இந்நிலையில், வியாழக்கிழமை மோதி, அமெரிக்க அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்க, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அதிக எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை டிரம்ப் அறிவித்தார்.
மேலும், இந்தியா அமெரிக்கா இடையே ஒரு புதிய பரஸ்பர வரித் திட்டத்தை அதிபர் டிரம்ப் அறிவித்தார். "எங்கள் கூட்டாளிகள் எங்கள் எதிரிகளை விட மோசமானவர்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக வசிக்கும் இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது குறித்தும் பிரதமர் மோதி பேசினார்.
மேலும், அதானி நிறுவனம் மீது அமெரிக்காவில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும் மோதி பதிலளித்தார்.
அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நாடுகளின் மீது டிரம்ப் வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் வேளையில், இந்திய பிரதமர் மோதியுடன் டிரம்ப் தற்போது பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில் விவாதிக்கப்பட்டது என்ன?இந்த சந்திப்புக்குப் பிறகு இரு நாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அதில் பேசிய பிரதமர் மோதி, அதிபர் டிரம்பின் முழக்கமான 'MAGA' (make America great again - அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்குவது) என்பதை மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவையும் அதே போல மீண்டும் சிறந்த நாடாக்க வேண்டும் (MIGA-Make India Great Again). இந்த இரண்டு சிந்தனைகளும் ஒன்று சேரும்போது அது இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு ஜனநாயக நாடுகளும் செழிப்பான வளர்ச்சிக்கான 'மெகா (MEGA) கூட்டாண்மையை' உருவாக்கும்", என்று குறிப்பிட்டார்.
"இந்தியா எங்களிடம் இருந்து எந்த அளவுக்கு வரி வசூலிக்கிறதோ, அதே அளவில்தான் நாங்களும் அந்நாட்டிடம் இருந்து வசூலிப்போம்", என்று டிரம்ப் தெரிவித்தார்.
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்படும் ஒருவரை ஒப்படைக்க அனுமதித்ததற்கு நரேந்திர மோதி அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் குடியேறிய இந்தியர்களை திரும்பப் பெற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் மோதி தெரிவித்தார்.
ரஷ்யா அதிபர் புதினுடனான தனது அழைப்பின் கூடுதல் விவரங்களையும் டிரம்ப் பகிர்ந்துகொண்டார். யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது பற்றியும் டிரம்ப் குறிப்பிட்டார்.அமெரிக்காவில் சட்ட விரோதமாக வசிக்கும் இந்தியர்களை திரும்பப் பெறுவது குறித்தும் பிரதமர் மோதி செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
"அமெரிக்காவில் சட்ட விரோதமாக எந்தவொரு இந்தியரும் வசிப்பது நிரூபணமானால், அவர்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல தயாராக இருக்கிறோம்." என அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் குடியேறியவர்களுள் (இந்தியர்கள்) சிலர் மனிதக் கடத்தலில் ஈடுபடுபவர்களால் அழைத்து வரப்பட்டதாகவும், தாங்கள் அமெரிக்காவுக்குதான் அழைத்து வரப்பட்டதுகூட அவர்களுக்குத் தெரியாது என்றும் மோதி கூறினார்.
"இவர்கள் மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள். அவர்கள், பெரிய கனவுகள், பெரிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர்."
அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைவதற்கு "ஏமாற்றப்படும்" இளைஞர்களை பாதுகாக்க மனிதக் கடத்தலைத் தடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் கூறினார்.
டிரம்ப் மீண்டும் அதிபரானது முதல், ஆவணங்களின்றி அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர்கள் பலர் ராணுவ விமானத்தில் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் நடவடிக்கையின்போது எந்தவொரு இந்தியரும் தவறாக நடத்தப்படாததை உறுதி செய்வதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக