ஞாயிறு, 6 ஜூலை, 2025

இலங்கை போரின்போது சரணடைந்த 29 சிறார்கள் செம்மணியில் !!

இலங்கையில் யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி பகுதிகளில் கண்டறியப்பட்ட மனிதப் புதைக்குழியில் சிறுவர்களின் எலும்புகள், பொம்மைகள், புத்தகப் பைகள் கிடைத்துள்ள நிலையில், இவை இறுதி யுத்தக் காலத்தில் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழந்தைகளுடையதா என்ற சந்தேகத்தை வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் எழுப்பியுள்ளனர். 

இந்தக் குற்றச்சாட்டை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது., யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 45 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 34 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 

 இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, சட்ட மருத்துவ அதிகாரியின் கண்காணிப்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனிதப் புதைக்குழியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜன் தெரிவிக்கின்றார். 

 அத்துடன், மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சாட்சிப் பொருட்கள் வழக்கு எண்களின் அடிப்படையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். அதேவேளை, குழந்தையொன்றின் மனித எலும்புக்கூடொன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள குழந்தைகளின் எலும்புக்கூடுகளை தோண்டி எடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து வருவதாக வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார்.

சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து சிறார்களின் எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக தோண்டி எடுக்கப்பட்டு வருகின்ற பின்னணியில், இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தமது பெற்றோருடன் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவிக்கின்றார். 

 இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்களின் பெயர் விபரங்கள் அடங்கிய ஆவணமொன்றை லீலாதேவி ஆனந்த நடராஜா தயாரித்துள்ளார். இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்களில் பெரும்பாலானோர் இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் வெளியிடுகின்றனர்.

டி.என்.ஏ பரிசோதனை செய்வது பற்றி கேள்வி எழுப்பிய போது, ''டி.என்.ஏ பரிசோதனை செய்து அவற்றை சேமித்து வைக்க வேண்டும் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை. தாய், தந்தையருடன் சரணடைந்த 29 குழந்தை பிள்ளைகள் எங்கேயோ ஒரு இடத்தில் உயிர் வாழ்ந்தால், அவர்களை இனங்காண்பதற்கு டி.என்.ஏ பரிசோதனை தேவை. இது எனது தனிப்பட்ட கருத்து. எலும்புக்கூடுகளை டி.என்.ஏ பரிசோதனை செய்து, நாங்கள் அவர்களுக்குரிய இறுதி சடங்குகளை செய்வதற்கான தேவை எங்களுக்கு ஏற்படவில்லை. 

 அந்த எலும்புக்கூடாக்கியவர்கள் யார்? அவர்களுக்கு என்ன தண்டனை?. அதில் தான் எங்களுக்கு அக்கறை இருக்கின்றதே தவிர, டி.என்.ஏ பரிசோதனை செய்து அவர்களுக்கு கிரியைகள் செய்ய வேண்டிய தேவை இல்லை. இதை செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அதுதான் மீள் நிகழாமைக்கான ஒரேயொரு வழி. குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கப்பட வேண்டும்.'' என லீலாதேவி ஆனந்த நடராஜா கூறினார். டி.ஏன்.ஏ பரிசோதனையை செய்ய வேண்டாம் என தான் கூறவில்லை என தெரிவித்த அவர், நீதிக்கான பயணத்தில் எந்தவித வேக குறைப்பும் இடம்பெறக்கூடாது என்றார்.

குறிப்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. யாழ்ப்பாணம் பொலிஸாரின் நேரடி பாதுகாப்புக்கு மத்தியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பகுதிக்குள் அனுமதிக்கப்பட்ட தரப்பினரை தவிர, ஏனையோருக்கு செல்ல யாழ்ப்பாணம் நீதிமன்றம் முழுமையாக தடை விதித்துள்ளது. 

குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், ஏ-9 வீதியில் சித்துபாத்தி மனிதப் புதைக்குழிக்கு முன்பாக வாகனங்களை நிறுத்தவும் பொலிஸார் தடை விதித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. 

அதேவேளை, இலங்கை மின்சார சபையின் உதவியுடன் மின்சார இணைப்பு எடுக்கப்பட்டு, இரவு வேளையிலும் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்தது.

BBC

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

செங்கடலில் ஏமன் அருகே ஏவுகணை கப்பல் தீப்பிடித்து எரிகிறது.

ஞாயிற்றுக்கிழமை  ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகளை வீசி தாக்கிய பின்னர், செங்கடல் வழியாக பயணித்த ஒரு கப்பல் தீப்பிடித்து எரிந்ததா...