செவ்வாய், 4 மார்ச், 2025

நேருக்கு நேர் மோதியதால் உக்ரைன் அதிபரை நீக்க அமெரிக்கா முயற்சி !!

ரஷ்யா உடனான போரில் உக்ரைனுக்கு 3 ஆண்டுகளாக அமெரிக்கா செய்த நிதியுதவிக்குப் பதிலாக, உக்ரைனில் உள்ள அரியவகை கனிம வளங்களின் உரிமையை காலவரையில்லாமல் வழங்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேட்டார்.இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா சென்றார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. அந்த நிகழ்வு சுமுகமாக முடியாமல் பெரும் வாக்குவாதமாக மாறியது. 

உலகம் பார்க்க நடந்த அந்த வாக்குவாதத்தில், போரில் உக்ரைனுக்கு உத்தரவாதம் அளித்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயார் என ஜெலன்ஸ்கி தெரிவிக்க, உத்தரவாதம் அளிக்க ட்ரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும், மதிய உணவைப் புறக்கணித்தும் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். இதன் காரணமாக உக்ரைனுக்கான ஆயுத உதவிகள் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியதாவது…. அமெரிக்கா சார்பில் சுமார் 71 சரக்கு கப்பல்களில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ஆயிரக்கணக்கான பீரங்கிகள், ஏவுகணைகள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டு உள்ளன. தற்போதுவரை உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், இருதரப்பு இடையே எந்தவொரு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. இதைத்தொடர்ந்து அதிபர் ட்ரம்பின் உத்தரவால் உக்ரைனுக்கான ஆயுத உதவி உடனடியாக நிறுத்தப்பட்டுவிட்டது. வரும் மேமாதம் அமெரிக்காவின் அனைத்து வகையான உதவிகளும் முழுமையாக நிறுத்தப்படும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா கைவிட்ட நிலையில் தற்போது உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

 அந்த நாட்டுக்குத் தேவையான ஆயுத உதவிகளை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வழங்கி வருகின்றன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இலண்டனில் நேற்று முன்தினம் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார்.எக்காரணத்தைக் கொண்டும் உக்ரைனை ரஷ்யா கைப்பற்றுவதை ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை. 

எனவே, போரில் உக்ரைனுக்கு உதவ ரூ.24 ஆயிரம் கோடி கடன் வழங்க ஸ்டார்மர், ஜெலன்ஸ்கி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் ஆகியோருடன் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், பிரான்ஸ், இங்கிலாந்து இணைந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை தயார் செய்வது எனவும், அதை வைத்து அதிபர் டிரம்புடன் ஆலோசிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அவசரக் கூட்டம் இலண்டனில் நேற்று நடைபெற்றது. 

இதில் ஜெலன்ஸ்கியும் பங்கேற்றார். இதில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இத்தாலி பிரதமர் மெலோனி மற்றும் கனடா, ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், பின்லாந்து, போலாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா, நேட்டோ செயலாளர் மார்க் ரூட்டே, துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹகன் பிதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில் தொடக்க உரையாற்றிய இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்படுவது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிற நாடுகளின் பாதுகாப்பிற்கும் இன்றியமையாதது. இதற்காக தலைமுறையில் நிகழும் மகத்தான ஒற்றை நிகழ்வை நோக்கி நாம் முன்னேற வேண்டும். பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் பிற நாடுகள் உக்ரைனுடன் இணைந்து போர் நிறுத்தத் திட்டத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம். 

இந்தத் திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்பிடம் எடுத்துச் சென்று ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அமெரிக்க அதிபரிடம் நேருக்குநேர் மோதியதால் உதவிகளை உடனடியாக நிறுத்தியதுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அந்தப் பதவியிலிருந்து நீக்க அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து முயற்சி மேற்கொள்ளும் நிலையில் ஜெலன்ஸ்கிக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் களமிறங்கியிருப்பது உலகம் முழுதும் கவனிக்கத்தக்க நிகழ்வாகியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

நேருக்கு நேர் மோதியதால் உக்ரைன் அதிபரை நீக்க அமெரிக்கா முயற்சி !!

ரஷ்யா உடனான போரில் உக்ரைனுக்கு 3 ஆண்டுகளாக அமெரிக்கா செய்த நிதியுதவிக்குப் பதிலாக, உக்ரைனில் உள்ள அரியவகை கனிம வளங்களின் உரிமையை காலவரையில்ல...