ஞாயிறு, 26 ஜூலை, 2026

தெஹிவளை பெல்லன்வில படுகொலை பின்னணி அம்பலம்!

பெல்லன்வில உணவக உரிமையாளரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மின்னேரியா இராணுவ முகாமிலிருந்து துப்பாக்கிகளைக் கடத்திய சம்பவத்தின் சந்தேகநபர் எனத் தெரியவந்துள்ளது. பெல்லன்வில பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரை நேற்று (25) இரவில் சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை நவகமுவ பொது மயானத்திற்கு அருகில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். 


தெஹிவளை - பொரலஸ்கமுவ வீதியில் பெல்லன்வில நடைபாதை நுழைவாயிலுக்கு எதிரில் உள்ள உணவகத்திற்கு அருகில் நேற்று இரவு 7.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், குறித்த உணவக உரிமையாளரை இலக்கு வைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த வேளையில், உணவக உரிமையாளர் உணவகத்திற்கு வெளியே சிகரெட் புகைத்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அவரது வயிற்றுப் பகுதியில் காயமேற்பட்டதையடுத்து, அவர் உணவகத்திற்குள் ஓடிச் சென்றுள்ளார். 

பின்னர் அவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், காயங்களின் தீவிரத்தன்மை காரணமாக உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் உணவகத்தின் உரிமையாளரான மல்லவ ஆரச்சிகே நெல்சன் சுதத் அமரசிங்க எனப்படும் 55 வயதுடைய நபராவார். நேற்று இரவே சம்பவ இடத்திற்கு வந்த பொரலஸ்கமுவ பொலிஸார், கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கின. 

 முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழந்த உணவக உரிமையாளர் 'கொஸ் மல்லி' எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் உறவினர் எனத் தெரியவந்துள்ளது. அதற்கமைய, கொஸ் மல்லியின் எதிர்த்தரப்பான 'சண்டோ' அல்லது 'அசங்க' என்பவர்களே இத்துப்பாக்கிச் சூட்டை வழிநடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விசாரணைகளைத் தொடங்கிய பொலிஸார், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் குறித்த தகவல்களை ஏனைய பகுதி பொலிஸ் சோதனைக் சாவடிகளில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்தனர். அதற்கமைய, குறித்த தகவல்களுக்குப் பொருத்தமான மோட்டார் சைக்கிளும் இரு நபர்களும் நவகமுவ பகுதியில் நடமாடுவதைக் கண்ட பொலிஸ் அதிகாரிகள் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளனர். 

அப்போது, குறித்த இருவரும் தங்கள் மோட்டார் சைக்கிளை நவகமுவ, நிஸ்சரண சித்பிம பொது மயானத்திற்கு அருகில் நிறுத்திவிட்டு, முகமூடிகள் மற்றும் கையுறைகளைக் கழற்றிவிட்டு அவ்விடத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்ததைக் கண்டறிந்துள்ளனர். 

இரு சந்தேகநபர்களையும் கைது செய்த பொலிஸார் சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அவர்களின் கைபேசிகளைப் பரிசோதித்தபோது பெல்லன்வில கொலை தொடர்பான குரல் பதிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கொலைச் சம்பவம் தொடர்பில் அவ்விருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மேலும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி பெறப்படவுள்ளது.

வெள்ளி, 24 ஜூலை, 2026

செம்மணியில் மழைக்கவசத்துடன் (Raincoat) சிறுவர் ஒருவரின் எலும்புக்கூடு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வாய்வில் மழைக் கவசத்துடன் (Raincoat) ஒரு சிறுவருடைய எலும்புக்கூட்டு அடையாளம் காணப்பட்டது.

நெதன்யாகுவின் கைது குறித்த சர்வதேசத்தின் பார்வை!

சர்வதேச மன்னிப்பு சபையின் ஆராய்ச்சி, ஆதரவு, கொள்கை மற்றும் பிரசாரப் பிரிவின் மூத்த இயக்குநரான எரிக்கா குவேரா ரோசாஸ், இஸ்ரேலிய பிரதமருக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

 இஸ்ரேல், பலஸ்தீனத்திற்கு எதிராக மேற்கொண்டு வரும் யுத்த குற்றங்களை மேற்கோள்காட்டி இந்த அழைப்பை அவர் விடுத்துள்ளார். சமீபத்தில் நியூயார்க் மேயர் சோஹ்ரான் மம்தானி, நெதன்யாகுவைக் கைது செய்து காவலில் வைக்க அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் இதனைத்தொடர்ந்து வந்துள்ள எரிக்கா குவேராவின் அறிக்கை, வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.2024-ல் காசா மீது இஸ்ரேல் நடத்திய போரின்போது போர்க்குற்றங்களைச் செய்ததாக நெதன்யாகு மீது குற்றம் சாட்டி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பித்துள்ளது.

பிரிட்டன் வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சராக உமா குமரன் !

பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் (FCDO) நாடாளுமன்ற இராஜாங்க அமைச்சராகவும் (Parliamentary Under-Secretary of State), ஆளும்கட்சியின் உதவி கொறடாவாகவும் (Assistant Whip) தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

பிரித்தானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, இந்த நியமனம் 2026 ஜூலை 22 ஆம் திகதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

கடந்த 2024 ஜூலை மாதம் நடைபெற்ற பிரித்தானிய பொதுத்தேர்தலில் ‘ஸ்ட்ராட்ஃபோர்ட் அண்ட் போ’ (Stratford and Bow) தொகுதியில் தொழிற் கட்சி (Labour Party) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உமா குமரன், பிரித்தானிய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் வம்சாவளி உறுப்பினர் என்ற வரலாற்றைப் படைத்தார். 

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிக் குடும்பத்தைச் சேர்ந்த இவரின் பெற்றோர்கள், பிரித்தானியாவில் தஞ்சமடைந்தவர்கள் ஆவர். 

அனுபவம்: அரசியல் மற்றும் பொதுக் கொள்கை துறைகளில் முதுகலை பட்டம் பெற்றுள்ள உமா குமரன், லண்டன் மேயரின் மூத்த ஆலோசகராகவும், சர்வதேச காலநிலை அமைப்புகளின் அரசதந்திர அதிகாரியாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 

வெளியுறவுத்துறையில் இவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த முக்கியப் பதவி, பிரித்தானிய வாழ் தமிழ் மக்களிடையே பெருமகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இணைய சேவை முடக்கம்.

டெல்லி ஜந்தர் மந்தர் சுற்றுவட்டார பகுதியில் இணைய சேவை முடக்கப்பட்டதற்கு எதிரான பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று அவசர வழக்காக விசாரிப்பதற்கு ஏற்றுக்கொண்டுள்ளது. 

 நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்களைக் கண்டித்து, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜூன் 20 முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இணைய சேவை மற்றும் மெட்ரோ சேவை முடக்கப்பட்டது. மூன்று நாட்களாக ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள 1.5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மொபைல் இணைய சேவைகளை முடக்கப்பட்டது. 

இணைய முடக்கத்தால் ஜந்தர் மந்தர் மற்றும் அதன் அருகிலுள்ள கன்னாட் பிளேஸ் போன்ற வணிகப் பகுதிகளில் கடைகள், உணவகங்கள் மற்றும் அலுவலகங்கள் மாலை 6:30 மணிக்கே மூடப்பட்டு வணிக நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வலியுறுத்தி இந்த மனுவை பொதுநல மனுவாக மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!!

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்துள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முன்னிலையாகாத காரணத்தினாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்பதுடன், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரது பிணையாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. இதற்கமைவாக, குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

டெங்கு மரணங்கள் 59 ஆக உயர்வு!!

நாட்டில் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அந்த பிரிவு வௌியிட்டுள்ள புதிய அறிக்கையில் 80,114 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஆண்டின் இதுவரையில் 16,950 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

அதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 16,021 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதுதவிர ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5534 பேரும், கண்டியில் 5437 பேரும், களுத்துறையில் 5245 பேரும் இரத்தினபுரியில் 4482 பேரும், காலியில் 4430 பேரும் டெங்கு நோயினால் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர். 

 2026 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் 24,739 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Thank You Google

Thank You Google
Thanks