கூடுதல் இழப்பீடு கோரி நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதல்வரிடம் கலந்து பேசிய பின், கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கமிட்டி அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழக அமைச்சர் எ.வ.வேலு, தெரிவித்துள்ளார்.
கோவை, மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகம், ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்புடையது.
இதிலிருந்தே அண்ணா பல்கலைக்கழகத்தின் கோவை வளாகத்துக்கு கடந்த 2010 ஆம் ஆண்டில் 130 ஏக்கர் வழங்கப்பட்டது. சட்டக்கல்லுாரி மற்றும் உயிரி தொழில்நுட்ப பூங்கா ஆகியவற்றுக்கும் இடம் தரப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 'டெக்சிட்டி' அமைக்கவும் இங்கு 321 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, மாஸ்டர் பிளான் தயாரிக்கத் தேவையான நிறுவனத்தைத் தேர்வு செய்ய டெண்டரும் விடப்பட்டது.
ஆனால் இந்த பல்கலைக்கழகத்திற்கு தங்களின் விவசாய நிலங்களைக் கொடுத்த விவசாயிகளின் குடும்பங்கள் 45 ஆண்டுகளாகியும் இன்று வரை போதிய இழப்பீடு கிடைக்கவில்லை என கூறுகின்றனர்.கடந்த 1978 ஆம் ஆண்டில், தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது, கோவையை தலைமையிடமாகக் கொண்டு பாரதியார் பல்கலைக்கழகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக மருதமலை அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டாய நிலமெடுப்புச் சட்டத்தின்படி, 925.84 ஏக்கர் பட்டா நிலங்களை எடுக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அரசு புறம்போக்கு நிலம் மற்றும் 925 ஏக்கர் பட்டா நிலம் உட்பட இந்த பல்கலைக்கழகத்துக்காக கையகப்படுத்தப்பட்ட 1072 ஏக்கர் நிலத்துக்கு, அப்போது அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை, ரூ.86 லட்சம். நீதிமன்றத்தில் அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் 799.67 ஏக்கர் நிலம் விவசாய நிலமாக இருந்துள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 1978 ஆம் ஆண்டிலிருந்து 1984 ஆம் ஆண்டு வரையிலும் ஒரு ஏக்கர் துவங்கி, 5 ஏக்கர் வரையிலும் ஒவ்வொருவரிடமிருந்தும் நிலம் எடுக்கப்பட்டுள்ளது. அன்றைய நிலையில் 925 ஏக்கர் நிலத்துக்கு 300 குடும்பங்கள் உரிமையாளர்களாக இருந்ததாகவும், இப்போது அந்த எண்ணிக்கை, 2 தலைமுறை வாரிசுகளின் அடிப்படையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களாகி விட்டதாகச் சொல்கிறார்,
பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் இழந்தோர் கூட்டமைப்பின் தலைவர் கணேசன்.''அப்போது ஒரு ஏக்கருக்கு ரூ.3392 என்று குறைந்தபட்ச மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. வட்டியுடன் அது ரூ.5100 ஆக உயர்ந்தது. அடுத்த கட்டமாக நிலமெடுத்தபோது அது ரூ.8 ஆயிரமாகவும், இறுதியாக எடுத்தபோது ரூ.10 ஆயிரமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
அப்போதே அது மிகக்குறைவான தொகை என்பதால் ஆட்சேபனையின் பேரில் பணம் பெற்றுக்கொள்கிறேன் என்று எழுதிக்கொடுத்தே அனைவரும் பணத்தைப் பெற்றுக்கொண்டனர்.'' என்று பிபிசி தமிழிடம் விளக்கினார் கணேசன்.
ஆட்சேபத்தின்பேரில் பெற்றுக்கொண்டதால், விவசாயிகள் பலரும் சேர்ந்து கோவை நீதிமன்றத்தில் 19 வழக்குகள் தொடுத்தனர்.
கடந்த 2007 ஆம் ஆண்டில் தீர்ப்பு வந்தது. மொத்தம் 799 ஏக்கர் விவசாய நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு 160 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமென்று கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தொகை, வட்டியுடன் சேர்த்து 2012 அக்டோபர் 31 தேதியின்படி, ரூ.202.24 கோடி என்று கோவை மாவட்ட ஆட்சியர் எழுதிய நினைவூட்டல் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக