சனி, 14 செப்டம்பர், 2024

இந்திய அரசின் 15 அரசியல் சாசன நாயகிகள்!!

இந்திய அரசியலமைப்பு அவையின் 299 உறுப்பினர்களில் 15 பேர் மட்டுமே பெண்களாக இருந்தனர். இந்திய அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இப்போது வரை குறைவாகவே இருக்கும் நிலையில், அரசியலமைப்பு அவையில் இடம்பெற்ற இந்தப் பெண்களில் சிலர், பல சமூகத் தடைகளை உடைத்தனர் என்கிறது புதிதாக வெளிவந்துள்ள ஒரு புத்தகம். இந்தியா குடியரசு நாடாகி 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை 1917இல் எழுப்பப்பட்டது. 

அந்தப் புள்ளியிலிருந்து இந்திய அரசியலில் பெண்களின் பங்களிப்பு வெகுதூரம் நகர்ந்து வந்திருக்கிறது. ஆனாலும், பெண்களின் பங்களிப்பு பெரிய அளவில் உயரவில்லை. இந்திய மக்களவையில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 15 சதவீதம்தான். ஆனால், இந்திய அரசியலமைப்பு அவை உருவாக்கப்பட்டபோது இருந்த விகிதத்தோடு ஒப்பிட்டால் நிலைமை சற்று மேம்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். 

இந்திய அரசியலமைப்பு அவை உருவாக்கப்பட்டபோது அதில் 299 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த 299 பேரில் 15 பேர் மட்டுமே பெண்கள். அதாவது, மொத்த எண்ணிக்கையில் வெறும் ஐந்து சதவீதம் பேர் மட்டுமே பெண்கள். இந்திய அரசியலமைப்பு அவையில் மாகாணங்களில் இருந்தும் சமஸ்தானங்களில் இருந்தும் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர். 

ஆனால், அந்தக் காலகட்டத்தில் பல பிரிவினருக்குப் போதுமான பிரதிநிதித்துவம் அந்த அவையில் கிடைக்கவில்லை. அந்த அவையில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 15ஆக மட்டுமே இருந்தது. ஆனால், இந்த 15 பெண்களும் தேசத்தின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தனர். இந்த மகத்தான 15 பெண் தலைவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன என்பதைத் தொகுத்துச் சொல்கிறது சமீபத்தில் வெளிவந்த The Fifteen: The Lives and Times of the Women in India’s Constituent Assembly என்ற புத்தகம். ஏஞ்சலிக்கா அரிபம், ஆகாஷ் சத்யவாலி ஆகியோர் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளனர்.

முதலில் அரசியலமைப்பு அவையில் இருந்த 15 பெண்கள் யார் எனப் பார்த்துவிடலாம். 1. அம்மு சுவாமிநாதன், 2. ஆனி மாஸ்கரீன், 3. பேகம் குத்ஸியா ஐஸாஸ் ரசூல், 4. தாக்ஷாயிணி வேலாயுதன், 5. துர்காபாய் தேஷ்முக், 6. ஹன்ஸா மேத்தா, 7. கமலா சௌத்ரி, 8. லீலா ராய், 9. மாலதி சௌத்ரி, 10. பூர்ணிமா பேனர்ஜி, 11. ராஜ்குமாரி அம்ரித் கௌர், 12. ரேணுகா ரே, 13. சரோஜினி நாயுடு, 14. சுசேதா கிருபாளனி, 15. விஜயலக்ஷ்மி பண்டிட் ஆகியோர்தான் அந்த 15 பேர். இந்தப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பின்னணி இருந்தது. 

சரோஜினி நாயுடு, ஹன்ஸா மேத்தா, மாலதி சௌத்ரி, விஜயலக்ஷ்மி பண்டிட், பூர்ணிமா பேனர்ஜி, ராஜ்குமாரி போன்றவர்கள் காந்திய சிந்தனையில் ஊறியவர்கள். மற்ற சிலர் புரட்சிகர சிந்தனையைக் கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்களில் பேகம் குத்ஸியாவும் ராஜ்குமாரி அம்ரித் கௌரும் பஞ்சாபின் அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். 

விஜயலக்ஷ்மி பண்டிட், ஹன்ஸா மேத்தா ஆகியோர் அரசியல் ரீதியாக செல்வாக்குடைய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். சரோஜினி நாயுடு மாலதி சௌத்ரி, ரேணுகா ரே ஆகியோர் வங்காளத்தில் செல்வாக்குமிக்க குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இரண்டு பேர் தனித்துவமிக்கவர்களாக இருந்தனர். 

ஒருவர் ஆனி மாஸ்கரரீன். இவர் ஒரு லத்தீன் கிறிஸ்தவர். மற்றொருவர் தாக்ஷாயினி வேலாயுதன். இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். சுதந்திரத்திற்குப் பிறகு இவர்களில் பலர் உயர்ந்த இடத்தை அடைந்தார்கள். விஜயலக்ஷ்மி பண்டிட் பல நாடுகளின் தூதராக இருந்தார். ஐ.நாவின் முதல் பெண் தலைவராகவும் உயர்ந்தார். 

ராஜ்குமாரி அம்ரித் கௌர் மத்திய அமைச்சரானார். துர்காபாய் தேஷ்முக் முதல் திட்டக் குழுவின் உறுப்பனரானார். ஆனியும் ரேணுகாவும் தத்தம் மாநிலங்களில் அமைச்சரானார்கள். சரோஜினி நாயுடுவும் சுசேதாவும் ஆளுநராகவும் முதல்வர்களாகவும் ஆனார்கள். அந்த வகையில் நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் இந்த ஆளுமைகளுக்கு மிக முக்கியமான பங்கு இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வேல்ஸ் மற்றும் தெற்கு இங்கிலாந்தின் பெரும்பகுதி ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் எச்சரிக்கை!!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பெரிய பகுதிகளுக்கு வானிலை அலுவலகம் மஞ்சள் வானிலை எச்சரிக்கைகளை வெளியிடுவதால், வார இறுதியில் வெறும் 12 மணி நேர...