அவர் தன்னை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மட்டுமின்றி, வலுவான ராஜதந்திரியாகவும் நிறுவிக்கொள்ள விரும்புகிறார்.
டிரம்பின் வரிக்குவரி யுத்தம் உலகம் முழுவதும் பொருளாதார உறவுகளை சீர்குலைத்து வரும் நிலையில், சீனா ஒரு நிலையான வர்த்தகப் பங்காளி என்று அவர் முன்வைக்கிறார்.
யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதில் அமெரிக்க அதிபர் வெகு தொலைவில் உள்ளார்.
இந்நிலையில், ஷி ஜின்பிங் புதினை பெய்ஜிங்கிற்கு வரவேற்கத் தயாராகி வருகிறார்.திடீரென அறிவிக்கப்பட்ட கிம் வருகையும் முக்கியத்துவம் குறைந்தது அல்ல. கடந்த வாரம் தென் கொரிய அதிபருடனான சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்திக்க விரும்புவதாகக் கூறினார்.உலகில் தனிமைப்படுத்தப்பட்ட சர்வாதிகாரியுடனான டிரம்பின் முந்தைய ராஜதந்திர முயற்சிகளில் எந்த முடிவும் எட்டவில்லை.
உலக கவனத்தை ஈர்த்த இரண்டு உச்சிமாநாடுகள் நடந்தாலும், எந்த உறுதியான முன்னேற்றமும் அடையப்படவில்லை. இப்போது டிரம்ப் மீண்டும் முயற்சி செய்ய விரும்புவதாக சமிக்ஞை காட்டுகிறார்.
இதற்கிடையில், இந்த முழு ஆட்டத்தையும் தீர்மானிக்கும் சக்தி தன்னிடம்தான் இருப்பதாக சீன அதிபர் சமிக்ஞை செய்கிகிறார். கிம், புதின் இருவரிடமும் அவருக்கு உள்ள செல்வாக்கு ஒரு வரம்பிற்குட்பட்டது என்றாலும், எந்தவொரு ஒப்பந்தம் இறுதியாவதிலும் அவரின் முக்கியத்துவம் நிரூபணமாகலாம்.
செப்டம்பர் 3ஆம் தேதி அணிவகுப்பில் சீனா தன்னுடைய ராணுவ வலிமையை வெளிக்காட்டும். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு நடக்கிறது. அப்போதுதான் சீனாவின் சில பகுதிகளில் ஜப்பானின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.
ஆனால் இந்த கொண்டாட்டத்தை ஷி ஜின்பிங் வேறு ஏதோவொன்றைக் வெளிக்காட்டுவதற்காக பயன்படுத்துகிறார். இந்த நிகழ்வு நடக்கும் நேரமும் முக்கியமானது.
அக்டோபர் இறுதியில் டிரம்ப் அந்த பிராந்தியத்திற்கு வரக்கூடும் என்றும், அப்போது ஷி ஜின்பிங்கைச் சந்திக்க அவர் தயாராக இருப்பதாகவும் வெள்ளை மாளிகை கூறியிருந்தது.
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் வரி பற்றிய ஒப்பந்தம், அமெரிக்காவில் டிக்டாக் விற்பனை, யுக்ரேன் போர் நிறுத்தம் அல்லது தீர்வுக்கு புதினை சம்மதிக்க வைக்க சீனாவால் முடியுமா என்ற கேள்வி உட்பட பல பிரச்னைகள் பற்றி அவர்கள் விவாதிக்கலாம்.
இப்போது ஷி ஜின்பிங் கிம் மற்றும் புதின் இருவரையும் சந்திப்பதன் மூலம், தாம் ஓரங்கட்டப்பட்டு விட்டதாக டிரம்புடன் பேசுகையில் அவர் உணர மாட்டார். உண்மையில், இரு தலைவர்களுடனும் அவருக்கு நெருங்கிய உறவு இருப்பதால், அமெரிக்க அதிபரிடம் இல்லாத பல தகவல்கள் அவரிடம் இருக்கக்கூடும்.
ரஷ்யா, வட கொரியா இரண்டும் மேற்கத்திய உலகின் பார்வையில் தனிமைப்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகின்றன. புதினை விட கிம் அவரது ஆயுதத் திட்டத்தின் காரணமாக நீண்ட காலமாகவே மேற்கு நாடுகளின் இலக்காக ஆனவர். யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு அவர் ஆதரவு அளித்த பின்னர் அவருக்கு எதிரான கண்டனங்கள் மீண்டும் கூடுதலாகின.
பிபிசி இணையத்தளசெய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக