யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் அந்நாட்டு அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதன்படி, மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் முறையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அரசுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்ட அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் இந்த விவகாரத்தை தீவிரமாக எழுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைவதற்குத் தனது ஆதரவை வழங்கும் என்று அவுஸ்திரேலியா முன்னர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான சரியான நேரம் இது.
முழுமையான தளம் பாதுகாக்கப்படுவதையும், மனித எச்சங்கள் மற்றும் சாட்சியங்களுக்கான சுயாதீனமான தடயவியல் சங்கிலிப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதையும் அவுஸ்திரேலிய அரசு தூண்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் செம்மணியில் இடம்பெற்ற மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த 19ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மொத்த எண்ணிக்கை 583 ஆக உயர்ந்துள்ளது.
எனினும், இவ்வளவு அதிகமான மனித எச்சங்கள் மீட்கப்பட்ட போதிலும் இலங்கை அரசாங்கம் இது குறித்து இதுவரை மௌனம் காத்தே வருகின்றது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையில் சுமார் 20 புதைகுழி தளங்களை ஆவணப்படுத்தியுள்ள போதிலும், அவற்றில் எதற்கும் இதுவரை முழுமையான மற்றும் வெற்றிகரமான விசாரணைகள் நடத்தப்படவில்லை.” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை நம்பகமான மற்றும் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதில் தொடர்ந்தும் தவறிழைத்துள்ள இலங்கை அரசாங்கம், உள்ளூர் பொறிமுறைகளில் தமிழ் சமூகம் எத்தகைய நம்பிக்கையையும் வைக்க முடியாது என அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டுள்ள தமிழ் ஏதிலிகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, உடனடியாகச் சுயாதீன விசாரணையொன்றை முன்னெடுப்பதோடு, சாட்சியங்களைப் பாதுகாத்து, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அந்தப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட நிலநடுக்கமே அது என என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம், நேபாள பகுதியில் பதிவான 4.4 ரிக்டர் அளவிலான நில நடுக்கம், இயல்பான நிலநடுக்கம் அல்ல.
நேபாளம் - சீனா எல்லையில் நிலநடுக்கம் ஏற்படவில்லை. பனி ஏரி உடைந்து வெள்ளமும், பாறைகளும் பள்ளத்தாக்கை நோக்கி அதிவேகத்தில் பாய்ந்ததில் 4.4 நில அதிர்வு பதிவாகி உள்ளது.
வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 579-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
காணாமல் போனவர்களில் 28 நாடுகளைச் சேர்ந்த 466 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்களும், 54 அமெரிக்கர்களும், பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேரும் அடங்குகின்றனர்.
திபெத் எல்லையை ஒட்டியுள்ள ரசுவா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை, இன்று (26) காலை போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட கடும் திடீர் வெள்ளம் அடித்து சென்றதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 165 பேர்.
இந்த திடீர் வெள்ளத்தால் வீதிகள், நீர்மின் திட்டங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நேபாள இராணுவம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 30-க்கும் மேற்பட்ட ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.
டஜன் கணக்கான பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசு அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கனால் தெரிவித்துள்ளார்.
தொடர்புகொள்ள முடியாதவர்களில் ரசுவாவில் (Rasuwa) உள்ள நேபாள பொலிஸார் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 44 பேரும் அடங்குகின்றனர்.
44 இராணுவத்தினரும், 28 பொலிஸாரும், 13 ஆயுதமேந்திய பொலிஸாரும், மின்சாரத் திட்டங்களில் பணிபுரியும் 60 பேரும் காணாமல் போனவர்களில் உள்ளடங்குவதாக அறிவித்துள்ளது.
ஆரம்ப மதிப்பீடுகளின்படி, 98.33 மில்லியன் டொலர்களுக்கும் அதிக பெறுமதியான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதுவரை 19 பாலங்கள் மற்றும் 40 கிலோமீற்றர் தூரமான வீதிகள் சேதமடைந்துள்ளதாக முதல்கட்ட மதீப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொண்டைமானாறு அருள்மிகு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் தேர்த் திருவிழா மற்றும் தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு, இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினூடாகச் செல்லும் பலாலி வீதியில் பக்தர்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் தரித்து நிற்கவும் இலங்கை இராணுவத்தினர் விசேட அனுமதி வழங்கியுள்ளனர்.
ஆலய மகோற்சவத்தின் சிகர நிகழ்வுகளான தேர்த் திருவிழா நாளைய தினம் வியாழக்கிழமையும் (2026 ஓகஸ்ட் 27), தீர்த்தத் திருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் (2026 ஓகஸ்ட் 28) நடைபெறவுள்ள நிலையில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினூடாகச் செல்லும் பலாலி வீதியானது கடந்த வருடம் குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடுகளுடன் மாத்திரம் திறக்கப்பட்டிருந்த போதிலும், மக்கள் நடந்து செல்வதற்கோ அல்லது வாகனங்களைத் தரித்து நிறுத்துவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலமானது இனங்காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுகிறது.
இன்று காலை கடற்தொழிலுக்கு சென்றவர்கள் குறித்த சடலத்தை கண்டுள்ளனர்.அதன்பின்னர் ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கினர்.
குறித்த சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் நேற்று கனமழை பெய்ததால் 397 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதுடன் 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று இடி, மின்னல், பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.
குறிப்பாக தென்கிழக்கு, மத்திய டெல்லி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் நீர் தேங்கி, நகரம் முழுவதும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
இதற்கிடையே, குருகிராமில் சோஹ்னா சாலையில் இஸ்லாம்பூர் கிராமத்துக்கு அருகே சுமார் இரண்டு அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதால், கிட்டத்தட்ட 4 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
397 விமானங்கள் தாமதம்: கனமழை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 397 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதுடன் 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் டெல்லி வரவிருந்த 3 சர்வதேச விமானங்கள் உட்பட 15 விமானங்கள் வேறு நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இவற்றில் 12 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், 2 விமானங்கள் சண்டிகருக்கும், ஒரு விமானம் லக்னோவுக்கும் திருப்பிவிடப்பட்டன. நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், சாலை பழுதுபார்க்கும் பணி காரணமாகவும் இன்று பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரியுமாறும், மாணவர்கள் வீட்டில் இருந்தே பாடம் கற்குமாறும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு குருகிராம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம், டெல்லியின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும், நொய்டா, குருகிராம், பரிதாபாத் ஆகிய பகுதிகளுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
டெல்லி – தேசிய தலைநகர் பகுதி, உத்தராகண்ட், ஒடிசா மற்றும் தெலங்கானா ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகலில் லேசான சாரல் மழைக்கும், நாளை நண்பகலுக்குப் பிறகு ஒருசில இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் தடைகளையும் தாண்டி, துணிச்சலுடனும் விடாமுயற்சியுடனும் கல்வியில் முன்னேறி வருவது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் (22) நடைபெற்ற, பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கும் நிகழ்வில் விசேட உரையாற்றிய பிரதமர் இதனை தெரிவித்தார்.
"இன்று எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும். சவால்கள், இடையூறுகள் மற்றும் நிராகரிப்புகளைத் தாண்டி, துணிச்சல், தன்னம்பிக்கை, திறமை மற்றும் விடாமுயற்சியால் இந்நிலையை அடைந்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களின் சாதனை பாராட்டுக்குரியது" எனப் பிரதமர் தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக இன்று வழங்கப்படும் உதவிகள், அவர்களின் துணிச்சலான பயணத்திற்கு மேலும் வலுசேர்ப்பதற்காகவே வழங்கப்படுகின்றன எனத் தெரிவித்த பிரதமர், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தமக்குப் பின்னால் வரும் மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதே இந்த உதவித் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் எனவும் குறிப்பிட்டார்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொண்ட கஷ்டங்கள், வேதனைகள் மற்றும் நிராகரிப்புகளைத் தாண்டி சாதித்திருப்பது பாராட்டுக்குரியது எனப் பிரதமர் தெரிவித்தார். அவர்களின் துணிச்சல், விடாமுயற்சி மற்றும் சாதனை, பின்னர் வரும் மாணவர்களுக்கு நம்பிக்கையையும் முன்மாதிரியையும் ஏற்படுத்த வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் சமூகத்திற்கு மதிப்புமிக்கவர்கள் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிகளவான மாற்றுத்திறனாளிகள் காணப்படுவது கடந்த காலத்தில் இடம்பெற்ற கவலைக்குரிய யுத்தத்தின் மிகப் பெரும் பாதிப்புகளில் ஒன்றாகும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மீண்டும் ஒருபோதும் அவ்வாறான ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் செயற்படுவதும், அவ்வாறான நிலைமைகள் உருவாகுவதற்கான காரணிகளை இல்லாதொழிப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதேவேளை, கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் இன்று அடைந்துள்ள நிலைக்கு அவர்களது பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கிய பங்களிப்பையும் பிரதமர் பாராட்டினார்.
ஜனாதிபதி நிதியம் கடந்த காலங்களில் சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் அனுபவித்தவர்களுக்கு மாத்திரம் உதவும் நிறுவனமாக இருந்த நிலைமையை மாற்றி, உண்மையில் உதவி தேவைப்படும் மக்களை அடையாளம் கண்டு, அவர்களது தேவைகளுக்கு ஏற்ப உதவிகளை வழங்கும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கு மிகவும் நெருக்கமான நிறுவனமாக மாற்றி, உண்மையில் உதவி தேவைப்படும் மக்களுக்கு நேரடியாக உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
கல்வித்துறைக்கு அரசாங்கம் மிகுந்த முக்கியத்துவம் வழங்கி வருவதாகத் தெரிவித்த பிரதமர், முன்பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான மாணவர்களின் கல்விப் பயணத்திற்குத் தேவையான பல்வேறு உதவித் திட்டங்களை ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.
இன்று பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்வியில் முன்னேறி வரும் மாணவர்களின் இளைய சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களுக்குப் பின்னால் வரும் மாணவர்களுக்குக் கல்வியைத் தொடர்வதற்கான பாதையை மேலும் இலகுவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு மேலும் இலகுவாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற முடியும் என்பது தொடர்பான முன்னோடித் திட்டங்களும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
"மாற்றுத்திறனாளிகளுக்கும் சமூகத்தின் ஏனையோருக்கு நிகரான சம வாய்ப்புகளும் சம உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். அவர்களைப் பற்றிய சமூகத்தின் பார்வையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.
ஒவ்வொரு மாற்றுத்திறனாளி மாணவரின் துணிச்சல், போராட்டம் மற்றும் வெற்றிக் கதைகள் மற்றவர்களுக்கு நம்பிக்கையையும் முன்மாதிரியையும் வழங்கும் வகையில் உலகிற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்" எனப் பிரதமர் தெரிவித்தார்.
இறுதியாக, மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு ஆதரவளித்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்தின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மத்திய சுவீடனின் ஃபேகர்ஸ்டா (Fagersta) நகரில் உள்ள பிரினெல் மேல்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற வாள்வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (21.08.2026) மதியம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
18 வயதுடைய இளைஞர் ஒருவர் வாளுடன் பாடசாலைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞரை அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கைது செய்துள்ளனர்.
கிட்டதட்ட 450 மாணவர்கள் கல்வி கற்கும் இந்தப் பாடசாலையில், கோடைக்கால விடுமுறைக்குப் பின்னர் பாடசாலை மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் குறித்த பாடசாலையின் முன்னாள் மாணவர் எனவும், அவர் தலைக்கவசம் அணிந்து வாளுடன் பாடசாலைக்குள் நுழைந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், அவருக்கு எதிராக ஏற்கனவே தாக்குதல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை உறுதியாக வெளியாகவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பாக சுவீடன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.