செவ்வாய், 15 அக்டோபர், 2024

ரஷ்யா தனது 'அதிரகசிய' நவீன ட்ரோனை தானே சுட்டு வீழ்த்தியதா?

கிழக்கு யுக்ரேனில் போர் நடக்கும் இடத்திற்கு மேல் வானில் இரண்டு புகைத் தடங்கள் தோன்றினால் ​​​​அதன் பொருள், ரஷ்ய ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தவுள்ளன என்பதே. ஆனால், கிழக்கு யுக்ரேனில் இருக்கும் கோஸ்ட்யான்டினிவ்கா நகருக்கு அருகில் நடந்த சம்பவம் இதற்கு முன் நடந்திராதது. ஒரு புகைத்தடத்தின் கீழ்ப்பாதை இரண்டாகப் பிளந்தது. ஒரு புதிய பொருள் மற்ற பாதையை நோக்கி விரைந்தது. அவை ஒன்றையொன்று கடந்த போது ஒரு பிரகாசமான ஆரஞ்சு வெளிச்சம் வானில் ஒளிர்ந்தது. 

 பலரும் நினைத்தது போல, போர் நடக்கும் இடத்தின் முன்களத்திலிருந்து 20 கி.மீ தொலைவில், ஒரு ரஷ்யப் போர் விமானம் மற்றொரு போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதா? அல்லது ஒரு யுக்ரேனிய ஜெட் விமானம் ரஷ்ய விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதா? என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில், யுக்ரேனியர்கள் சிதறி கிடந்த பாகங்களை ஆராய்ந்த போது, அவற்றிலிருந்து ரஷ்யாவின் புதிய ஆயுதமான எஸ் -70 ரகசிய ட்ரோன் அழிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். 

இது சாதாரண ட்ரோன் அல்ல. ஓகோட்னிக் (வேட்டைக்காரன்) எனப் பெயரிடப்பட்ட இந்த கனரக, ஆளில்லா வாகனம், ஒரு போர் விமானம் அளவுக்குப் பெரியது, ஆனால் இதில் ஓட்டுநர் அறை (காக்பிட்) இருக்காது. இதைக் கண்டறிவது மிகவும் கடினம். இதை வடிவமைத்தவர்கள், இதற்கு ஈடாக உலகில் வேறேதும் இல்லை என்று கூறுகிறார்கள். 

 இவையனைத்தும் உண்மையாக இருக்கலாம். ஆனால் இந்த ட்ரோன் வழிதவறிச் சென்றது. வீடியோவில் காணப்பட்ட இரண்டாவது தடம் ரஷ்ய Su-57 ஜெட் விமானத்திலிருந்து வந்ததாகத் தெரிகிறது. 

அது ரகசிய ட்ரோனை வெளிப்படையாகத் துரத்துகிறது.ரஷ்யாவின் Su-57 போர் விமானம் வழிதவறிச் சென்ற ட்ரோனுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்திருக்கலாம். ஆனால் அவை இரண்டும் யுக்ரேனிய வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பறந்து கொண்டிருந்ததால், எதிரிகளின் கைகளில் சிக்குவதைத் தடுக்க ஓகோட்னிக் ட்ரோனை அழிக்க முடிவு செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.

 கோஸ்ட்யாண்டினிவ்காவிற்கு மேல், வானத்தில் என்ன நடந்தது என்பது குறித்து ரஷ்யாவோ, யுக்ரேனோ இன்னும் அதிகாரப்பூர்வமாகக் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், யுக்ரேனின் மின்னணுப் போர் கட்டமைப்புகள் குறுக்கிட்டதன் காரணமாக, ரஷ்யப் படையினர் தங்கள் ட்ரோன் மீதான கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

தமிழ்மக்களுக்கு அதிகாரப்பகிர்வு தேவை இல்லை - ஜேவிபி ரில்வின் சில்வா

வடக்கு மக்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டமும் அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் (Janatha Vimukthi Peramuna) பொதுச...