புதன், 9 செப்டம்பர், 2026

அமெரிக்க நீர்மூழ்கியைக் கைப்பற்றியதாக ஈரான் அறிவிப்பு!

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கி நடத்திய தாக்குதல் ஒரு முறை முடிவுக்கு வந்துவிட்ட போதிலும், ஹார்மூஸ் ஜலசந்திக்காக அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் மீண்டும் ஹார்மூஸ் ஜலசந்தியில் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கின்றன. 

ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக டேங்கர் கப்பல்களை அனுமதிப்பது தொடர்பாக இரு நாடுகளிடையே கருத்து வேறுபாடு மற்றும் மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையினர் கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது சமீபத்தில் தாக்குதலை நடத்தினர்.

இதற்கு பதிலடி தரும் விதமாக ஐந்து ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி அழித்தது. பதிலடியாகவே தாங்கள் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்தது.

வர்த்தகப் போர் கனடா பொருட்களுக்கு அமெரிக்கா தடை!!

அமெரிக்கா - கனடா இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கனடாவிலிருந்து பால் பொருட்கள், சில மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பெரும்பாலான மதுபானங்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. 

அமெரிக்க அதிபரான் டிரம்ப் இதற்கான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். இந்த இறக்குமதி தடைகள் வரும் செப்டம்பர் 29, 2026 முதல் அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா விதித்த வரிகளுக்குப் பதிலடியாக, 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா புதிய வரிகளை விதித்தது. 

இந்த புதிய வரிகள் அமலுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே அமெரிக்கா மேற்கண்ட தடை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.கனடாவின் பால் பொருட்களான வே புரோட்டீன், மோலாசஸ் (molasses), பெரும்பாலான மதுபானங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்/மோபெட் வாகனங்கள் அமெரிக்காவின் சமீபத்தீய இந்தத் தடையில் அடங்கும். மேலும், சில பிரபலமான கனேடிய சீஸ் வகைகளுக்கு 50 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது

யாழ் அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெருக்கெடுத்துள்ளன. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் உள்ள ஐயனார் ஆலய காணியில் உள்ள கிணறானது நில மட்டத்திற்கு மேலே தண்ணீர் வந்த நிலையில் கிணற்றில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளது. 

 அத்துடன் அதனை அண்டிய மேலும் ஒரு கிணறானது நில மட்டத்திற்கு தண்ணீர் மட்டம் வந்துள்ளதையும், ஏனைய இரண்டு கிணறுகள் வழமைக்கு மாறாக நீர் மட்டம் உயர்ந்து உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளின் தண்ணீரானது நன்னீராக மாறியுள்ளதுடன், ஒரு கிணற்றின் தண்ணீர் மிதமான சூட்டுடன் இருப்பதை உணர முடிகிறது. 

 இது குறித்து அந்த ஊரில் உள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையில், குறித்த கிணறுகளில் இந்த மாதங்களில் நீர்மட்டம் மிகவும் குறைவாகவே காணப்படும். 

குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது. மூன்று அல்லது நான்கு பேர் குளித்தாலேயே கிணற்றில் உள்ள தண்ணீர் முடிந்து விடும். இவ்வாறான சூழ்நிலையில் வழமைக்கு மாறாக நீர்மட்டம் உயர்ந்துள்ளமை புதுமை என்றே நாங்கள் பார்க்கின்றோம்.

ரஷ்யாவில் பயங்கர பனிச்சரிவு

வட காகசஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள மிஷிர்ஹி மலையில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மேலும் 6 பேர் பாய்காயமடைந்துள்ளதுடன், 6 பேர் மாயமாகியுள்ளதாக அவசர கால மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மொத்தம் 33 பேரைக் கொண்ட மலையேற்ற வீரர்களின் குழுவினர் மிஷிர்ஹி மலையில் ஏறிக்கொண்டிருந்த போதே, எதிர்பாராதவிதமாக இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

பனிச்சரிவில் சிக்கியவர்களில் 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காணாமல் போன 6 பேரைக் கண்டுபிடிக்கும் நோக்கிலும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கிலும் 50-க்கும் மேற்பட்ட சீருடை தரித்த மீட்புக் குழுவினர் மற்றும் ஹெலிகொப்டர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

இருப்பினும், மோசமான காலநிலை மற்றும் மீண்டும் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் காரணமாக தேடுதல் பணியில் பெரும் சவால்கள் நிலவுகின்றன. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ரஷிய விசாரணை ஆணையம் முன்னெடுத்து வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

யாழ் குளங்கள் மற்றும் நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகள்

யாழ்ப்பாண மாவட்டத்தின் நீர்வளத்தைப் பாதுகாத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்குடன், குளங்களின் நீர்ப்பிடிப்பு மற்றும் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தும் துரித தூர்வாரும் நடவடிக்கைகள் உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டு முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்முறை ‘எல் நினோ’ (El Niño) காலநிலைத் தாக்கத்தின் காரணமாக யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வழக்கத்தை விட அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், வடகீழ் பருவமழை தொடங்குவதற்கு முன்னரே இப்பணிகளை நிறைவுசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. 

கந்தரோடைக் குளம், அராலி பாலத்திற்கு அண்மையிலுள்ள வழுக்கை ஆற்றுப்படுக்கையில் நன்னீரைத் தேக்கும் விசேட செயற்றிட்டம் மற்றும் அல்லைப்பிட்டி – கற்குளம் ஆகிய பகுதிகளில் முதற்கட்டமாகத் தூர்வாரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

 குறித்த நீர்நிலைகளில் படிந்துள்ள சேறு, வண்டல் மற்றும் கழிவுகளை அகற்றி, குளங்களின் நீர்த்தேக்கக் கொள்ளளவை அதிகரிப்பதும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளைச் சீரமைப்பதும் இதன் பிரதான இலக்காகும். 

கிடைக்கக்கூடிய நன்னீரை வீணாகக் கடலில் கலக்க விடாமல் நிலத்தடியில் செறிவூட்டி, விவசாயம், நன்னீர் மீன்பிடி மற்றும் பொதுமக்களின் நாளாந்த குடிநீர் தேவைகளுக்கு உகந்த வகையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்குரிய களப்பணிகள் இடம்பெறுகின்றன. 

 அந்தந்தப் பிரதேசத்திற்குட்பட்ட பிரதேச சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் நேரடிக் கண்காணிப்பு, இயந்திர உதவிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் இப்பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்படுகின்றன.

சிறைப்பேருந்தில் நாமல்

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 

இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாமல் பதிலளிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும், அனைத்து விடயங்களையும் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்த உள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு இன்றைய தினம் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய நாமல் ராஜபக்சவை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.

காலியில் இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது

இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட காலிப் பகுதியைச் சேர்ந்த அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபரான அதிபர், குறித்த பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக ஒரு பிள்ளைக்கு மூன்று லட்சம் ரூபாய் வீதம் இருவருக்கும் ஆறு லட்சம் ரூபாய் கோரியுள்ளதுடன், பின்னர் அத்தொகை மூன்று லட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

அதில் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு 2026ஆம் ஆண்டின் முதலாம் ஆண்டிற்கு ஒரு பிள்ளையைச் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றைய பிள்ளையை 8ஆம் வகுப்பில் சேர்ப்பதற்காக எஞ்சிய ஒன்றரை லட்சம் ரூபாயில் 50,000 ரூபாயைப் பெற்றுக்கொண்டு அப்பிள்ளையையும் பாடசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்பின்னர், இவ்விரு பிள்ளைகளையும் பாடசாலையில் சேர்ப்பதற்குத் தேவையான பணிகளைச் செய்து கொடுத்தமைக்காக மேலும் இரண்டரை இலட்சம் ரூபாய் பணம் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்பணத்தைக் கொடுக்காவிட்டால் இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையை விட்டு நீக்கிவிடுவதாகக் கூறி, அவ்வாறு செய்யாமல் இருப்பதற்காகக் கோரப்பட்ட இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற முயன்றபோதே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

Thank You Google

Thank You Google
Thanks