மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், "யுக்ரேன் தங்கள் முதுகுக்கு பின்னால் தங்களது பங்களிப்பு இல்லாமல் செய்யப்படும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்ளாது " என்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் அமைதி பேச்சுவார்த்தையைத் தொடங்க ஒப்புக்கொண்ட பிறகு ஸெலென்ஸ்கி இதைக் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை நிகழ்த்திய உரையில் ஐரோப்பிய ஜனநாயகங்களை தாக்கிப் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறையில் "ஐரோப்பா பெரிய அளவில் முன்னேற வேண்டியிருப்பதாக" எச்சரித்திருந்தார்.
"ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது என நான் உண்மையில் நம்புகிறேன்" என்றார் ஸெலென்ஸ்கி.
"பல பத்தாண்டுகளாக ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இடையே இருக்கும் உறவுகள் முடிவுக்கு வந்துகொண்டிருப்பதாக நேற்று இங்கே மியூனிச் நகரில், அமெரிக்க துணை அதிபர் தெளிவுபடுத்தினார்" என தெரிவித்தார்.
"இப்போது முதல் விஷயங்கள் வேறாக இருக்கும், அதற்கேற்ப ஐரோப்பா அனுசரித்து நடந்துகொள்ளவேண்டும்" என்றார் அவர்.
யுக்ரேன் மீது முழுவீச்சில் ரஷ்யா மேற்கொண்ட படையெடுப்பு, நேட்டோ கூட்டமைப்பு வலுவாகவும், பலமாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது என இவ்வாரத்தில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹேக்சேத் கூறியிருந்தார்.
"நாம் நிதர்சனத்தைப் பேசுவோம். ஐரோப்பாவை அச்சுறுத்தும் ஒரு விஷயத்தில், அமெரிக்கா இல்லை என சொல்வதற்கான வாய்ப்பை நாம் மறுப்பதற்கில்லை," என சனிக்கிழமை ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
"பல தலைவர்கள் ஐரோப்பாவிற்கு அதன் சொந்த ராணுவம் தேவை என்று பேசியுள்ளனர்.
ஒரு ராணுவம், ஐரோப்பாவின் ராணுவம்" என்றும் அவர் கூறினார்.
ஐரோப்பிய ராணுவம் என்ற கருத்தாக்கம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உட்பட மற்ற தலைவர்களால் முன்மொழியப்பட்டதுதான். அமெரிக்காவை சார்ந்திருப்பதை குறைப்பதற்கு ஐரோப்பாவிற்கு தனி ராணுவம் உருவாக்குவதற்கு மக்ரோன் ஆதரவு தெரிவித்திருந்தார்.
"புதினுடனான தன்னுடைய உரையாடல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் சில நாட்களுக்கு முன் என்னிடம் தெரிவித்தார். ஒருமுறைகூட ஐரோப்பா பேச்சுவார்தையில் இடம்பெற வேண்டும் என அவர் குறிப்பிடவிலை. அது பல விஷயங்களை சொல்கிறது," என்றார் ஸெலென்ஸ்கி.
"ஐரோப்பாவை அமெரிக்கா ஆதரித்த அந்த பழைய நாட்கள் முடிந்துவிட்டன" என்று அவர் கூறினார்.
யுக்ரேன் மீது ரஷ்யா தொடுத்த படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவு நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், டிரம்ப் மற்றும் ஹெக்சேத் இருவருமே யுக்ரேன் நேட்டோவில் சேருவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக