வெள்ளி, 10 ஜூலை, 2026

கரூர் பலியான குடும்பங்களுக்கு நல உதவி வழங்க அமமுக எதிர்ப்பு!!

கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலை வழங்க அமமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “அரசியல் கட்சியின் பரப்புரையில் ஏற்பட்ட துயர சம்பவத்திற்காக அரசின் நிரந்தர பணியிடங்களை இழப்பீடாக வழங்குவது ஏற்க முடியாத அணுகுமுறையாகும்.

 இடைத்தேர்தலை மனதில் வைத்து இதுபோன்ற அரசுப் பணி நியமனங்களை வழங்குவது நிர்வாக மற்றும் சம வாய்ப்பு கொள்ளைக்கு எதிரானது” அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவித்திருப்பது, அரசின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயலும், ஆபத்தான முன்னுதாரணமும் ஆகும். 

முறையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடைபெற்ற தவெக தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் அரசின் முடிவு, அரசுப் பணியை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் இரவு பகலாக உழைத்து தயாராகி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரத்திற்கு அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சியே முழுப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும் உதவிகளும் வழங்க வேண்டும். ஆனால், அரசின் அதிகாரத்தையும் பொதுமக்களின் வரிப்பணத்தால் இயங்கும் நிர்வாகத்தையும் பயன்படுத்தி, வரவிருக்கும் இடைத்தேர்தலை மனதில் கொண்டு இதுபோன்ற அரசு பணி நியமனங்களை வழங்குவது நிர்வாக நெறிமுறைகளுக்கும் சம வாய்ப்புக் கொள்கைக்கும் எதிரானதாகும். 


யாழில் புற்றுநோய் யாழ்ராணி ரயில் முன் பாய்ந்த பிரபாகரன் (வயது 42)

யாழில் புற்றுநோய் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். கொழும்புத்துறையைச் சேர்ந்த தங்கவடிவேலு பிரபாகரன் (வயது 42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 


இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாகச் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நோயின் வீரியம் தாங்க முடியாமல், கச்சேரிக்கு முன்பாக உள்ள ரயில் கடவைக்குச் சென்று, அநுராதபுரத்தில் இருந்து வந்த யாழ்ராணி ரயில் முன் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். 

 பின்னர் அவரது சடலமானது ரயிலில் எடுத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மன்னார் சட்டவிரோத கடல் அட்டை கடத்தல் முறியடிப்பு - 26 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகக் கடத்தப்பட்ட 60,448-க்கும் அதிகமான கடல் அட்டைகளுடன் 26 சந்தேக நபர்கள் மற்றும் 12 டிங்கி படகுகள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. 

நேற்று (09) வடமத்திய கடற்படை கட்டளைக்குச் சொந்தமான 'இலங்கை கடற்படைக் கப்பல் கஜபா' நிறுவனத்தினால், மன்னார் சவுத்பார் கடல் மற்றும் கடற்கரைப் பகுதியை உள்ளடக்கியதாக நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான சில டிங்கி படகுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகக் கரைக்குக் கடத்தப்பட்டுக் கொண்டிருந்த குறித்த கடல் அட்டைத் தொகுதி கடற்படையினரால் கண்டறியப்பட்டு, சட்டத்தின் கீழ் பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இங்கு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 26 சந்தேக நபர்களும் 21 முதல் 64 வயதுக்கு இடைப்பட்ட, மன்னார் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

 சந்தேக நபர்கள், கடல் அட்டைத் தொகுதி மற்றும் 12 டிங்கி படகுகள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீனவப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வியாழன், 9 ஜூலை, 2026

கமேனியின் இறுதி ஊர்வலம்!!

ஈராக்கில் ஊர்வலங்கள் திட்டமிடப்பட்ட நேரத்தை விட நீடித்ததால், அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வலம் தாமதமானது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில் இது நிகழ்ந்துள்ளது

இரண்டாவது இரவாக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்!!

டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில், தொடர்ந்து இரண்டாவது இரவாக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது; இதற்குப் பதிலடியாக வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்களை ஈரான் குறிவைத்துள்ளது.பலவீனமான அமெரிக்க-ஈரான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்களைத் தாக்கியதன் மூலம் தெஹ்ரான் ஒப்பந்தத்தை மீறியதாக வாஷிங்டன் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானிய இலக்குகள் மீது புதிய இராணுவத் தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டுள்ளார். 

இதற்குப் பதிலளித்த ஈரான், குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறியது. அதே நேரத்தில், நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், "அமெரிக்கா இதற்கான விலையைக் கொடுக்கும்" என்று எச்சரித்தார்.

யாழ். பல்கலைக்கழக முன்றலில் அதிரடிப் போராட்டம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் உள்ளிட்ட இருவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளைக் காலந்தாழ்த்தாது, உடனடியாகத் துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

“பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம்” எனும் அமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில், பல்கலைக்கழக மட்டத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் செயற்பாடுகள் எவ்வித இழுத்தடிப்புகளுமின்றி நேர்மையான முறையில் மிக விரைவாக நிறைவு செய்யப்பட வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் அழுத்தமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 “கண்ணியத்தை இழந்து கல்வியைப் பெறும் இடமா யாழ். பல்கலைக்கழகம்?”, “பாதிக்கப்பட்டவர்களின் குரல்களைக் கேளுங்கள் – அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்”, மற்றும் “தமிழர் பண்பாட்டிற்கு உணர்ச்சி கொள்ளும் பல்கலைக்கழகமே, பாலியல் சுரண்டல்களுக்கு மௌனம் ஏன்?” போன்ற பல்வேறு வலிமையான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். 

கல்வி கற்கும் உயர்தர நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் எனவும், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகச் சட்டத்தையோ அல்லது காலத்தையோ ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது எனவும் இதன்போது போராட்டக்காரர்கள் காவல் துறையினரினதும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.

அம்பாறை வைத்தியசாலையின் வைத்தியர் சடலம் -- சந்தேகநபர் நீதிமன்றத்தில்!!

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த இருவர் உட்பட நால்வர் இன்று (09) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். அம்பாறை வைத்தியசாலையின் இயன்முறை வைத்தியர் ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் உள்ள கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டிருந்தது. 

 அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய 34 வயதுடைய ஷம்யா தர்ஷனி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பெண் மருத்துவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது மரண பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

நுவரெலியா பகுதியில் வைத்து பெண் உடலியல் நிபுணரை கொலை செய்த பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய குண்டசாலை பிரதேச சபையில் பணியாற்றும் சாரதி, மெனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆகியோரே இவ்வாறு இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 

நுவரெலியா காவல் நிலைய குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேகநபர்கள், நுவரெலியா நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். 

அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் (26) ஆம் திகதி நுவரெலியா நீதவான் புத்திகா ஹர்ஷனி தர்மதாஸவிடம் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபர்களை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thank You Google

Thank You Google
Thanks