இன்டர்போல் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள 'மிதிகம சூட்டி' என்பவர் கடந்த ஜூன் மாதம் ஓமான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த போதிலும், இந்த கொலையில் எவ்வாறு தொடர்புபட்டிருப்பார் என்பதில் காவல்துறையினருக்கு பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.
ஓமான் காவலில் இருந்தபோது இந்தக் கொலைச் சதித்திட்டத்திற்கு அவர் பயன்படுத்திய பல தொலைபேசி எண்கள் பற்றிய தகவல்களும் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள நிலையில் இன்டர்போல் மூலம் குறித்த தொலைப்பேசி எண்களை ஓமானுக்கு அனுப்பி மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெலிகம பிரதேச சபைத் தலைவரை கொலை செய்ய துபாயில் உள்ள 'ரஜித' மற்றும் 'துபாய் லொக்கா' என அழைக்கப்படும் இரண்டு நபர்கள் துப்பாக்கிதாரியை வழிநடத்தியுள்ளதாக விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
அவர்கள் பல கையடக்க தொலைபேசி எண்களை பயன்படுத்தி, துப்பாக்கிதாரி கொலையை எவ்வாறு செய்வது, தப்பிக்கும் வழிகள் மற்றும் மறைந்துக் கொள்ள வேண்டிய இடங்கள் தொடர்பில் படிப்படியாக அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
கொலை இடம்பெற்ற தினத்தன்று காலையில், துபாயிலிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தலின்படி, துப்பாக்கிதாரி வெலிகமவில் உள்ள பாலமொன்றின் அருகே சென்று அடையாளம் தெரியாத நபரொருவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை பெற்றுக்கொண்டுள்ளார்.பத்து நிமிடங்களுக்குள், அவர் பிரதேச சபைக்குச் சென்று லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டு துப்பாக்கியை பெற்றுக் கொண்ட இடத்திலேயே மீள ஒப்படைத்துள்ளார்.
இவ்விடயம் கொலை பல நாட்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டு மேற்கொண்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த 'ரஜித' மற்றும் 'துபாய் லொக்கா' ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் குற்றங்களைச் செய்யும் முக்கிய பாதாள உலகத் தலைவர்களின் பட்டியலில் இன்னும் பதிவு செய்யப்படாத நபர்கள் என்பது புலனாய்வுத் துறைகளின் அவதானத்தை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக