வியாழன், 14 ஆகஸ்ட், 2025

சென்னையில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் கைது!!

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று இரவில் அவர்களை காவல்துறையினர் கைது செய்து தென் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர். 

கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் கீழ்கட்டளை, நந்தம்பாக்கம், ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடுவாங்கரை, பரங்கிமலை என, பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களில் அடைக்கப்பட்டனர். ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், போராட்டக்காரர்களை கைது செய்து பேருந்துகளில் அழைத்துச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.


போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதற்கு தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.கைது நடவடிக்கையின்போது இளைஞர்கள் இருவரை பேருந்துக்குள் போலீஸார் தாக்கும் வீடியோவும் வெளியானது. மேலும், பெண் ஒருவர் பேருந்துக்குள் மயங்கி விழுந்திருப்பதையும் அவருக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்க வேண்டும் என மற்ற தூய்மை பணியாளர்கள் போலீஸாரிடம் கோருவதையும் காண முடிந்தது. எனினும் இந்த காணொளிகளை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. வேளச்சேரி சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சுரேஷ் எனும் தூய்மை பணியாளர் பிபிசியிடம் பேசுகையில், "பெண்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். 

இரண்டு பெண்களுக்கு இதில் காயம் ஏற்பட்டது. எங்கே அழைத்துச் செல்கிறோம் என்பதை கூட போலீஸார் கூறவில்லை. எங்களுக்கு உணவு கொடுப்பதாக கூறினர், ஆனால் நாங்கள் ஏற்க மறுத்துவிட்டோம்" என்றார்.கைதாக மறுத்து சாலைமறியல் போராட்டம் நடத்தியவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. 

பின்னர் அவர்களும் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர். போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டது குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் பாரதி, "பலரும் போலீஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர், பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்." என்றார். 

கைது செய்யப்படும்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிலர், குறிப்பாக பெண்கள் மயக்கமடைந்ததை காணொளிகள் வாயிலாக பார்க்க முடிந்தது. நள்ளிரவு 12 மணியளவில் கைது நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். "இரவு நேரத்தில் கைது செய்ய வேண்டும் என காவல்துறை நினைத்ததாக" அவர் கூறினார். தூய்மைப் பணிகளை தனியார் மயத்துக்கு அளிப்பதற்கு எதிராக போராட்டம் தொடரும் என அவர் கூறினார். 

முன்னதாக, தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது சென்னை மாநகராட்சி, லேபர் யூனியன், ராம்கி நிறுவனம் என 3 தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

மேலும் வரும் 31ஆம் தேதி வரை பணியில் வந்து சேரும் தூய்மை பணியாளர்களுக்கு கட்டாய பணி வழங்கப்படும் என நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது ராம்கி நிறுவனம். தூய்மை பணியாளர்கள் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் அவர்களை அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks