பழனி முருகன் கோயில் அமைந்துள்ள மலை மீது அருகே முசுலீம் தர்கா ஒன்று இருந்து வருகின்றது.
திருப்பரங்குன்றத்திலும், பழனியிலும் இந்துக்களும், முசுலீம்களும் அவரவர் வழிபடும் இடங்களுக்குச் சென்று வழிபாடுகள் நிகழ்த்திவிட்டு அமைதியாகத் திரும்புகிறார்கள்.
இத்தனை நூற்றாண்டு காலமாக எவ்விதப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. இந்துக்களும், முசுலீம்களும் சகோதர பாவத்துடன் பழகி வருகிறார்கள். இந்த அமைதியைக் குலைக்கவேண்டும் என்பதற்காகவோ திருப்பரங்குன்றம் தர்கா பிரச்சனையை உருவாக்கி வகுப்புவாத வெறியர்கள் மதக்கலவரத்தை மூட்டுவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
தமிழகத்தில் சைவம் – வைணவம் – முசுலீம் – கிருத்துவர் – சமணர் – பௌத்தர் போன்ற அனைத்து சமயங்களைச் சேர்ந்தவர்களும் அமைதியாகவும், நெருக்கமான நட்புறவு கொண்டவர்களாகவும் திகழ்ந்து வருகிறார்கள். மதத்தின் பெயரால் எத்தகைய பிரச்சனையும் எழுந்ததில்லை. இந்த அமைதியான சூழ்நிலையைக் கெடுத்து மதக்கலவரங்களை மூட்டி, தங்களுக்கு அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் இந்துத்துவா அமைப்புகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதை அனைத்துத் தமிழர்களும் வன்மையாகக் கண்டிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
தமிழ்நாட்டின் வரலாறு தெரிந்தவர்கள் இத்தகைய கீழ்த்தரமான செயல்களில் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள்.
இராசஇராசன் கட்டிய கோயிலில் முசுலீம் உயர் அதிகாரி
தமிழ்நாட்டில் மன்னராட்சி நடைபெற்ற காலகட்டத்தில் மன்னர்கள் சமயப் பொறையுடன் ஆண்டிருக்கிறார்கள். சோழப் பெரு மன்னனான இராசராசன் தஞ்சையில் எழுப்பியுள்ள பெரிய கோயில் உலகப்புகழ் பெற்றதாகும். அந்த கோயிலில் தேவாரம் பாடிய காந்தர்விகளுக்கும் நடனமாடிய தளிச்சேரிப் பெண்டுகளுக்கும் நாயகம் செய்த உயரதிகாரியாக இருந்தவர் ஒரு முசுலீம் ஆவார்.
அந்த நாளில் முசுலீம்களை சோனகர் என அழைத்தார்கள். அந்த உயரதிகாரியின் பெயர் சோனகன் சாவூர் பரஞ்சோதி என்பதாகும். தான் அதிகாரியாக இருந்த அந்தக் கோயிலுக்கு விளக்கு எரிப்பதற்காக 96 ஆடுகளை சோனகன் சாவூர் பரஞ்சோதி அளித்த செய்தி அதே கோயிலில் இன்றைக்கும் கல்வெட்டாக உள்ளது.
இராசேந்திர சோழன் காலத்திலும் அவர் திருமந்திர ஓலை நாயகம் என்ற பெரும் பதவியில் இருந்துள்ளார்.
அவருக்கு இராசேந்திர சோழ கந்தர்வ பேரரையன் என்னும் உயர் பட்டத்தை இராசேந்திர சோழன் அளித்துள்ளான் என்ற செய்தியை குறிப்பிடும் செப்பேடு இன்றும் உள்ளது.
பாண்டிய மன்னர்களும் சமயப் பொறையை காத்தனர். அரிகேசரி பராக்கிரம பாண்டியன் கால கல்வெட்டு (கி.பி. 1422 – 1463) பின்வருமாறு கூறுகிறது-
“தென்காயல் மக்கள் எல்லோரும் மகிழவும், பள்ளிவாசலில் தொழுகை நடத்தவும் அர்த்த மண்டபம், இடையின் நாழி, பெரு மண்டபம், தண்ணீர்க்குளம் ஆகியவற்றை அமைக்கும் திருப்பணிகளை அரிகேசரி பராக்கிரம பாண்டியன் தனது ஆட்சியின் 25ஆம் ஆண்டில் (கி.பி. 1451) செய்துகொடுத்தான்.
மேலும், பொருநை ஆறு பாயும் பகுதியில் வடபுறம் குமரிக் காட்டு எல்லைக்குட்பட்ட மாத்தூர் என்னும் ஊரைப் பள்ளிவாசலுக்கு மானியமாக அவன் அளித்த செய்தியும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள வீரபாண்டியன் பட்டினத்தில் அமைந்திருந்த காட்டு மகதூம் பள்ளிவாசலைப் புதுப்பித்துத் தன் பெயரால் உதயமார்த்தாண்ட பெரும்பள்ளி என்ற பெயரைப் பொறித்து அவ்வூர் காஜியாருக்கும் உதயமார்த்தாண்ட காஜியார் என்ற பட்டம் அளித்தான். துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதியாகும் பொருட்களுக்கெல்லாம் நாலு பணத்திற்குக் கால் பணம் மகமையாக இந்தப் பள்ளிவாசலுக்கு அளிக்கவும் ஏற்பாடு செய்தான்.
தமிழ்நாட்டின் வரலாற்றைக் கூறும் கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் மேற்கண்ட செய்திகளைப் போன்ற ஏராளமான செய்திகள் இன்றும் உள்ளன.
சைவம், வைணவம் ஆகிய சமயங்களைச் சேர்ந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் சமணம் – பௌத்தம் – இசுலாம் போன்ற பிற சமயங்களுக்கும் மானியங்கள் மற்றும் கிராமங்களை நன்கொடையாகத் தந்து சமயப்பொறையை நிலைநாட்டியுள்ளனர்.
இன்றளவும் தமிழ்நாட்டில் இந்த சமயப்பொறையைப் பின்பற்றி எம்மதமும் சம்மதம் என்ற உணர்வுடன் தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து வருகிறார்கள். இந்த ஒற்றுமையை சீர்குலைக்க மதவெறியர்கள் முயலுகிறார்கள். அந்த முயற்சிகளை மக்கள் ஒன்றுசேர்ந்து முறியடிக்கவேண்டும். தமிழ்நாட்டில் மதத்தின் பெயரால் கலவரம் செய்ய முற்படுபவர்களை புறக்கணித்து ஒதுக்கவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக