிப்திய கிரேக்க தேசங்களுக்கும் ,கிழக்கை வாசனைத் திரவியங்கள் நிரம்பிய யாவா,சுமத்திரா போன்றவற்றுக்கும் இடையே வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து நெருக்கமான வர்த்தகப் பண்பாட்டுத் தொடர்புகள் இருந்துள்ளன.
வரலாற்றுதய காலத்தில் (Protohistory) தென்னிந்தியா, குறிப்பாக ஆந்திரம், தமிழகம் போன்ற இடங்களில் இருந்து விலையுயர்ந்த கற்கள், மணிகள், மட்பாண்டங்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்பதை அண்மையில் இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன (Bope- arachchi and Wickremesinghe 1999:37-9).
இங்கு வாழ்ந்த பெருங்கற்கால மக்களில் பலர் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆசீவக மதத்திற்கு மாறினர் என்பதை இங்குக் கிடைத்த பாகதக் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.
இலங்கையில் அதிகக் கல்வெட்டுகள் கிடைத்த மாவட்டங்களுள் அம்பாந்தோட்டை மூன்றாவதாகும். . மேலும் இக் கல்வெட்டுகளில் சங்க இலக்கியத்தோடு தொடர்புபடுத்தக்கூடிய வேள், பருமக (பெருமகன்), உதி (உதியன்), பரத (பரதவர்), நாக, சுட, சுள் (சோழ) போன்ற தமிழ்ப் பெயர்கள்
வருகின்றன
((Paranavitana) 1970: Nos. 647, 672, 578, 709, 706, 634, 643, 1179). இவை இப் பிராந்தியத்தோடு தமிழ் மக்களுக்குரிய உறவைக் காட்டுகின்றன.
இதற்கு மேற்கூறப்பட்ட நாணயங்கள் மேலும் சான்றுகளாகும்.6
மேலே சுட்டப்பட்ட முதலிரு நாணயங்களிலும் உள்ள பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இப்பெயர்களில் உள்ள நாணயங்கள் இலங்கையின் மற்றைய இடங்களிலோ அல்லது இந்தியாவிலோ இதுவரை கிடைக்கவில்லை.
இதனால் இந்நாணயங்களை வெளியிட்டவர்களை இங்கு வாழ்ந்த தமிழ் பாண்டியரகளே.இவர்கள் ஆசீவக சங்கத்திற்காக மக்களும் மன்னரும் நாணயங்களைத் தானமாகக் கொடுத்ததற்குச் சான்றுகள் உண்டு.
உசாத்துணை நூல்கள்
• சுப்பராயலு, ஏ. சண்முகம், ப. 1999, ‘அநுராதபுரத்தில் ஒரு தமிழ்க் கல்வெட்டு’, ஆவணம், இதழ் 10, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 11-2.
• புஸ்பரட்ணம், ப. 1993, பூநகரி தொல்பொருளாய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, யாழ்ப்பாணம்.
• புஸ்பரட்ணம், ப. 1998, ‘வடஇலங்கையில் கிடைத்த லக்ஷ்மி நாணயங்கள் மீள்பரிசீலனை’, 12-7-1998 இல் புதுக்கோட்டையில் நடந்த தமிழகத் தொல்லியற் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை (பிரசுரிக்கப்படாதது), 1-13.
• புஸ்பரட்ணம், ப. 1999, ‘பூநகரியிற் கிடைத்த அரிய சங்ககால நாணயங்கள்’, ஆவணம், தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 9:114-20.
• புஸ்பரட்ணம், ப. 1999, ‘வடஇலங்கையில் சங்ககால நாணயங்கள் – மீள் பரிசீலனை’, தொல்லியல் நோக்கில் தமிழகம், தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை, 51-9.
• பெர்ணான்டோ, ஈ. பி. 1969, ‘சிங்கள நெடுங்கணக்கின் தொடக்கநிலை’, இலங்கையிற் கல்வி நூற்றாண்டு மலர், பகுதி 1, கொழும்பு, 21-8.
• Ariyasinghe, A., 1965 ‘Sinhalese Palaeography’ unpublished Ph.D. Thesis, University of London.
• Burrow,T. and Emeneau, M. B. 1968, Dravidian Etymological Dictionary Supplement, Oxford.
• Bopearchchi, O. and Wickremesinghe W. 1999, Ruhuna-An Ancient Civilisation Revisited, with the Collaboration of The French Mission of Archaeological Co-operation in Sri Lanka.
• Codrington, H. W. 1924, Ceylon coins and Currency, Memories of the Colombo Museum, No. 3, Colombo.
• Karunaratne, S. 1962, ‘New clue to an Ancient Script’, Sunday Observer, 8.26. 1926, Colombo.
• Krishnamurthy, R. 1997, Sangam Age Tamil Coins, Chennai.
• Goonetilleke, S. 1980, Sinhalisation-The Origins’, Lanka Guardian, Vol 3. No. 1, 22-9.
• Mahadevan, I. 1966, Corpus of the Tamil Brahmi Inscriptions, Reprint of the Seminar on Inscriptions, Chennai.
• Mahavamsa, 1960, (e.d) Geiger, W., Colombo.
• Maloney, C. 1969, ‘The paratavar: 2000 Years of Culture Dyne – mics of a Tamil cast’, Man In India Vol 49. No. 1,224-40.
• Mendis, C. 1957, Comprehensive History of India Vol. II (e. d), Nilakanta Sastri, K. A.
• Mendis, G. C. 1955, ‘The Vijaya Legend’, Paranavitana Felicitation Volume (e.d), Jeyawickrama, M. A. Colombo. 263-79.
• Paranavitana, S. 1970, Inscriptions of Ceylon, Vol.1, The Department of Archaeology, Ceylon.
• Paranavitana, S. 1983, Inscriptions of Ceylon, vol. 11, The Department of Archaeology, Sri Lanka.
• Rajan, K. 1994, Archaeology of Tamil Nadu, Book India Publishing Co, Delhi.
• Seneviratne, S. 1984, ‘The Archaeology of the Megalithic-Black and redware complex in Sri Lanka’, Ancient Ceylon, Vol 5, 237-306.
• Seneviratne, S. 1985, The Barata-A case study of Community Integration in Early Historic Sri Lanka, Festschrift 1985, James Thevathasan Ratnam Felicitation volume, (e.d) Amarasinghe, A. R. B. and Suumanasekara Banda, S. J. Ratmalana, 49-5.
• Sitrampalam, S. K. 1980, Megalithic culture of Sri Lanka, unpublished Ph. D. Thesis, University of Poona.
• Veluppillai, A. 1980, Tamil Influence in Ancient Sri Lanka with Special Reference to Early Brahmi Inscriptions Journal of Tamil Studies, vol. 17:6-19.
• Zeunner, F.E. and Allchin, B. 1956, ‘The Microlithic sites of Tin-navely District, Madras State’, Ancient India, No. 12, 4-20.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக