நெடுந்தீவைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெடுந்தீவு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக நேற்று நீதிமன்றத்திற்கு வந்தவர்கள், சாட்சியம் அளித்த பின்னர் நெடுந்தீவுக்குச் செல்வதற்காகப் பயணித்துக் கொண்டிருந்தபோது, முகங்களை மூடிய நிலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பலொன்று அவர்களை வழிமறித்து வாள்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்குதலுக்குப் பின்னர் குறித்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு இலக்கான இளைஞர், தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அது தொடர்பில் காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றில் சாட்சியமளித்த பின்னர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், சாட்சிகளின் பாதுகாப்பு மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளில் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படாதிருப்பது தொடர்பில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சாட்சிகளை அச்சுறுத்துதல் அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்துதல் போன்ற நடவடிக்கைகள் நீதியின் செயற்பாட்டை பாதிக்கக்கூடியவை என்பதால், சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக