சனி, 21 நவம்பர், 2026

பிரித்தானிய பாரிய சைபர் தாக்குதல் முறியடிப்பு!

பிரித்தானியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகள் (Supermarkets), களஞ்சியசாலைகள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் வர்த்தக ரீதியிலான குளிரூட்டிகள் மற்றும் உறைபனிப் பெட்டிகளின் (Fridges and Freezers) இயக்க முறைமைகளில் காணப்பட்ட பாதுகாப்புக் குறைபாடு (Flaw) ஒன்றை பிரித்தானிய சைபர் பாதுகாப்புப் பிரிவினர் வெற்றிகரமாகச் சரிசெய்துள்ளனர். 

அண்மைய வாரங்களில் பல ஐரோப்பிய நாடுகளைப் பாதித்த சைபர் தாக்குதல்களிலிருந்து பிரித்தானிய நிறுவனங்களைப் பாதுகாக்க இந்நடவடிக்கை உதவியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்தி வெளியிட்டுள்ளது. 

பிரித்தானியாவின் குளிரூட்டல் துறை வேறுபட்ட சாதனங்களை நம்பியிருப்பதால், ஐரோப்பிய சைபர் தாக்குதல்களிலிருந்து பிரித்தானியா பெருமளவில் தப்பிவிட்டதாகவே முன்னர் கருதப்பட்டது.

 எனினும், ‘ஒமேகா சிஸ்டம்ஸ்’ (Omega Systems) நிறுவனத்தின் ஆலோசகர்கள் பிரித்தானிய குளிரூட்டல் அமைப்புகளில் இருந்த ஒரு குறைபாட்டை அடையாளம் கண்டனர். அதனைத் தொடர்ந்து, ‘பென் டெஸ்ட் பார்ட்னர்ஸ்’ (Pen Test Partners) எனும் சைபர் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த அறநெறி சைபர் தாக்குதல்தாரர்கள் (Ethical hackers) மேலும் பல பாதுகாப்பு ஓட்டைகளைக் கண்டறிந்து பாதுகாப்புச் சேவைகளுக்குத் தகவல் வழங்கினர். 

சைபர் தாக்குதல்தாரர்களுக்கு எச்சரிக்கை ஏற்படாத வகையில் சுமார் மூன்று வாரங்களாக இந்தப் பாதுகாப்புச் சீரமைப்பு நடவடிக்கை இரகசியமாக முன்னெடுக்கப்பட்டதாக ‘பென் டெஸ்ட் பார்ட்னர்ஸ்’ தெரிவித்துள்ளது.

இக்குறைபாடு சரிசெய்யப்படுவதற்கு முன்னதாக, பாதிக்கப்படக்கூடிய நிறுவனங்கள் தமது குளிரூட்டிகளைப் பொது இணையத் தொடர்பிலிருந்து (Open internet) துண்டித்து, சாதனங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்தன. 

தமது அமைப்புகளில் இருந்த பலவீனங்கள் காரணமாக பிரித்தானியாவின் ஒரு சிறிய எண்ணிக்கையிலான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதைத் தாம் அறிந்திருந்ததாகவும், தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC) உடனடியாகத் தலையிட்டு அவற்றை எச்சரித்து ஆதரவளித்ததுடன், உணவு மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியதாகவும் NCSC பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

 நவம்பர் மாத முற்பகுதியில் ஸ்வீடன் முதல் பெல்ஜியம் வரையிலான நாடுகளில் இடம்பெற்ற சைபர் தாக்குதல்கள் வர்த்தக குளிரூட்டிகள் மற்றும் உறைபனிப் பெட்டிகளைச் செயலிழக்கச் செய்தன. முன்னதாக ஒக்டோபர் மாதம் பிரான்ஸில் இடம்பெற்ற இதேபோன்ற தாக்குதலால், பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியான உணவுப் பொருட்களை அங்காடிகள் வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. 

ஒக்டோபர் மாதம் 700 வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில், குளிரூட்டல் அமைப்புகளின் வெப்பநிலையை சைபர் தாக்குதல்தாரர்கள் அதிகரித்ததால் 15 தீ விபத்துக்கள் ஏற்பட்டதாகவும், இத்தாக்குதலை ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் (Revolutionary Guards) நடத்தியதாகவும் பிரான்ஸ் உளவு மற்றும் சைபர் முகமைகள் குற்றம் சுமத்தியுள்ளன. 

 ஐரோப்பியத் தாக்குதல்களைத் தொடர்ந்து, டென்மார்க் நிறுவனமான ‘டான்ஃபோஸ்’ (Danfoss) நிறுவனத்தின் சில தொழிற்சாலைக் குளிரூட்டும் சாதனங்களில் தொடர்ந்தும் பாதுகாப்புப் பலவீனங்கள் நிலவுவதாக ஜெர்மனியின் தகவல் பாதுகாப்பு அலுவலகம் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks