திங்கள், 7 செப்டம்பர், 2026

தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!!

தூத்துக்குடி முள்ளக்காடு, முத்தையாபுரம், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றாண்டு காலமாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் உப்பு உற்பத்தித் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, உப்பள தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உப்பள தொழிலாளர்கள், சார்பு தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் உப்பு உற்பத்தித் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இத்தொழிலைச் சார்ந்து சுமார் ஒரு லட்சம் மக்கள் வாழ்ந்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். தூத்துக்குடி முள்ளைக்காடு - கோவளம் கடற்கரைப் பகுதியில் பன்னாட்டு கொரிய நிறுவனத்துக்கு சுமார் 3,000 ஏக்கர் நிலத்தை வழங்கி கப்பல் கட்டுமானத் தளம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்தத் திட்டம் கடந்த ஆட்சிக் காலத்திலேயே தொடங்கப்பட்டதாகவும், பின்னர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. புதிய ஆட்சி அமைந்த பிறகு நிலம் கையகப்படுத்துவதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

முதலில் சுமார் 1,200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 3,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டினர். 

கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களில் பெரும்பாலானவை உப்பளப் பகுதிகள் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அதிகாலை 6 மணி முதல் உப்பள தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இணைந்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 "ஒரு பாரம்பரிய தொழிலை அழித்துவிட்டு மற்றொரு தொழிலை கொண்டு வரக்கூடாது" என்பதை வலியுறுத்தி அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். கப்பல் கட்டுமானத் தளம் அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதிகள் அளிக்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். 

மேலும், உப்பு உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் வீடு கட்டித் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுபோன்ற வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றுவதாகவும் அவர்கள் கூறினர். 

 மேலும், தங்களது உரிமைகளுக்காக போராடி வரும் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். 

போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பாரம்பரியமாக நடைபெற்று வரும் உப்பு உற்பத்தித் தொழிலை அழித்து, அதன் இடத்தில் கப்பல் கட்டுமானத் தளம் அமைக்கக் கூடாது என்பதே தங்களது முக்கிய கோரிக்கை என தெரிவித்த உப்பள தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!!

காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.


காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்றவர்களில் குறித்த 13 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அவர்களை மீண்டும் காங்கேசன்துறைக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். காங்கேசன்துறைக்கு திரும்பி வந்தவர்களை இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் .

இவ்வாறு கைதானவர்கள் ஹல்துமுல்ல, மாம்பிட்டிய, கருங்கொடித்தீவு, மதவாச்சி, மொனராகலை, மாவடிச்சேனை, பொத்துவில், பலாங்கொடை, பதுளை மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் 13 பேரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

இந்தோனேசிய விமான நிலையங்களில் 301 விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஜகார்த்தா உட்பட ஐந்து இந்தோனேசிய விமான நிலையங்களில் எரிமலைச் சாம்பல் மேகத்தால் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பால் 301 விமானப் போக்குவரத்து தடைபட்டதுடன், மீன்பிடித்தல் மற்றும் சில பள்ளி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.

அனக் கிரகடாவ் எரிமலையிலிருந்து எழுந்த சாம்பல் மேகம் காரணமாக, இந்தோனேசியா தனது முக்கிய சர்வதேச விமான நிலையம் உட்பட ஐந்து விமான நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை செயல்பாடுகளை நிறுத்தி, நூற்றுக்கணக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியது. இந்தோனேசியாவின் புவியியல் ஆய்வு நிறுவனத்தின்படி, சனிக்கிழமை ஏற்பட்ட இந்த வெடிப்பு, எரிமலைக்குழம்பு மற்றும் 700 கி.மீ (435 மைல்கள்) தொலைவு வரை கேட்கக்கூடிய பேரொலிகளை உருவாக்கியது. 

மேலும், இது சில பள்ளி நடவடிக்கைகள் மற்றும் மீன்பிடித்தலையும் பாதித்தது. ஞாயிற்றுக்கிழமை மேலும் இரண்டு வெடிப்புகள் பதிவு செய்யப்பட்டன. ஜகார்த்தா அருகே உள்ள சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள வான்வெளியில் சாம்பல் கண்டறியப்பட்டதால், அதிகாரிகள் விமானச் செயல்பாடுகளை இடைநிறுத்தினர். அவர்கள் இந்த முடக்கத்தை பலமுறை நீட்டிப்பதாக அறிவித்தனர். 

இந்தச் செய்தி எழுதப்படும் நேரத்தில், ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணி வரை விமான சேவைகளுக்காக விமான நிலையம் மூடப்பட்டிருக்கும். இந்த இடைநிறுத்தத்தால் 58 சர்வதேச விமானங்கள் உட்பட 301 விமானங்கள் பாதிக்கப்பட்டதாக விமான நிலைய நிர்வாகி அங்கசா புரா அறிவித்தது. 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஜகார்த்தாவிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களை ரத்து செய்துள்ளதாகக் கூறியது. 

ஆஸ்திரேலிய விமான நிறுவனமான குவாண்டாஸ், "இன்று ஜகார்த்தாவிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் சேவைகள் ரத்து செய்யப்பட்டது உட்பட, பல குவாண்டாஸ் சேவைகளில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன" என்று கூறியுள்ளது. 

 "எங்கள் வானிலை ஆய்வாளர்களும் செயல்பாட்டுக் குழுக்களும் ஜகார்த்தா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நிலவும் சூழல்களையும், எங்கள் செயல்பாடுகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். 

பாதுகாப்பே எங்களின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை நாங்கள் தொடர்பு கொண்டு உதவிகளை வழங்கி வருகிறோம். சூழல் சீரானதும் சேவைகள் மீண்டும் தொடங்கும்."

செம்மணி சுயாதீன சர்வதேச விசாரணை கோரும் பிரித்தானிய எம்.பி

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நிதியுதவியுடன் கூடிய முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மன் வலியுறுத்தியுள்ளார். 

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை செய்யப்பட்டு நாளையுடன் (07) 30 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 30 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை தொடர்பான வழக்கில் வெளிப்பட்ட தகவல்களே செம்மணி பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பது தொடர்பான விசாரணைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தன.இந்தநிலையில், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப் பணிகளில் இதுவரை 583 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 

இதன்மூலம் செம்மணி, இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது.கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலையும் அதனைத் தொடர்ந்து வெளிப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி விவகாரமும், 

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலைகள் தொடர்பான உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் நீண்டகாலமாக பதிலளிக்கப்படாத கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளன. செம்மணி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும்.

மாமல்லபுரத்தை அழகாக்க 500 மரக்கன்றுகள் நட திட்டம்

மாமல்லபுரம் உலகளவில் வரலாற்று பிரசித்தி பெற்ற தமிழக சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்பட பல்வேறு புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 

இங்கு சுற்றுலா வரும் பயணிகள், மாமல்லபுரம் எல்லைப் பகுதியான கருகாத்தமன் கோயிலின் பின்புறமுள்ள பிடாரி ரதத்தைச் சுற்றி பார்க்கவும் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். 

பின்னர் பிடாரி ரதத்தை சுற்றி பார்த்துவிட்டு வெளியே வரும் சுற்றுலா பயணிகளில் பலர், அங்கு தொல்லியல் துறையின் மதில்சுவரை ஒட்டியுள்ள காலி இடத்தில் பிளாஸ்டிக் பைகள், வாட்டர் பாட்டில் உள்பட ஏராளமான குப்பைக் கழிவுகளை போட்டுவிட்டு செல்கின்றனர். அதேபோல், அப்பகுதியில் ஏராளமான ஓட்டல் கழிவுகள் மற்றும் குப்பைகளை இரவு நேரங்களில் கொட்டிவிட்டு செல்கின்றனர். 

இதனால் அப்பகுதியே குப்பைமேடு போல் காட்சியளித்து, கடும் துர்நாற்றம் வீசியது. குப்பை கழிவுகளை அகற்றி, அங்கு ஏராளமான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து அழகுபடுத்த வேண்டும் என்று நகராட்சிகளின் மண்டல இயக்குனர் மாரிச்செல்வி உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில், மாமல்லபுரம் நகராட்சி ஆணையர் அபர்ணா மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில், நேற்று முதல் அப்பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலமாக குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் குப்பைக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க, அங்கு 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதற்கு மாமல்லபுரம் நகராட்சி ஆணையர் அபர்ணா, சுகாதார ஆய்வாளர் குருசாமி ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். அவர்களின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாமல்லபுரம் சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளதால், எங்களுக்கு அந்நகரை தூய்மைப்படுத்த வேண்டிய கடமை உள்ளது. 

ஒருசில இடங்களில் சுற்றுலாப் பயணிகள் விழிப்புணர்வு இல்லாமல், கண்மூடித்தனமாக குப்பைக் கழிவுகளை வீசிவிட்டு செல்கின்றனர். இங்கு குப்பை போடக்கூடாது என பல்வேறு அறிவிப்பு பலகைகள் வைத்து எச்சரிக்கிறோம். இவற்றை மீறுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக சுற்றுலா பயணிகளிடையே விரைவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

யாழில் சட்டவிரோதமாக கடலட்டைகளை கடத்திய மூவர் கைது

யாழ்ப்பாணம், குடரப்பு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கடலட்டைகளைக் கடத்திச் சென்ற மூவர் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். 

 வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அதிகாரிகளால் நேற்று (05) காலை முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கடலட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

கடற்கரைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட படகொன்றைச் பரிசோதித்தபோது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டு நிலப்பரப்பிற்கு கடத்தி வரப்பட்ட 673 கடல் அட்டைகள் அடங்கிய தொகுதியை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 51 முதல் 56 வயதிற்கு இடைப்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கடலட்டைகள் தொகுதி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சனி, 5 செப்டம்பர், 2026

உலக வரைபடத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் அளவு தவறாக

பல நூற்றாண்டுகளாக உலக மக்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய உலக வரைபடத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் அளவு தவறாகக் காட்டப்பட்டு வந்ததைச் சரிசெய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் (UN) பெருமளவு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 ஆப்பிரிக்காவின் உண்மையான பரப்பளவை துல்லியமாக வெளிப்படுத்தும் புதிய உலக வரைபடத்தை (Equal Earth Map) அதிகாரப்பூர்வமாக ஏற்பதற்கான இந்தத் தீர்மானத்திற்கு உலக அரங்கில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது புழக்கத்தில் இருக்கும் 'மெர்கேட்டர் உலக வரைபடம்' (Mercator Projection), கடல் பயணங்களை எளிதாக்க 1569ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டதாகும். 

ஆனால், அது பூமியின் கோள வடிவத்தை தட்டையான காகிதத்தில் கொண்டு வரும்போது, ஆப்பிரிக்கக் கண்டத்தை அதன் உண்மையான அளவை விட மிகச் சிறியதாகவும், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளை மிகப் பெரியதாகவும் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்கக் கண்டமானது கிரீன்லாந்தை விட 14 மடங்கு பெரியதாகும். 

ஆனால், பழைய வரைபடத்தில் இரண்டுமே ஒரே அளவில் காட்சியளிக்கின்றன. இந்த புவியியல் ரீதியான வரலாற்றுத் தவறை மாற்றி, உலக நாடுகளின் பரப்பளவை அதன் உண்மையான விகிதத்தில் காட்டும் 'ஈக்வல் எர்த்' (Equal Earth) வரைபடத்தை ஐநா சபை அங்கீகரிக்க வேண்டும் என ஆப்பிரிக்க நாடான தோகோ (Togo) தீர்மானம் கொண்டு வந்தது. 

ஐநா பொதுச் சபையில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கெடுப்பில்: ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட 164 நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

 அமெரிக்கா மட்டுமே இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது.பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 6 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்து விலகியிருந்தன. புதிய வரைபடத்தின் மூலம் ஆப்பிரிக்கா, சீனா, அமெரிக்கா, மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் தன்னுள் அடக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான பரப்பளவைக் கொண்டது என்பது உலகிற்குத் துல்லியமாகக் காட்டப்பட்டுள்ளது. 

இது உலகளாவிய கல்விமுறை மற்றும் புவியியல் பார்வையில் ஒரு மிகப்பெரிய புரட்சியாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் பலத்த எதிர்ப்பையும் மீறி, மூன்றில் இரண்டு பங்கு நாடுகளின் பேராதரவுடன் இந்தத் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதால், இனிவரும் காலங்களில் சர்வதேச அளவில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இந்தப் புதிய வரைபடம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thank You Google

Thank You Google
Thanks