சனி, 1 ஆகஸ்ட், 2026

மீண்டும் பாரிய தாக்குதலுக்கு தயாரான அமெரிக்கா - இஸ்ரேல்!!

ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆயத்தமாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதல்கள் வரும் வார இறுதியில் மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

பொருளாதாரப் பாதிப்புகள் குறித்த கவலைகள் காரணமாக, திங்கட்கிழமை நிதிச் சந்தைகள் திறப்பதற்குள் இந்த தாக்குதல்களை முடித்துவிடுவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், இருப்பினும் உறுதியான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக இஸ்ரேலுக்குத் தெரிவிக்கப்பட்டு, அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தாலும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதுவரை இதற்கான இறுதி ஒப்புதலை வழங்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், முழுவீச்சிலான இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், ஈரான் மீதான தாக்குதலில் இணையுமாறு தங்களிடம் கேட்கப்படவில்லை என்றும் இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு மனைவியுடன் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகன்!

முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் புதல்வர் தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இருவரும் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் அவரது புதல்வருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதியின் மகனுக்கு எதிராக சமகாலத்திலும் தற்போதைய அரசாங்கமும் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றது.இவ்வாறான நிலையில் நாட்டிலிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளதாக குறித்த ஊடகங்கள் கோடிட்டுக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாலாஜாபாத் கனரக லாரி உரிமையாளர்களிடம் 6.30 லட்சம் அபராதம்!

வாலாஜாபாத் அருகே வாகன சோதனையின்போது, அதிக பாரம் ஏற்றி வந்த கனரக லாரி உரிமையாளர்களிடம் ₹6.30 லட்சத்தை அபராதமாக வசூலித்து வருவாய் துறை உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், திருமுக்கூடல், ஆர்ப்பாக்கம், மதுர், மாகறல், இளையனார் வேலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் கல்குவாரிகள் செயல்படுகின்றன. 

இந்த கல்குவாரிகளில் இருந்து கட்டுமான பணிகளுக்காக காஞ்சிபுரம், வாலாஜாபாத் செங்கல்பட்டு, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு நகர்புற பகுதிகளுக்கு எம்-சாண்ட், ஜல்லி கற்கள், மலை மண் உள்ளிட்டவைகள் கனரக லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகின்றன. இவ்வாறு, எடுத்து செல்லப்படும் லாரிகள் முறையாக தார்ப்பாய் போர்த்தி லாரி ஓட்டுநர்கள் இயக்குவதில்லை. 

இதனால், இருசக்கர வாகன ஓட்டிகளில் மற்றும் சாலை ஓரம் நடந்து செல்லும் பொதுமக்கள் நாள்தோறும் சிரமப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த நிலையில், நேற்று வாலாஜாபாத் அடுத்த வெண்குடி பகுதியில் வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் பிரபாகர், தாசில்தார் கருணாகரன், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் கனரக லாரிகள் மற்றும் காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத்தை நோக்கி சென்ற லாரிகளை ஆய்வு செய்தனர்.

அதில், பெரும்பாலான லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்ததும், தார்ப்பாய் இன்றி லாரியை இயக்கியதும் தெரியவந்தது.இதனையடுத்து, 10க்கும் மேற்பட்ட லாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடமிருந்து ₹6.30 லட்சம் அபராதம் விதித்தனர். 

மேலும், லாரி உரிமையாளர்களிடமும், ஓட்டுநர்களிடமும் லாரியை இயக்கும்போது கண்டிப்பாக அதிக பாரங்கள் ஏற்றக்கூடாது, தார்ப்பாய் இன்றி செல்லக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

வெள்ளி, 31 ஜூலை, 2026

சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் உள்பட 630 போலீசாருக்கு பதக்கம்.

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் பணியை சிறப்பித்து கவுரவிக்கும் வகையில் குடியரசு தலைவர் பதக்கம், ஒன்றிய உள்துறை அமைச்சரின் பதக்கம், முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டுக்கான பதக்கங்கள் வழங்கும் விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு 630 பேருக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக முதல்வர் விஜய் ராஜரத்தினம் மைதானம் வந்த போது, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் முதல்வர் விஜய்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் காவல்துறையின் பேண்டு வாத்திய இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து குதிரைப்படை, தீயணைப்புதுறை, தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு, கடலோர பாதுகாப்பு குழுமம், தமிழ்நாடு சிங்கப்பெண் சிறப்பு படை, சிறைத்துறை, கமாண்டோ படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார். 

பிறகு அகாஷ் ஜோசி ஐபிஎஸ் தலைமையில் நடந்த அலங்கார அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டார்.

மொராக்கோ எல்லையில் ராணுவத்தைக் களமிறக்கும் ஸ்பெயின்

மொராக்கோ எல்லையை ஒட்டியுள்ள ஸ்பெயினின் கட்டுப்பாட்டிலுள்ள செவுட்டா (Ceuta) பிராந்தியத்திற்குள் ஆயிரக்கணக்கான சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் அத்துமீறி நுழைய முயன்றதில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்துள்ளதைத் தொடர்ந்து, எல்லையில் சட்டத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்காகத் தனது முப்படை ராணுவப் பிரிவுகளை (Armed Forces) உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்த உள்ளதாக ஸ்பெயின் அரசாங்கம் அறிவித்துள்ளது. வியாழக்கிழமை வரை எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், பெருந்திரளான குடியேற்றவாசிகள் ஒன்றிணைந்து எல்லைப் பாதுகாப்பு வேலிகளைப் பலவந்தமாகத் தகர்த்துக்கொண்டு செவுட்டா பிராந்தியத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். எல்லையைக் கடக்க முயன்றபோது ஏற்பட்ட நெரிசல் மற்றும் மோதல் சம்பவங்களில் குறைந்தது 9 குடியேற்றவாசிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். செவுட்டா உள்ளூர் நிர்வாகம் விடுத்த அவசரக் கோரிக்கையை ஏற்று, ஸ்பெயினின் சிவில் கார்ட் (Civil Guard) காவல் படைக்கு ஆதரவாகவும் எல்லையின் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யவும் முப்படை ராணுவ வீரர்களை உடனடியாக அனுப்பவுள்ளதாக மாட்ரிட்டில் உள்ள மத்திய அரசு நேற்றிரவு (வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கைக்கு கிடைத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட கொள்கைக் கடன் திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.


அதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர், மத்திய கிழக்கு நெருக்கடியினால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தத்தைக் குறைப்பதற்கான மேலதிக நிதியுதவியாக ஒதுக்கப்பட்டுள்ளது.தொலைதூர மோதல் ஒன்றின் தாக்கம் காரணமாக எந்தவொரு குடும்பமும் மேலும் வறுமைக்குள் தள்ளப்படக் கூடாது என ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மாசாடோ காண்டா சுட்டிக்காட்டியுள்ளார். 

 மேலும், இலங்கையில் வேலைவாய்ப்புகளை விரிவாக்குதல், புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் வர்த்தகத்தை ஊக்குவித்தல் என்பன இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களில் அடங்குகின்றது.

இதன் கீழ் வர்த்தக அமைப்புகளை நவீனமயமாக்குதல், சிறு,நடுத்தர அளவிலான தொழில்துறைகளின் போட்டித்தன்மையை உயர்த்துதல், பொருளாதார வலயங்களுக்கு முதலீடுகளைக் கொண்டுவருதல் மற்றும் ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றுக்காகப் பல சீர்திருத்தங்கள் மேற்கொளளப்படவுள்ளன. 

இச்சீர்திருத்தங்கள் ஊடாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாஹிய பொருளாதார அதிர்ச்சிகளுக்கு இலங்கை பொருளாதாரம் சிறப்பாக முகங்கொடுக்கும் திறன் வலுவடையும் என ADB சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை கம்போடியாவிற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு கட்டான கொள்கலன் லொறிக்கு தீவைத்த மூவர் கைது!!

நீர்கொழும்பு - மினுவாங்கொட வீதியில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கொள்கலன் லொறிக்கு தீவைத்து சேதம் விளைவித்தமை தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20, 25 மற்றும் 26 ஆகிய வயதுடைய நீர்கொழும்பு, தாகொன்ன மற்றும் கிம்புலாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். 

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று (31) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். அத்துடன், அப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டு பொலிஸ் காவிலில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீர்கொழும்பு - மினுவாங்கொட வீதியின் 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்டை இடைப்பட்ட போலவலாட்ட பகுதியில் வீதியைக் கடக்க முற்பட்ட கொள்கலன் லொறியுடன், நீர்கொழும்பு நோக்கி அதிவேகமாகப் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இரு ஓட்டுநர்கள் உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 20 வயதுடைய நீர்கொழும்பு, தாகொன்ன பகுதியைச் சேர்ந்த இருவராவர். 

சம்பவம் நடந்த இடத்தில் உள்ள CCTV காணொளிகள் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில், கொள்கலன் லொறிக்குச் சேதம் விளைவித்ததில் தொடர்புடைய அனைத்துச் சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Thank You Google

Thank You Google
Thanks