வியாழன், 19 நவம்பர், 2026

தமிழகத்தில் ரவுடிகள் யாரும் இல்லை: டிஜிபி

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில், பெரிய ரவுடிகள் என்று யாரும் இல்லை என்று தமிழக டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார். தமிழகத்தின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

தாம் பொறுப்பேற்ற பிறகு கோவில் திருவிழாக்கள், தேவர் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அமைதியாக நடைபெற்று முடிந்ததாக அவர் கூறினார். கடந்த 5 முதல் 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன என்றும் தெரிவித்தார். 

குடும்பத் தகராறு, நிலம் மற்றும் பணப் பிரச்சினைகள், கள்ளத்தொடர்பு, தெருச்சண்டை போன்ற தனிப்பட்ட காரணங்களாலேயே 90 சதவீத கொலைகள் நடந்துள்ளன. ரவுடியிசம் காரணமாக ஒரு சதவீத கொலைகளே நடந்துள்ளன என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

 ஜனவரி முதல் நவம்பர் 15-ம் தேதி வரையிலான புள்ளிவிவரங்களின்படி, 2022-ம் ஆண்டு 1,484 கொலைகளும், 2023-ம் ஆண்டு 1,469 கொலைகளும், 2024-ம் ஆண்டு 1,383 கொலைகளும், 2025-ம் ஆண்டு 1,346 கொலைகளும் நடந்துள்ளன. 2026-ம் ஆண்டில் இதுவரை 1,306 கொலைகள் பதிவாகியுள்ளன. 

கடந்த ஆண்டை விட இது 40 குறைவாகும். அக்டோபர் வரையிலான கொலை வழக்குகளில் தொடர்புடைய 3,229 குற்றவாளிகளில் 3,077 பேர், அதாவது 95 சதவீதம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

''செஞ்சியில் சிறுமி காணாமல் போன வழக்கை சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிகள் நேரடியாகக் கண்காணித்து விசாரித்து வருகின்றனர். ‘லாக்-அப்’ மரணங்கள் நடக்கக்கூடாது என்பதே காவல்துறையின் நிலைப்பாடு. மதுரை சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. மற்றும் நீதித்துறை விசாரணைகள் தனித்தனியாக நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 6 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. புகார் மனுக்கள் பெறுவதிலும், வழக்கு விசாரணைகளிலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை சுதந்திரமாகச் செயல்படுவதால் குற்றங்கள் குறைந்து, சட்டம்-ஒழுங்கு நிலை சீராக உள்ளது என்று டி.ஜி.பி. கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks