இந்தத் திட்டம் கடந்த ஆட்சிக் காலத்திலேயே தொடங்கப்பட்டதாகவும், பின்னர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. புதிய ஆட்சி அமைந்த பிறகு நிலம் கையகப்படுத்துவதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
முதலில் சுமார் 1,200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 3,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டினர்.
கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களில் பெரும்பாலானவை உப்பளப் பகுதிகள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அதிகாலை 6 மணி முதல் உப்பள தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இணைந்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"ஒரு பாரம்பரிய தொழிலை அழித்துவிட்டு மற்றொரு தொழிலை கொண்டு வரக்கூடாது" என்பதை வலியுறுத்தி அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கப்பல் கட்டுமானத் தளம் அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதிகள் அளிக்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், உப்பு உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் வீடு கட்டித் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுபோன்ற வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றுவதாகவும் அவர்கள் கூறினர்.
மேலும், தங்களது உரிமைகளுக்காக போராடி வரும் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பாரம்பரியமாக நடைபெற்று வரும் உப்பு உற்பத்தித் தொழிலை அழித்து, அதன் இடத்தில் கப்பல் கட்டுமானத் தளம் அமைக்கக் கூடாது என்பதே தங்களது முக்கிய கோரிக்கை என தெரிவித்த உப்பள தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக