நிதி சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஜனநாயகக் கட்சியினரின் பழைய சுகாதார மானியத்திட்டங்கள் உட்பட சில கோரிக்கைகளை ஏற்பதற்கான இணக்கப்பாடுகளை குடியரசு கட்சி வௌியிடாத நிலையில் இந்த முடக்கம் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அமெரிக்காவில் மத்திய (Federal) அரச நிர்வாகம் முடங்கியுள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் சம்பளமின்றி விடுப்பில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற அரச திட்டங்கள் மற்றும் சேவைகள் மூடப்படும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க செனட் சபையால், அரசாங்க நிதி ஒதுக்கீட்டைப் பற்றிய சட்டமூலத்தில் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. எனவே, அந்த சட்டமூலம் நிறைவேறவில்லை.
2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்க அரசாங்கப் பணிகள் முடங்குவது இதுவே முதல் முறையாகும்.
செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை (அமெரிக்க பாராளுமன்றத்தின் இரண்டு அவைகள்) அந்த நிதி சட்டமூலத்தில் உடன்படவில்லை என்றால், இவ்வாறு நிர்வாக முடக்கல் ஏற்படும்.
இதனிடையே, ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் இந்த முடக்கத்திற்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
குடியரசுக் கட்சியினர் பாராளுமன்றத்தை கட்டுப்படுத்துகிறார்கள், ஆனால் செனட்டில் 60 வாக்குகள் இல்லாததால் எந்தவொரு வரவு செலவு திட்ட சட்டமூலத்தையும் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக