புதன், 15 ஜூலை, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்-மொத்த மரணங்கள் 31

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவற்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதிகரிக்கும் மரணங்களின் எண்ணிக்கை: கடந்த ஜூலை மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்திற்குள் இரு கைதிக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், பின்னர் பெரும் வன்முறையாக வெடித்தது. இச்சம்பவத்தில் நேற்று (13) மற்றும் இன்று (14) அதிகாலை வேளையில் 25 மற்றும் 39 வயதுடைய இரண்டு இளம் சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 

தொடரும் சிகிச்சைகள்: ஏற்கனவே இந்த மோதல்களின் போது 21 சிறைக்கைதிகள் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது அதிகாரிகளின் மரணங்களையும் சேர்த்து ஒட்டுமொத்த மரணங்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. 

இவ்வதிரடி மோதலில் படுகாயமடைந்த மேலும் சில சிறைக்கைதிகளும், காவற்துறை மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இச்சம்பவம் குறித்து காவற்துறையினர் மற்றும் உயர்மட்டக் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தென்தாமரைகுளம் சிறை காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சபரிவர்மன்!!

நாகர்கோவில் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றதாகக் கூறி சபரிவர்மன்(34) என்ற இளைஞரை தென்தாமரைகுளம் போலீசார் ஜூலை 9 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சபரிவர்மன் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் அவர் சிறையில் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். 

உறவினர்கள் சிறை காவலர்கள் அவரை அடித்து கொலை செய்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நேற்று அவரது உடல் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழு பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பின் நீதிபதி நேற்று சிறைச்சாலையிலும் விசாரணை நடத்தினார். 

 சபரிவர்மனின் 4 பக்க பிரேதப் பரிசோதனை அறிக்கை நேற்று இரவு அவரது உறவினர்களிடம் அளிக்கப்பட்டது. அதில் சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறையில் சிறை காவலர்கள் அடித்து கொலை செய்ததும் உறுதி செய்யப்பட்டது. நேற்று இரவு சித்ரவதை மற்றும் படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், தலைமைக் காவலர் திருமலை நம்பி சுரேஷ், வார்டன்கள் சிவகுமார் மற்றும் ஜெகன் ஆகிய மூன்று சிறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இதனை தொடர்ந்து சபரிவர்மனின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து போராடி வருகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

சபரிவர்மனின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கை முன் வைத்துள்ளனர். அதாவது பாதிக்கப்பட்ட சபரிவர்மனின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றைய வானிலை !!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இதேவேளை, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெப்பமான வானிலை குறித்த எச்சரிக்கை அறிவித்தல் நேற்று (14) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.

 அதற்கமைய, சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படக்கூடும்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.யின் சகோதரர் கைது!!

பண மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். 


மதுவரி அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி, வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 27,500,000 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, அதன் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். 

அதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் நேற்றைய தினம் (14) காலை ஹங்குரன்கெத்த பகுதியில் வைத்து ஜெயலத் பண்டார திசாநாயக்கவை கைது செய்துள்ளனர். 

 58 வயதுடைய சந்தேகநபரான அவரை இன்றைய தினம் (15) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செவ்வாய், 14 ஜூலை, 2026

யோஷித ராஜபக்ஷவின் பணமோசடி வழக்கு-காதலி யசரா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள பணமோசடி வழக்கு விசாரணையில், முன்னாள் CSN ஊடக நிறுவனத்தின் தலைவியும் அவருடைய முன்னாள் காதலியுமான யசரா அபேநாயக்க கொழும்பு உயர் நீதிமன்றில் முக்கிய சாட்சியமளித்துள்ளார். 

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். நீதிமன்றில் யசரா அபேநாயக்க அளித்த சாட்சியம்: “யோஷித ராஜபக்ஷ கடற்படை அதிகாரியாகப் பணியாற்றிய காலப்பகுதியில், 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை அவருடன் காதல் உறவில் இருந்தேன். திருமண நோக்கத்திற்காக நாங்கள் மோதிரமும் மாற்றிக்கொண்டோம். எனினும், ஜாதகப் பொருத்தம் இல்லை என சோதிடர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த உறவு முடிவுக்கு வந்தது. நாங்கள் திருமணத்திற்குப் பின்னர் குடியேறுவதற்காக, மவுன்ட் லவீனியா / தெஹிவளையில் அமைந்த மிஹிந்து மாவத்தையிலுள்ள சொகுசு வீடு தொடர்பாகத் திட்டமிட்டிருந்தோம். அந்த வீட்டின் உள்துறை அலங்கார வேலைகள் தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

எனினும், அந்த வீடு தனது பேத்திக்குச் சொந்தமானது என யோஷிதவின் பாட்டி (டெய்ஸி பொரஸ்ட்) என்னிடம் கூறியிருந்தார்.” 

இந்த வழக்கு விசாரணையின் போது, காணி உரிமையாளரான லூசியன் ரத்நாயக்க மற்றும் யசராவின் மாமாவான வசந்த குமார ஜயசூரிய உள்ளிட்ட மேலும் மூன்று சாட்சிகள் ஆஜராகி சாட்சியமளித்தனர். 

குறிப்பாக, ரத்மலானை மற்றும் தெஹிவளைப் பகுதிகளில் அமைந்துள்ள காணிகளைக் கொள்வனவு செய்வதற்காக, பாதுகாப்புப் பணியாளர்கள் போன்ற தோற்றம் கொண்ட நபர்களால் பைகளில் பெருமளவிலான பணம் கொண்டு வரப்பட்டதாக வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் சொத்துக் கொள்வனவு தொடர்பான விபரங்களுடன் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன. 

2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில், தமது வருமான ஆதாரங்களை வெளிப்படுத்தாமல், ரத்மலானை மற்றும் தெஹிவளைப் பகுதிகளில் ரூபாய் 73.499 மில்லியன் மதிப்பிலான 5 காணி மற்றும் சொத்துக்களைக் கையகப்படுத்தியமை மற்றும் CSN ஊடக நிறுவன முதலீடுகள் ஊடாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

இவ்வழக்கின் மேலதிக விசாரணைகளை வரும் ஜூலை 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய திகதியில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேலும் 13 சாட்சிகளுக்கு அழைப்பாணை (Summons) விடுத்து உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்ல ட்ரோன் விமான சேவை!!

நாட்டில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோன் விமான சேவையை சோதனை முறையில் அறிமுகப்படுத்துவதற்குச் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

இலங்கையின் வான்வழிப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், ஆரம்பத்தில் இதுவொரு சோதனைத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்தச் சேவையில் பயன்படுத்தப்படவுள்ள ஒவ்வொரு ட்ரோன் விமானமும் ஒரே நேரத்தில் 6 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இத்தகைய பயணிகள் ட்ரோன் போக்குவரத்துச் சேவைகள் ஏற்கனவே வெற்றிகரமாகச் செயற்பாட்டில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் அந்த நாடுகளின் வெற்றிகரமான மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டே இலங்கையிலும் இத்திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஒரே படுக்கையில் 3 நோயாளிகள்!!

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அரசு மருத்துவமனைகளையும், அதை நம்பியிருக்கும் ஏழை மக்களையும் அலட்சியப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் மிக முக்கியமான அரசு மருத்துவமனையான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், இடநெருக்கடியின் காரணமாக ஒரே படுக்கையில் கிட்டத்தட்ட 3 நோயாளிகள் வரை அனுமதிக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி கடும் கண்டனத்திற்குரியது. 

மருத்துவமனையில் நடைபெறும் புனரமைப்பு பணிகளின் காரணமாக, நோயாளிகள் அனைவரையும் ஒரே பிளாக்கில் இடம் மாற்றியதன் விளைவு தான், இந்த இட நெருக்கடிக்கு காரணம் என்று சொல்லப்படுவது , தமிழக சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நிர்வாகக் குளறுபடிக்கான சான்று. தலைமைச் செயலகத்தில் ஏதாவது புனரமைப்பு பணிகள் நடந்தால், அரசு அமைச்சர்களை எல்லாம் இப்படித்தான் ஒரே அறையில் அடைத்து, ஒரே சீட்டில் இடித்துக் கொண்டு அமர வைப்பார்களா.உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்களுக்கு நல்ல காற்றோட்டமான, வசதியான படுக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற அடிப்படை கூட திரு. ஜோசப் விஜய் அரசுக்கு தெரியவில்லையா? 

அல்லது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் எல்லாம் விளிம்புநிலை மக்கள் தானே என்ற இளக்காரமா? அரசு மருத்துவமனைகளையும், அதை நம்பியிருக்கும் ஏழை மக்களையும் அலட்சியப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

 எனவே, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தரமான படுக்கைகள், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போதிய அளவில் ஏற்பாடு செய்து தர வேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜையும், முதல்வர் விஜய்யையும் வலியுறுத்துகிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Thank You Google

Thank You Google
Thanks