சனி, 18 ஜூலை, 2026

ஹரக்கட்டா இலஞ்ச விவகாரம்-பிக்கு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200 இலட்சம் ரூபா பணத்தின் ஒரு பகுதி, பிக்கு ஒருவர் ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு இன்று (17) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. 

 குறித்த இலஞ்ச விவகாரம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சரித் அபேசிங்க, ரகித ராஜபக்ஷ மற்றும் அருண வருஷஹென்னதிகே ஆகிய சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு இன்று அழைக்கப்பட்ட போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. 

முன்வைக்கப்பட்ட விபரங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான், மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 

 நாட்டின் முன்னணி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் 'ஹரக்கட்டா 'என்ற நதுன் சிந்தக' தடுப்புக் காவலில் இருந்தபோது அவருக்குச் சலுகைகளை வழங்குவதற்காக 1,200 இலட்சம் ரூபா இலஞ்சப் பணத்தைப் பெற்றதாக, முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் அருண வருணஹென்னதிகே ஆகிய சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

 இதன்போது, விசாரணை தொடர்பான மேலதிக அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இலஞ்சம் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் உதவி சட்டப் பணிப்பாளர் அனுஷா சம்பந்தப்பெரும, சர்சைக்குரிய இச்சம்பவம் குறித்து ஹரக்கட்டா என்ற நதுன் சிந்தகவின் மனைவியான மஹேஷிகா மதுவந்தி வழங்கிய வாக்குமூலம் தற்போது விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். 

 "ஐயா, கடந்த வழக்குத் தவணையின் போது நான் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தேன், இந்தச் சந்தேகநபர்களுக்கு இலஞ்சப் பணத்தை வழங்கியதாகக் கூறப்படும் ஹரக்கட்டா என்ற நதுன் சிந்தகவின் மனைவியான மஹேஷிகா மதுவந்தியிடமிருந்து வாக்குமூலம் ஒன்றைப் பெற எதிர்பார்ப்பதாக. அதற்கமைய, மஹேஷிகா மதுவந்தி இச்சம்பவம் குறித்து தனக்குக் கூற வேண்டிய அனைத்து விபரங்களையும் குறிப்பிட்டு வழங்கிய வீடியோ வாக்குமூலம் அடங்கிய இறுவட்டு (CD) தற்போது நமக்குக் கிடைத்துள்ளது. 

அதேபோன்று, குறித்த இலஞ்சப் பணம் வழங்கப்பட்டதன் பின்னர் அதன் நோக்கங்கள் நிறைவேறாததால், அது குறித்து வினவி இந்தச் சந்தேகநபர்களுடன் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசியும் தற்போது விசாரணை அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

" "இந்த இலஞ்ச விவகாரத்துடன் தொடர்புடைய ஹெர்பி என்ற நிர்மல பண்டார என்பவர் ஆரம்பத்தில் வழங்கிய வாக்குமூலத்தில், முதலாவது சந்தேகநபரான சரித் அபேசிங்க இலஞ்சப் பணம் குறித்துப் பேசுவதற்காக இந்தியாவின் இருந்தே தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும், அந்த நேரத்தில் மற்ற இரு சந்தேகநபர்களும் அவருடன் இருப்பதாக சரித் அபேசிங்க கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

" "அதற்கமைய, அது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த மூன்று சந்தேகநபர்களும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 03 ஆம் திகதி ஒரே விமானத்தில் இந்தியாவிற்குச் சென்று, பின்னர் மூவரும் ஒன்றாக 2023 மார்ச் 07 ஆம் திகதி நாட்டிற்குத் திரும்பியுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் ஹெர்பி என்பவரினதும் இந்த மூன்று சந்தேகநபர்களினதும் தொலைபேசி அறிக்கைகளைப் பகுப்பாய்வு செய்த போது, ஹெர்பி கூறும் கதை உண்மை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

" என்றார். இதன்போது, விசாரணையில் வெளிப்பட்ட சந்தேகநபர்களின் தொலைபேசித் தொடர்புகள் மற்றும் சந்தேகநபர்களுடன் தொடர்புகளைப் பேணிய பிக்கு ஒருவர் குறித்தும் இலஞ்சம் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு விபரங்களை அறிக்கை செய்தது. 

"ஐயா, இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகப் பெயர்கள் குறிப்பிடப்பட்டவர்களுக்கு இடையே மாத்திரம் 1,300 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் பரிமாறப்பட்டுள்ளமை தற்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதேபோன்று, இந்த இலஞ்ச விவகாரத்தில் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாகப் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன." "இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தில் ஒரு பகுதி, இந்தச் சந்தேகநபர்களுடன் தொடர்புடைய பிக்கு ஒருவர் ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்குச் சென்றுள்ளதாகத் தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.

குறித்த பிக்கு யார் என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அது குறித்த விபரங்களை உறுதிப்படுத்திய பின்னர் அடுத்த தவனையில் நீதிமன்றத்திற்கு அறிக்கை செய்கின்றோம்." "அத்துடன் இந்த மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக மேலும் ஒரு இலஞ்ச விவகாரம் குறித்த முறைப்பாடு இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளது. 

அது குறித்தும் தற்போது விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது." என்றார். இதனையடுத்து, சந்தேகநபரான சரித் அபேசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நெவில் அபேரத்ன பிணைக் கோரிக்கையை முன்வைத்தார்.

 "ஐயா, ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் 149(1) பிரிவின் கீழ் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படும் இலஞ்ச வழக்கின் வழக்குப் பொருளாக, இலஞ்சமாகப் பெறப்பட்ட பணம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேபோன்று, இலஞ்சப் பணத்தைப் பெறும் போதே கைது நடவடிக்கை இடம்பெற்றிருக்க வேண்டும்." "ஆனால் இங்கு அவ்வாறான எதுவும் முன்வைக்கப்படவில்லை. 

அதேபோன்று இவ்வழக்கின் சாட்சியாளர்களாக இருப்பவர்கள் அனைவரும் போதைப்பொருள் கடத்தல்களுடன் பெயர்கள் குறிப்பிடப்பட்டவர்கள். இவற்றைச் சுயாதீன சாட்சியங்களாகக் கருத முடியாது. 

எனது கட்சிக்காரரின் 2 1/2 வயதுடைய மூன்று இரட்டைப் பிள்ளைகளில் (Triplets) ஒரு பிள்ளை, தற்போது தந்தையைப் பார்க்காத காரணத்தினால் பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று அந்த வயதுடைய மூன்று பிள்ளைகளை ஒன்றாகக் கவனிப்பது தாய்க்குப் பெரும் பிரச்சினையாக உள்ளது.

" "அத்துடன் அவருக்கு இருக்கும் இதய நோய் நிலைமைக்குத் தினசரி சிகிச்சை பெறாவிடின் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும். இவ்விடயங்கள் அனைத்தையும் விசேட காரணங்களாகக் கருதி எனது கட்சிக்காரருக்குப் பிணை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்." என்றார். 

 அதேபோன்று, சந்தேகநபரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நலிந்த இந்ததிஸ்ஸவும் பிணைக் கோரிக்கையை முன்வைத்தார். "ஐயா, ஒரு குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார், 

எனது கட்சிக்காரரின் தந்தையான விஜயதாச ராஜபக்ஷ நீதியமைச்சராகப் போதைப்பொருள் தொடர்பாக மேற்கொண்ட சட்டத் திருத்தங்கள் காரணமாகவே, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பெருமளவானோர் வெளியில் வர முடியாமல் உள்ளே இருக்கிறார்கள் என்று. அதாவது ஐயா, அவர்கள் எனது கட்சிக்காரர் மீது வெறுப்பு கொண்டுள்ளனர். 

 "எனவே இவருக்குச் சிறைச்சாலைக்குள் உயிராபத்து உள்ளது. அடுத்த விடயம் என்னவெனில், எனது கட்சிக்காரர் கடுமையான 'ஸ்லீப் அப்னியா' (Sleep Apnea) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இரவு நேரத்தில் அவரது ஒக்ஸிஜன் அளவு மிகவும் குறைந்த மட்டத்திற்குச் சரிவடையும். கார்பன் டை ஆக்சைடு அளவு மிக உயர்வாக அதிகரிக்கும். திடீரென சுவாசம் நின்றுவிடும். சுவாசம் நின்றால் மீண்டும் வராமல் போகக்கூடும்." "இதன் காரணமாக அவர் 'சிபெப்' (CPAP) இயந்திரத்தை தினசரி இரவில் பயன்படுத்துகின்றார். 

சிறைச்சாலைக்குள் அதனைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அவருக்கு இல்லை. நீண்ட காலத்திற்குச் சிகிச்சை கிடைக்காவிடின் அவர் மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கு ஆளாக நேரிடும். இந்த விசாரணை இறுதிப் பகுதிக்கு வந்துள்ளதால், இவரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைத்து மேற்கொள்வதற்கு எந்த விசாரணையும் எஞ்சியிருக்கவில்லை. 

எனவே இவை அனைத்தையும் விசேட காரணங்களாகக் கருதி எனது கட்சிக்காரரைப் பிணையில் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்." என்றார். முன்வைக்கப்பட்ட அனைத்து விபரங்களையும் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, சந்தேகநபர்கள் தொடர்பான பிணைக் கோரிக்கை மீதான உத்தரவை எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வழங்குவதற்குத் தினம் குறித்து, அதுவரை மூன்று சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இலங்கை ரயில் சேவைகளில் பெரும் நெருக்கடி ஏற்படும் அபாயம்!

ரயில்வே திணைக்களத்தின் வசமுள்ள ரயில் இயந்திரங்கள் (Engines) மற்றும் ரயில் இயந்திர வலு தொகுதிகள் (Power Sets) குறைவடைந்துள்ளதன் காரணமாக, ரயில் சேவைகளில் கடுமையான நெருக்கடி ஏற்படக்கூடும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையை சீர்செய்து, தற்போதுள்ள ரயில் நேர அட்டவணைக்கு அமைவாக சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர சுட்டிக்காட்டியுள்ளார். 2023ஆம் ஆண்டளவில் 106 ஆகக் காணப்பட்ட மொத்த ரயில் இயந்திர தொகுதி இருப்பு, 3 வருடங்களின் பின்னர் இன்று 98 ஆகக் குறைவடைந்துள்ளதுடன், 8 இயந்திரங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

 2023ஆம் ஆண்டு நடைமுறையிலிருந்த ரயில் நேர அட்டவணையின்படி, சுமார் 450 ரயில் சேவைகள் இயக்கப்பட்டதுடன், அந்த சேவைகளுக்காக ரயில்வே திணைக்களத்திற்கு 74 இயந்திரங்கள் தேவைப்பட்டிருந்தன. இருப்பினும், அவ்வாறானதொரு எண்ணிக்கையிலான சேவைகளை இயக்குவதற்கு, அந்த காலப்பகுதியில் ரயில்வே திணைக்களத்திடம் இயக்கத்திற்கு உகந்த நிலையில் 68 இயந்திரங்கள் மாத்திரமே இருந்தன. 

இன்று அந்த இயந்திரங்களின் எண்ணிக்கையும் 49 ஆகக் குறைவடைந்துள்ளது. இதேவேளை, 2023ஆம் ஆண்டளவில் ரயில்வே திணைக்களத்திடம் 109 ரயில் ரயில் இயந்திர வலு தொகுதிகள் (Power Sets) இருந்த நிலையில், இந்த ஆண்டில் அது 106 ஆகக் குறைவடைந்துள்ளது. இதன்படி, 3 ரயில் இயந்திர வலு தொகுதிகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. 


எவ்வாறாயினும், தற்போதைய சேவைகளை வழங்குவதற்கு 88 ரயில் இயந்திர வலு தொகுதிகள் அவசியமாகின்றன. 2023ஆம் ஆண்டில் ரயில்வே திணைக்களத்திடம் இயங்கு நிலையில் இருந்த ரயில் இயந்திர வலு தொகுதிகளின் எண்ணிக்கை 78 ஆகும். அது தற்போது 52 ஆகக் குறைவடைந்துள்ளது. 

இந்த சேவைகளை தடையின்றி வழங்குவதற்கு திணைக்களத்திடம் 26 ரயில் இயந்திர வலு தொகுதிகளின் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கமைய, ஒட்டுமொத்தமாக 2023ஆம் ஆண்டில் 261 ஆகக் காணப்பட்ட ரயில் இயந்திரங்கள் மற்றும் ரயில் இயந்திர வலு தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையிலிருந்து 19 நீக்கப்பட்டு, 2026ஆம் ஆண்டளவில் அதன் மொத்த இருப்பு 242 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. 

 எனவே, நிலவும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கசுன் சாமர மேலும் தெரிவித்துள்ளார்.

7ஆவது நாளாகவும் ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!

தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் "முடிவுக்கு வந்துவிட்டது" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக ஏழாவது இரவாகவும் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் படைகள் ஈரானின் "கண்காணிப்பு தளங்கள், இராணுவ தளவாட உள்கட்டமைப்புகள், நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடல்சார் திறன்களை" தாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 

 இத்தாக்குதல்களுக்குப் பதிலடியாக, குவைத் உள்ளிட்ட பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை இலக்கு வைத்து தாக்கியதாக ஈரான் உரிமை கோரியுள்ளது. "ஈரானிய ஆக்கிரமிப்பைத்" தொடர்ந்து, தங்கள் நாட்டு வான் பாதுகாப்புப் படையினர் "பகைமைமிக்க ஏவுகணை மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடித்ததாக" குவைத் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஒரே இரவில் தங்கள் வான்பரப்புக்குள் ஏவப்பட்ட ஈரானின் 10 ஏவுகணைகளைத் தடுத்து அழித்ததாக ஜோர்தான் இராணுவமும் தெரிவித்துள்ளது. 

இதனால் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. "அமெரிக்கப் படைகள் இத்தாக்குதலில் போர் விமானங்கள், வான்வழி ட்ரோன்கள், போர்க்கப்பல்கள் மற்றும் பிற இராணுவக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தியதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

வெள்ளி, 17 ஜூலை, 2026

காணாமல் ஆக்கப்பட்டோரின் வலி எனக்கும் தெரியும்- டக்ளஸ்

ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பூர்வீகக் காணிகளை உத்தியோகபூர்வமாக விடுவித்திருந்தோம். 

தொடர்ந்தும் மேலதிகக் காணிகளை விடுவிக்க இருந்த சூழலில் திடீரெனத் தேர்தல் அறிவிக்கப்பட்டமையால், எம்மால் அந்தப் பணிகளை முழுமைப்படுத்த முடியாமல் போய்விட்டது” என முன்னாள் கடற்றொழில் அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) பொதுச்செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் பிரதான தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார். 

தற்போதைய புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காணி விடுவிப்புக் கொள்கை குறித்து குற்றஞ்சாட்டிய டக்ளஸ் தேவானந்தா கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் சிவிலியன்களின் நடமாட்டமே இன்றி உயர் பாதுகாப்பு வலயங்களாக (High Security Zones) முடக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாமே அப்போதைய அரசாங்கங்களுடன் தொடர்ச்சியாகப் பேசி உத்தியோகபூர்வமாக விடுவித்து மக்கள் வசம் ஒப்படைத்திருந்தோம்.

” எனத் தொிவித்தாா். கடந்த ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதியில், ராணுவத்தினர் சிவில் மக்களிடம் மீள ஒப்படைப்பதற்கு முழுமையாகச் சம்மதம் தெரிவித்திருந்த குறிப்பிட்ட எல்லைக் காணிகளைக் கூட, ஆட்சிக்கு வந்துள்ள தற்போதைய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் இதுவரை மக்களிடம் மீளக் கையளிக்காமல் பாராமுகமாகவே உள்ளது என அவர் சாடினார். 

 காணாமல் ஆக்கப்பட்டோரின் உன்னதப் பிரச்சினைக்குத் தமிழ் அரசியல் தளத்தில் முதன்முதலில் தீர்வைத் தேடியது ஈ.பி.டி.பி (EPDP) மாத்திரமே எனத் தெரிவித்த அவர், அது குறித்த வரலாற்றுத் தரவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும், மிருசுவில் படுகொலை (Mirusuvil Massacre), கிருஷாந்தி படுகொலை மற்றும் சாரதாம்பாள் படுகொலை உள்ளிட்ட கொடூரச் சம்பவங்களின் உண்மைகளைத் தங்களது கட்சியே வெளிப்படுத்தியதுடன், சாட்சிகளைப் பாதுகாப்பாகக் கொழும்புக்கு அழைத்துச் சென்று நீதிமன்றங்களில் சாட்சியமளிக்க வைத்ததாகவும் குறிப்பிட்டார். 

 இத்தகைய மனித உரிமைச் செயற்பாடுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத விடுதலைப் புலிகள் அமைப்பினர், பின்நாட்களில் அரசியல் பழிவாங்கலுக்காகக் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு ஈ.பி.டி.பியே காரணம் எனப் பொய்களைப் பரப்பினர். 

இதில் உண்மை இருக்குமாயின் தாராளமாக நீதிமன்றங்களை நாடி நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனச் சவால் விடுத்தார். காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையைத் தீர்க்கத் தாம் முயன்ற காலத்தில், “கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிகொண்டது” போல, சில சுயநலத் தமிழ் அரசியல் தரப்புகள் இப்பிரச்சினையைத் தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காகக் கையாண்டு, இன்றுவரை தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையாகவே முடக்கி வைத்துள்ளனர் என டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

வளை​குடா நாடு​களின் உள்​கட்டமைப்​பை அழிப்போம்- ஈரான் ராணுவம்.

வளைகுடா நாடுகளின் உள்கட்டமைப்புகளை அழித்து தரைமட்டமாக்குவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 ஓமன் கடல் வழியாக சென்ற எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதன்காரணமாக தற்காலிக அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 8-ம் தேதி அறிவித்தார். இதன்பிறகு அமெரிக்கா, ஈரான் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியின் இரு புறத்தையும் அமெரிக்க போர்க் கப்பல்கள் முற்றுகையிட்டு உள்ளன. 

ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் அந்நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ராணுவ தளங்கள், ஏவுகணை, ட்ரோன் உற்பத்தி ஆலைகள், துறைமுக பகுதிகளை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் நேற்று குண்டுமழை பொழிந்தன. 

அமெரிக்க தாக்குதலில் ஈரானில் இதுவரை 35 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கரீபியன் பகுதி நாடான கோர்சாவை சேர்ந்த எண்ணெய் கப்பல் நேற்று ஈரானின் கார்க் தீவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலின் இன்ஜின் பகுதியை குறிவைத்து அமெரிக்க போர் விமானம், ஏவுகணை தாக்குதலை நடத்தியது. 

இதனால் அந்த கப்பல் நடுவழியில் நின்றது. மேலும் ஈரான் துறைமுகம் நோக்கி சென்ற பல்வேறு எண்ணெய் கப்பல்களை அமெரிக்க போர்க்கப்பல்கள் இடைமறித்து திருப்பி அனுப்பின. அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்தை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசியது. 

மேலும் ஜோர்டான், பஹ்ரைன், இராக், குவைத் நாடுகளில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் இப்ராகிம் ஸோல்பகாரி, டெஹ்ரானில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஹார்முஸ் ஜலசந்தி ஈரானுக்கு சொந்தமானது. இந்த ஜலசந்தியை யாரும் உரிமை கொண்டாட முடியாது. 

இதை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். ஈரானின் உள்கட்டமைப்புகளை அமெரிக்கா அழித்தால் வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளின் அனைத்து உள்கட்டமைப்புகளையும் அழித்து தரைமட்டமாக்குவோம். 

எங்களது முழு பலத்தையும் பயன்படுத்தி எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவோம். இவ்வாறு இப்ராகிம் ஸோல்பகாரி தெரிவித்தார். வளைகுடா நாடுகளின் எண்ணெய் வயல்கள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், சேமிப்பு கிடங்குகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் ராணுவம் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனால் வளைகுடாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

விசா கட்டுப்பாடு மேலும் இறுக்கிய அமெரிக்கா.

அதற்கமைய, வெளிநாட்டு மாணவர்கள், கலாசார பரிமாற்ற விருந்தினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான விசாக்களின் கால எல்லையைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்தின் இந்த புதிய விதியானது, சர்வதேச மாணவர்களுக்கான 'F' விசாக்கள், கலாசார பரிமாற்றத் திட்டங்களில் வருகை தருவோர் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் 'J' விசாக்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான 'I' விசாக்கள் ஆகியவற்றிற்கு ஒரு நிலையான காலப்பகுதியை உருவாக்குவதாக அமைந்துள்ளது. 

இந்த விசாக்கள் தற்போது அந்தந்தப் பாடநெறித் திட்டங்களின் காலம் அல்லது அமெரிக்கா அடிப்படையிலான வேலைவாய்ப்புக் காலம் வரை வழங்கப்பட்டு வருகின்றன. 

காங்கிரஸின் மீளாய்வுக்கு உட்பட்டு, கூட்டாட்சிப் பதிவேட்டில் இது வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது. 

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2025 ஜனவரியில் பதவியேற்ற பின்னர் பரந்த அளவிலான குடியேற்ற ஒடுக்குமுறையைத் தொடங்கினார். இதன் சமீபத்திய நடவடிக்கையாக சர்வதேச மாணவர்கள், பரிமாற்றப் பணியாளர்கள் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு புதிய தடைகளை ஏற்படுத்துகின்றது. 

சட்டப்பூர்வ குடியேற்றம் மீதான கண்காணிப்பை அதிகரித்துள்ள ட்ரம்ப் நிர்வாகம், பல்கலைக்கழக மாணவர்களின் கருத்தியல் பார்வைகள் காரணமாக அவர்களின் மாணவர் விசாக்கள் மற்றும் கிரீன் கார்டுகளை இரத்து செய்துள்ளதுடன், இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோரின் சட்டப்பூர்வ அந்தஸ்தையும் பறித்துள்ளது. 

புதிய ஒழுங்குமுறையின் கீழ், மாணவர் மற்றும் பரிமாற்ற விசா காலங்கள் நான்கு ஆண்டுகளுக்கு மேல் இருக்காது. தற்போது பல ஆண்டுகள் நீடிக்கக்கூடிய ஊடகவியலாளர்களுக்கான விசா, அதிகபட்சமாக 240 நாட்கள் வரையோ அல்லது சீனப் பிரஜைகளின் விஷயத்தில் 90 நாட்கள் வரையோ மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

முல்லேரியா - முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

 அவர் தமக்கு தாமே துப்பாக்கிச் சூட்டை ஏற்படுத்தி தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 1986ம் ஆண்டு உதவி பயிற்சி பொலிஸ் அத்தியட்சகராக, பொலிஸ் சேவையில் இணைந்துகொண்ட சி.டி.விக்ரமரத்ன், 34 வருடங்களுக்கும் அதிக காலம் பொலிஸ் சேவையில் ஈடுபட்டிருந்தார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து, பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட நிலையில் பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார். 

அதன்பின்னர் ஒரு வருடமும் 7 மாதங்களும் குறித்த பதவியை வகித்து வந்ததுடன் பின்னர் 35 வது பொலிஸ் மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதியுடன் அவர் தமது கடமைகளில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஓய்வுப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thank You Google

Thank You Google
Thanks