வியாழன், 19 நவம்பர், 2026

தமிழகத்தில் ரவுடிகள் யாரும் இல்லை: டிஜிபி

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில், பெரிய ரவுடிகள் என்று யாரும் இல்லை என்று தமிழக டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார். தமிழகத்தின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

தாம் பொறுப்பேற்ற பிறகு கோவில் திருவிழாக்கள், தேவர் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அமைதியாக நடைபெற்று முடிந்ததாக அவர் கூறினார். கடந்த 5 முதல் 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன என்றும் தெரிவித்தார். 

குடும்பத் தகராறு, நிலம் மற்றும் பணப் பிரச்சினைகள், கள்ளத்தொடர்பு, தெருச்சண்டை போன்ற தனிப்பட்ட காரணங்களாலேயே 90 சதவீத கொலைகள் நடந்துள்ளன. ரவுடியிசம் காரணமாக ஒரு சதவீத கொலைகளே நடந்துள்ளன என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

 ஜனவரி முதல் நவம்பர் 15-ம் தேதி வரையிலான புள்ளிவிவரங்களின்படி, 2022-ம் ஆண்டு 1,484 கொலைகளும், 2023-ம் ஆண்டு 1,469 கொலைகளும், 2024-ம் ஆண்டு 1,383 கொலைகளும், 2025-ம் ஆண்டு 1,346 கொலைகளும் நடந்துள்ளன. 2026-ம் ஆண்டில் இதுவரை 1,306 கொலைகள் பதிவாகியுள்ளன. 

கடந்த ஆண்டை விட இது 40 குறைவாகும். அக்டோபர் வரையிலான கொலை வழக்குகளில் தொடர்புடைய 3,229 குற்றவாளிகளில் 3,077 பேர், அதாவது 95 சதவீதம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

''செஞ்சியில் சிறுமி காணாமல் போன வழக்கை சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிகள் நேரடியாகக் கண்காணித்து விசாரித்து வருகின்றனர். ‘லாக்-அப்’ மரணங்கள் நடக்கக்கூடாது என்பதே காவல்துறையின் நிலைப்பாடு. மதுரை சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. மற்றும் நீதித்துறை விசாரணைகள் தனித்தனியாக நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 6 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. புகார் மனுக்கள் பெறுவதிலும், வழக்கு விசாரணைகளிலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை சுதந்திரமாகச் செயல்படுவதால் குற்றங்கள் குறைந்து, சட்டம்-ஒழுங்கு நிலை சீராக உள்ளது என்று டி.ஜி.பி. கூறினார்.

திருப்பூர் ரேஷன் அரிசி கள்ளச்சந்தையில்

திருப்பூர் மாவட்ட டிஎம்எஸ் நகரில் உள்ள நியாய விலை கடையில் ரேஷன் அரிசி கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. ரேஷன் கடையில் கடந்த ஆறு மாதங்களாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் அரிசியை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 இந்த நிலையில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி செல்ல முயன்றுள்ளனர். இதனால் அத்திறமைடைந்த பொது மக்கள் நியாய விலை கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து வந்த கூட்டுத்துறை அதிகரிகள் ரேஷன் கடை ஊழியர் சிம்ரன் பேகத்தை பணியிடை மாற்றம் செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

புதன், 18 நவம்பர், 2026

குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தை ஈரான் ராணுவத்தின் ஆளில்லா விமானங்கள் தாக்கின.

புதன்கிழமை அதிகாலையில் குவைத்தில் உள்ள அமெரிக்காவின் அலி அல்-சலேம் விமானப்படைத் தளத்தில் இருக்கும் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆளில்லா விமான, ஏவுகணை ஏவுதளங்களைத் தங்களது போர் ஆளில்லா விமானங்கள் குறிவைத்துள்ளதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. 

புதன்கிழமை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ஈரான் இராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம், அலி அல்-சலேம் விமானப்படைத் தளத்தில் உள்ள பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அமெரிக்க பயங்கரவாத இராணுவத்தால் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவுவதற்குப் பயன்படுத்தப்படும் தளங்கள் மீது தங்களது போர் மற்றும் தற்கொலை ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது. 

அந்த அறிக்கை, அலி அல்-சலேமை ஒரு முக்கிய விமானத் தளமாகவும், மேற்கு ஆசியாவிற்குள் விமானப் போக்குவரத்து மற்றும் இராணுவப் படைகளின் நுழைவுக்கான ஒரு முக்கிய மையமாகவும் விவரித்ததுடன், அது அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் பிராந்திய உத்தி மற்றும் தளவாடங்களில் ஒரு மையப் பங்கை வகிக்கிறது என்றும் கூறியது. 

 "ஈரானைப் பாதுகாப்பதில் எந்த சக்திக்கும் நாங்கள் தலைவணங்க மாட்டோம்" என்று கூறிய இராணுவம், எந்தவொரு அச்சுறுத்தல் அல்லது ஆக்கிரமிப்புக்கும் ஈரானின் பதில் "தீர்மானமானதாகவும், வலிமையானதாகவும், புவியியல் எல்லைகளற்றதாகவும்" இருக்கும் என எச்சரித்தது.

சைபீரியாவில் ரஷ்ய இராணுவ விமானம் விபத்து – 19 பேர் பலி

ரஷ்யாவின் தென்மேற்கு சைபீரியப் பகுதியில் இராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 19 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் ‘இஸ்வெஸ்டியா’ (Izvestia) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) ரஷ்யாவின் கெமரோவோ (Kemerovo) பிராந்தியத்தில் ‘ஏ.என்-12’ (An-12) ரக இராணுவப் போக்குவரத்து விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.


 யாகுனோவோ (Yagunovo) கிராமத்திற்கு அருகில் விமான விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதைப் பிராந்திய ஆளுநர் இலியா செரெடியுக் (Ilya Seredyuk) ‘MAX’ செய்தியிடல் தளத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ள போதிலும், விபத்துக்குள்ளான விமானம் எதுவென்பதை அவர் உத்தியோகபூர்வமாக அடையாளப்படுத்தவில்லை. விபத்துக்கான சூழ்நிலை குறித்த மேலதிக விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

ரஷ்யப் பகுதிகள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட உட்கட்டமைப்புகள் மீது உக்ரைன் நடத்தி வரும் நீண்டதூரத் தாக்குதல்களின் தொடர்ச்சியாக, நேற்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) ஒரு பகுதி கடலுக்குள் இடிந்து விழுந்துள்ளது. 

உக்ரைன் அதிகாரிகளால் பகிரப்பட்டுள்ள படங்களின்படி, பாலத்தின் பிரதான தாங்கு வளைவுகளில் (Support arches) ஒன்றும், வீதிப் பகுதியின் கணிசமான பாகமும் முற்றாக இடிந்து விழுந்துள்ளன. இரவு நேரத்தில் ரஷ்யப் படைகள் கீவ் நகரில் உள்ள டினிப்ரோ (Dnipro) நதிக்குக் குறுக்கேயுள்ள இரண்டு பிரதான பாலங்கள் மற்றும் கார்கிவ் (Kharkiv) நகரின் அத்தியாவசிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, கீவ் நகரின் பல பகுதிகள் மின்சாரம் மற்றும் நீர் விநியோகமின்றி பாதிக்கப்பட்டுள்ளன. 

பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ (NATO) தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற உக்ரைன் பாதுகாப்புத் தொடர்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்கப் பாதுகாப்புத் துறை கொள்கைக்கான துணைச் செயலாளர் எல்பிரிட்ஜ் கோல்பி (Elbridge Colby), ரஷ்யாவிற்குள் ஆழமாக உக்ரைன் நடத்தும் நீண்டதூரத் தாக்குதல்களின் செயல்திறன் குறித்துக் கேள்வி எழுப்பியதுடன், இத்தகைய தாக்குதல்கள் மாஸ்கோவின் உறுதியை மேலும் வலுப்படுத்தக்கூடும் என எச்சரித்தார். 

 “ரஷ்ய மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆழமான தாக்குதல்கள் மீது பொதுமக்களின் கவனம் குவிந்திருந்தாலும், இத்தகைய தாக்குதல்கள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் பயனுள்ளதாக இல்லை என்பதும், போர்க்களத்தில் ரஷ்யாவின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்குப் பங்களிக்கவில்லை என்பதும் எமது மதிப்பீடாகும்” என அவர் குறிப்பிட்டார்.

அத்துமீறலுக்கு உள்ளான அனுராதபுரம் பெண் வைத்தியரின் தந்தை வாக்குமூலம்

அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகிய பெண் வைத்தியர் தொடர்பிலான வழக்கு விசாரணையின்போது பாதிப்புக்கு உள்ளான பெண்ணின் தந்தை கண்ணீருடன் உணர்ச்சிப்பூர்வமான வாக்குமூலம் அளித்துள்ளார். 

 என் வாழ்வில் எல்லா நேரங்களிலும் தன் மகளை நான் பாதுகாத்திருக்கிறேன். ஆனால் இந்தச் சம்பவத்தில், என்னால் அவளைப் பாதுகாக்க முடியவில்லை என மிகவும் உருக்கமான வாக்குமூலத்தை வழங்கியுள்ளாார். 

தனது மகள் முன்பு பணியாற்றிய திருகோணமலை மற்றும் குளியாபிட்டிய மருத்துவமனைகளில் அவருக்கு முறையான பாதுகாப்பு இருந்ததாகவும், ஆனால் அனுராதபுரம் மருத்துவமனையில் அவர் தங்கியிருந்த விடுதியில் அத்தகைய பாதுகாப்பு எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து மருத்துவமனை நிர்வாகம் எந்த அக்கறையும் காட்டவில்லை என்று குற்றம் சாட்டிய அவர் , துயரச் சம்பவத்திற்குப் பிறகு தான் சம்பவ இடத்தைப் பார்வையிட்டபோது, ​​விடுதியைச் சுற்றியுள்ள மரக்கிளைகளை வெட்டி, அப்பகுதியை ஒளிரச் செய்ய மின்விளக்குகளைப் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேல் நீதிமன்ற நீதிபதி இந்திக அத்தநாயக்கவின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான முன்னாள் இராணுவ அதிகாரி தொடர்பான மற்றொரு முக்கியமான விடயமும் வெளியாகியுள்ளது. 

அரசுத் தரப்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தணி ஹிமாலி ஜயநெத்தி, பெண் மருத்துவர் மீதான பாலியல் அத்துமீறல் வழக்கில் மேல் நீதிமன்றத்தால் கடுமையான பிணை நிபந்தனைகளின் பேரில் செல்ல அனுமதிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், மற்றொரு குற்றத்திற்காக கல்நேவ காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் முன்னதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தலைமன்னார் ரூ. 160 மில்லியன தங்கத்தை கடத்த முயன்ற நால்வர் கைது!

இலங்கை கடற்படையினரால் நேற்று தலைமன்னார் பேசாலை மற்றும் புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பிற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட இருவேறு விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, கடல் மார்க்கமாகக் கடத்த முயன்ற 4 கிலோகிராமுக்கும் அதிகமான தங்கத்துடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 



அத்துடன், 2 டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 160 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தங்கத்தை கடல் மார்க்கமாக தென்னிந்தியாவிற்குக் கொண்டு செல்ல முயற்சித்திருக்கலாம் என சந்தேகம் வடமத்திய கடற்படைக் கட்டளை பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, தலைமன்னார் வடக்குக் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகொன்று சோதனையிடப்பட்டது. 

குறித்த படகில் மணல் சாக்குக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கிலோகிராம் 410 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதனுடன் தொடர்புடைய 25 மற்றும் 28 வயதுடைய பேசாலைப் பகுதியைச் சேர்ந்த 2 சந்தேகநபர்கள் டிங்கி படகொன்றுடன் கைது செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பிரதி சுங்கப் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 


இதேவேளை, வடமேற்கு கடற்படைக் கட்டளை பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பில் ​நேற்றிரவு விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது குறித்த பகுதியில் சோதனையிடப்பட்ட டிங்கி படகின் எரிபொருள் கொள்கலனுக்குள் சூட்சுமமாக மறைத்து வைத்து கடத்தப்பட்ட சுமார் 3 கிலோகிராம் 25 கிராம் தங்கம் மீட்கப்பட்டது. 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 40 மற்றும் 50 வயதுடைய கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 2 சந்தேகநபர்கள், டிங்கி படகுடன் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கட்டுநாயக்க சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நானுஓயா குளவி கொட்டு 6 மாணவர்கள் வைத்தியசாலையில் !

நானுஓயா - எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 6 மாணவர்கள் குளவிக்கு கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று (18) காலை பாடசாலை கட்டடமொன்றின் கூரையிலிருந்த குளவிக்கூடு கலைந்ததில், அங்கு நின்ற மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். 

 இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பாடசாலை நிர்வாகத்தினரும் பிரதேசவாசிகளும், 1990 அவசர அம்பியூலன்ஸ் வண்டி மூலம் அவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Thank You Google

Thank You Google
Thanks