பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு, பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் தலைமை தாங்கினர். கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், வழக்கறிஞர் பாலு, பொருளாளர் திலகபாமா, சட்டமன்ற உறுப்பினர்கள் அருள், சிவக்குமார், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் பாமக தலைவர் அன்புமணி பேசுகையில்….
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் கூட்டணி ஆட்சி தான் அமையும். பிரச்சினைகள் இல்லாமல் மாநாட்டை நடத்த வேண்டும். பாமகவுக்கு யாரும் எதிரி கிடையாது. பாமக நிறுவனர் இராமதாசு எல்லா சமுதாயத்திற்கும் சமமானவர்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு குறித்த பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாநாடு நடைபெறுவதால் கோயில் கும்பாபிசேகம் போல் நடத்தப்பட வேண்டும். மாநாட்டுக் கூட்டத்தைக் கண்டு ஆளுங்கட்சி பயப்பட வேண்டும்.
நமக்கான சாதி ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து பாமக நிறுவனர் இராமதாசு கூறியதாவது….
அனைத்து மக்களுக்காகப் பாடுபடுகின்ற கட்சியாக பாமக உள்ளது. 18 விழுக்காடு இடஒதுக்கீட்டை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம்.
இப்போதுள்ள பட்டியலினத் தலைவர்களைக் கேட்டுக்கொள்வது என்னவெனில், நீங்களும் மாநாட்டில் கலந்துகொள்ளுங்கள். பட்டியல் சமூகத் தலைவர்கள் மாநாடு நடத்தினால் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள். அரசு மற்றும் காவல்துறை வழிகாட்டுதலின் பேரில் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும்.
அண்ணா சொன்னதைப் போல் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். மாநாட்டுக்கு வரும் பட்டியல் சமூகத்தினருக்கு வாழ்த்து சொல்லி அனுப்புங்கள்.
10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு மட்டுமல்ல, சாதிவாரிக் கணக்கெடுப்புக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் 364 சாதிகள் உள்ளன.
இந்த மாநாடு 364 சமுதாயத்திற்கும் ஒரு செய்தியைச் சொல்லும். அவர்களுக்கு அரணாக இருக்கும். வன்னியர் சங்க மாநாட்டுக்கு எப்படிச் செல்வது என யோசிக்காதீர்கள். 364 சமுதாய மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். பல சமுதாயத் தலைவர்களை நாங்கள் அழைப்பதுண்டு.
1998 இல் நடந்த மாநாட்டுக்கு ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அரசுக்கும், காவல்துறைக்கும் வேண்டுகோளாக வைப்பது மாநாடு நடத்த உங்களின் ஒத்துழைப்பு தேவை. இப்படி ஒரு மாநாடு நடைபெற்றதில்லை என கூறும் அளவுக்கு நடத்த வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வன்னியர் சங்க மாநாடு நடத்தப்படுவதால் அரசியல் ரீதியாகத் தோல்வி அடைந்த அரசியல்வாதிகள் சாதியை நாடுவார்கள் என்கிற சொல்லுக்கேற்ப இராமதாசு நடந்து கொள்கிறார் என்கிற விமர்சனங்களும் வரத் தொடங்கியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக