திங்கள், 11 நவம்பர், 2024

நாகாலாந்துக்குத் தனிக்கொடி கோரிக்கை!!

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்றும்,அதைத் தனி நாடாக அறிவிக்க கோரியும், என்.எஸ்.சி.என் – ஐ.எம் எனப்படும், நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் – இசாக் முய்வா உட்பட பல்வேறு கிளர்ச்சிக்குழுக்கள் கோரி வருகின்றன. 

இது தொடர்பாக, கிளர்ச்சிக் குழுவினருக்கும், இராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்து வந்தது. 1997 ஆம் ஆண்டு என்.எஸ்.சி.என்., – ஐ.எம். போர் நிறுத்தத்தை அறிவித்தது. திமாபுரில் உள்ள ஹெப்ரான் என்ற இடத்தில் முகாம் அமைத்து என்.எஸ்.சி.என். – ஐ.எம். குழுவினர் அங்கு தனி ராஜ்ஜியம் நடத்தி வருகின்றனர். 

அந்தக் குழுவின் தலைவர் இசாக் முய்வாவை, அவர்கள் பிரதமர் என்றே அழைக்கின்றனர். 1997 க்குப் பின்,ஒன்றிய அரசுத் தரப்புக்கும், என்.எஸ்.சி.என். – ஐ.எம். குழுவுக்கும் இடையே, 600 சுற்று பேச்சு நடந்தன. அதன் முடிவில், 2015 ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஒன்றிய அரசுக்கும், கிளர்ச்சிக் குழுவுக்கும் இடையே உடன்படிக்கை கையெழுத்தானது. 

அந்த ஒப்பந்தத்தின்படி, நாகாலாந்தின் தனித்துவமான வரலாறு பகிரப்பட்ட இறையாண்மையை ஏற்றுக் கொள்ள ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டதாக இசாக் முய்வா தெரிவித்திருந்தார்.அப்போது நாகாலாந்துக்கென ஒரு தனிக்கொடியை உருவாக்கவும் ஒன்றிய அரசு ஒப்புதல் கொடுத்ததாகச் சொல்லப்பட்டது. 

 இப்போது தனி நாகாலாந்து கொடி மற்றும் அரசியலமைப்பு என்ற கோரிக்கையை ஏற்க ஒன்றிய அரசு மறுத்துள்ளது. அதனால், நாகாலாந்துக்கு தனிக்கொடி மற்றும் அரசியலமைப்பு கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்காவிட்டால் 27 ஆண்டு போர் நிறுத்த முடிவை கைவிட்டு மீண்டும் ஆயுதத்தைக் கையில் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என ஒன்றிய அரசுக்கு என்.எஸ்.சி.என். – ஐ.எம். என்கிற நாகா கிளர்ச்சிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டதை இப்போது ஏற்க மறுப்பது துரோகம் என குற்றஞ்சாட்டும் நாகா கிளர்ச்சியாளர்கள், இந்த விவகாரத்தில் அரசியல் தீர்வு காண மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை கோருகின்றனர்.

இதை ஏற்கத் தவறினால், 27 ஆண்டு போர் நிறுத்தத்தை திரும்பப் பெற்று மீண்டும் ஆயுதம் ஏந்துவோம். பின்விளைவுகளுக்கு ஒன்றியஅரசு தான் பொறுப்பு என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளதெனச் சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

பாம்புகளின் தீரா பசிக்கு மொத்தமாக அழிந்து போன பறவை இனங்கள்!!

மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குவாம் தீவில், அதற்கு அருகிலுள்ள தீவுகளுடன் ஒப்பிடும்போது 40 மடங்கு அதிக சிலந்திகள் உள்ளன. மேலும் இந்...