செவ்வாய், 9 செப்டம்பர், 2025

தோழர் மாவோவின் நினைவு தினம் இன்று!!

மார்க்சியத்தின் அடிப்படைகளை இறுகப் பற்றிக் கொண்டு ஜனநாயக மத்தியத்துவம், விமர்சனம் – சுயவிமர்சனம் ஆகிய பெரும் ஆயுதங்களைக் கொண்டு இடது, வலது சந்தர்ப்பவாதங்களுக்கு எதிராகப் போராடி புரட்சியை சாதிக்கவல்ல எஃகுறுதிமிக்க ஒரு கட்சியைக் கட்டியமைத்தார் லெனின். விளைவு – ரசியாவில் சோசலிசப் புரட்சி நடந்தது. 

உலகின் முதல் சோசலிச நாடான ரசியா, தோழர் ஸ்டாலினின் தலைமையில் ஏகாதிபத்தியங்களின் நேரடியான மற்றும் மறைமுக தாக்குதல்களை ஒருபக்கம் எதிர்கொண்டு, மறுபுறத்தில் கட்சிக்குள் எழுந்த திருத்தல்வாத, வலது சந்தர்ப்பவாத சித்தாந்தங்களையும் எதிர்கொண்டு அவற்றுக்கு எதிராகப் போராடியது. 

இந்தப் போராட்டங்களின் அனுபவங்களையும், மார்க்சிய லெனினிய சிந்தனைகளையும் வரித்துக் கொண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியை போல்ஷ்விக் மயமாகக் கட்டியமைத்தார் தோழர் மாவோ. 

சீனாவின் சமூகப் பொருளாதார அரசியல் பின்னணியில், சீன மக்களின் பண்பாட்டு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு கட்சி ஸ்தாபனத்தில் வரும் பிரச்சினைகள், கட்சிக்குள் நிலவும் தவறான போக்குகள், ஊழியர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையிலான சிக்கல்கள் ஆகியவற்றை பகுத்தாய்ந்து அவற்றைக் கலைவதற்கான வழிமுறைகளை தோழர் மாவோ முன் வைத்தார்.

கட்சியில் நிகழும் பிளவுகள், குழப்பங்கள் உள்ளிட்ட எதுவும் ஒரிரு நாட்களில் தோன்றிவிடுவதில்லை. அவை வலது இடது சந்தர்ப்பவாதப் போக்கு மெது மெதுவாக கட்சிக்குள் வேரூன்றி வளர்ந்து, ஒரு சமயத்தில் வெடிக்கும்போதுதான் கட்சியில் பிளவுகளும் குழப்பங்களும் விளைகின்றன. அதனைத் தவிர்ப்பதற்கு இருக்கும் ஒரே வழிமுறை எப்போதும் கறாராக தாராளவாதத்திற்கு எதிராக போர் தொடுப்பதும், விமர்சன சுயவிமர்சன முறையைப் பின்பற்றுவதும்தான்! 

மேல்கமிட்டியோ, கீழ் கமிட்டியோ எதுவாக இருந்தாலும், மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் இருந்து தோழர்களின் திசைவிலகலைக் கண்டதும், அதனோடு எக்காரணம் கொண்டும் சமரசம் மேற்கொள்ளாமல், அதற்கு எதிராகக் கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதை பின்வரும் கட்டுரையில் விவரிக்கிறார் தோழர் மாவோ !நாம் ஊக்கமான சித்தாந்தப் போராட்டத்துக்காக நிற்கிறோம். 

காரணம், அது கட்சிக்குள்ளும் புரட்சிகர ஸ்தாபனங்களுக்குள்ளும் ஐக்கியத்தை உருவாக்கவும் அவற்றைப் போராடத் தகுதியுள்ளவைகளாக்கவுமான ஆயுதமாக மாற்றவும் உதவுகிறது. ஒவ்வொரு கம்யூனிஸ்டும், புரட்சிவாதியும் இந்த ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் தாராளவாதம், சித்தாந்தப் போராட்டத்தை மறுத்து, கோட்பாடற்ற சமாதானத்துக்காக நிற்கிறது. இதன் விளைவாக உலுத்துப் போன பண்பற்ற மனோபாவம் தோன்றி, கட்சியிலும் புரட்சிகர ஸ்தாபனங்களிலும் உள்ள சில அமைப்புகளையும் தனி நபர்களையும் அரசியல் ரீதியில் சீரழிக்கிறது. 

தாராளவாதம், பல்வேறு வழிகளில் வெளிப்படுகின்றது. ஒருவர் தவறிழைத்துவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தும், நீண்டகாலம் பழகியவர், சக ஊரவர், சக மாணவர், நெருங்கிய நண்பர், அன்பிற்குரியவர், பழைய சக ஊழியர் அல்லது பழைய கீழ்ப்பணியாளர் என்ற காரணத்தால் அவருடன் கோட்பாடு ரீதியில் வாதிடுவதற்கு மாறாக, சமாதானத்துக்காகவும் நட்புக்காகவும் விஷயங்களை நழுவவிடுவது அல்லது, சுற்றிலும் நெருக்கம் நீடிக்க வேண்டி முழுமையான தீர்வு காண்பதற்கு பதில் லேசாகத் தொட்டுவிடுவது இதன் விளைவாக ஸ்தாபனத்துக்கும் தனி நபருக்கும் தீங்கு விளைவிக்கப்படுகின்றது.

இது தாராளவாதத்தின் முதலாவது வகை. ஸ்தாபனத்துக்குத் தனது யோசனைகளை ஊக்கமாக முன் வைப்பதற்குப் பதிலாக முதுகுக்குப் பின் பொறுப்பற்ற விமர்சனத்தில் ஈடுபடுவது நபர்களது முகங்களுக்கும் முன் ஒன்றும் சொல்லாமல், அவர்களது முதுகுகளுக்குப் பின் வம்பளப்பது, கூட்டத்தில் ஒன்றும் பேசாமல் அது முடிந்த பின் வம்பளப்பது, கூட்டு வாழ்வுக் கோட்பாடுகளைச் சற்றும் பொருட்படுத்தாமல், தனது சொந்த விருப்பப்படி நடப்பது – இது இரண்டாவது வகை. 

தாராளவாதத்திற்கு எதிராக அணிதிரண்டு அதனை எதிர்த்து முறியடிப்போம் ! தோழர் மாவோவின் சிந்தனையை எங்கும் எப்போதும் உயர்த்திப்பிடிப்போம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks