மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 1-ஆம் தேதி அன்று நடைபெற்ற சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், அம்மாநிலத்தில் அதிகரித்துவரும் விவசாயிகள் தற்கொலைகள் குறித்தும் அதற்கு இழப்பீடு வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்தும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பிரத்னியா ராஜீவ் சதவ், சதேஜ் பாட்டீல் மற்றும் பாய் ஜக்தாப் ஆகியோர் கேள்வியெழுப்பினர்.
மேலும், தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மாநில நிவாரண மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் மகராந்த் பாட்டீல் 2025-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா பிராந்தியத்திலுள்ள யவத்மால், அமராவதி, அகோலா, புல்தானா மற்றும் வாசிம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இவர்கள் விவசாயத்திற்காக வாங்கிய அதிகப்படியான கடன்கள், பயிர்களை விளைவிப்பதற்கு போதுமான நீர்ப்பாசன வசதியின்மை, குறைந்த பயிர் விளைச்சல் போன்ற நெருக்கடிகள் காரணமாக தாங்கள் வாங்கிய கடனை கட்ட முடியாமல் நொடிந்துபோய் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக