புதன், 22 ஏப்ரல், 2026

ஹோர்மூஸை கடக்க முயன்ற வர்த்தக கப்பல் மீது ஈரான் தாக்குதல்!!

ஹோர்மூஸ் நீரிணையை கடக்க முயன்ற வர்த்தக கப்பல் மீது ஈரானிய ஆயுதப்படைகளின் உயர்மட்ட பிரிவான ஐ.ஆர்.ஜி.சி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 ஐ.ஆர்.ஜி.சி விடுத்த எச்சரிக்கைகளை மீறி குறித்த கப்பல் பயணத்தை மேற்கொண்டதால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐ.ஆர்.ஜி.சியை மேற்கோள்காட்டி ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

 இது தொடர்பில் வெளியாகிற அறிக்கையில், "மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளைப் புறக்கணித்த ஒரு கொள்கலன் கப்பல் மீது ஈரான் இராணுவம் கடல்சார் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓமானுக்கு வடகிழக்கே 15 கடல் மைல் (28 கி.மீ) தொலைவில் உள்ள ஒரு கொள்கலன் கப்பலில் ஒரு தாக்குதல் சம்பவம் குறித்த அறிக்கை கிடைத்திருப்பதாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாடுகளை (UKMTO) கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

"ஒரு கொள்கலன் கப்பலின் உயர் அதிகாரி, தங்களது கப்பலை ஐ.ஆர்.ஜி.சி-யின் ஒரு துப்பாக்கிப் படகு நெருங்கியதாகவும், அது பின்னர் கப்பலின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கப்பலின் பாலத்திற்குப் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும்" தெரிவித்தார் என UKMTO அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு கப்பலில், தீ விபத்துகளோ அல்லது சுற்றுச்சூழல் பாதிப்புகளோ ஏற்படவில்லை என்றும், அனைத்துப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் பயங்கரவாத நிதி வழங்கலைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை!

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதைத் தடுப்பதற்காக 'இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகளை' அமுல்படுத்துவது தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


 இந்தத் தடைகளின் கீழ், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அல்லது அதற்கு நிதி உதவி வழங்குவதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் அல்லது அமைப்புகளின் வங்கி கணக்குகள், சொத்துக்கள் மற்றும் ஏனைய சொத்து விபரங்களை முழுமையாக முடக்குவதற்கு முடியும். அதன்படி, அந்தச் சொத்துக்களைப் பயன்படுத்துதல், மாற்றுதல் அல்லது விற்பனை செய்தல் என்பன சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்படுகின்றன.

 இந்த நடைமுறையானது, 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஒழுங்குவிதியின் மூலம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1373 (2001) தீர்மானத்திற்கு இணங்க செயல்படுத்தப்படுகிறது. 

இத்தடைகளை விதிக்கும் அதிகாரம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் உள்ள அதேவேளை, அதன் செயல்பாட்டு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் "தகுதியுள்ள அதிகாரியாக" நியமிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதத்தை ஆரம்ப நிலையிலேயே தடுப்பதற்கும், நாட்டின் நிதி அமைப்பைப் பாதுகாப்பதற்கும், சர்வதேசக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

மேலும், பொதுமக்களுக்குத் தகவல்களை வழங்குவதற்கும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் தகுதியுள்ள அதிகாரியின் அலுவலகத்தினால் https://competentauthority.gov.lk/ என்ற உத்தியோகபூர்வ இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நவீன சட்ட மற்றும் நிர்வாக நடைமுறையூடாக இலங்கையில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பு மேலும் பலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 21 ஏப்ரல், 2026

செம்மணி இன்று ஐரோப்பிய தூதுக்குழு...!

நீண்டகாலமாக இழுபறியில் இருந்த செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் அகழ்வுத் தளத்தை நேரில் பார்வையிடவுள்ளனர்.இந்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 


 கடந்த ஏப்ரல் ஏழாம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது அகழ்வுப் பணிகளுக்கான நிதிச் செலவினங்களுக்கு நீதி அமைச்சு அனுமதி வழங்காததால் பணிகள் தாமதமடைந்தன.எனினும், கடந்த வாரம் இதற்கான நிதி நீதி அமைச்சால் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 நிதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டபடி எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி செம்மணிப் பகுதியில் அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பது குறித்து இன்றைய நீதிமன்ற அமர்வில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ராஜபக்சக்களின் அரசியல் அரசு பதிலடி முக்கிய குற்றவாளி!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு சுரேஷ் சலே மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவிலுள்ள சிலர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் ஐந்து வருடத்திற்கு பின்னர் நேற்று(20) குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்தில் வாக்கு மூலம் பதிவு செய்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரந்த அமரசிங்க சிவில் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார். 

குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்திற்கு சென்று வெளியில் வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். தொடரந்துரையாற்றிய அவர்.உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு சுரேஷ் சலே மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவிலுள்ள ஒரு குழு சம்பந்தப்பட்டுள்ளது என 2021.11.15 நான் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தேன். 

ஆனால் அது தொடர்பில் எவ்வித விசாரணைகளும் கோட்டாபய ஆட்சியிலும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் நடத்தவில்லை. அது தொடர்பில் என்பிபி அரசாங்கம் வாக்கு மூலம் பதிவு செய்வதற்கு ஆரம்பித்துள்ளமை பாராட்டத்தக்கது.

கடந்த அரசாங்கங்கள் இது தொடர்பில் எதுவும் செய்யவில்லை. சாட்சியங்கள் உறுதியானதால் விசாரணை நடத்தி இந்த சம்பவத்தை முடிவுறுத்த முடியாது என்பதால் கண்டுகொள்ளவில்லை.இதற்கு இராணுவ புலனாய்வு பிரிவினர் அனைவரும் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதல்ல.சுரேஷ் சலேவுடன் இருந்த சிறு குழுவினரே சம்பந்தப்பட்டுள்ளனர். 

இது புலனாய்வு பிரிவில் உத்தியோகப்பூர்வமற்ற செயற்பாடா? என கேட்க விரும்புகிறோம்.

 சுரேஷ் சலேவுக்கு எதிராக சாட்சியங்கள் சொல்வோருக்கு இராணுவ புலனாய்வு பிரிவினர் என சொல்லிக் கொள்பவர்கள் அச்சுறுத்தல் செய்ய முயற்சிக்கின்றனர். சுரேஷ் சலேவை கைது செய்த பின்னர் ஏன் புலனாய்வு பிரிவினர் இவ்வளவு பதற்றத்திற்குள்ளாகியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

அமெரிக்க ராணுவ கப்பல்களை டிரோன் மூலம் தாக்கி இரான் பதிலடி !!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - இரான் பேச்சுவார்த்தைக்கான குழுவை அமெரிக்கா அனுப்பியுள்ள நிலையில், பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் திட்டம் இல்லை என இரான் கூறியுள்ளது. இந்தநிலையில் இரானியக் கொடி ஏந்திய சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கா சிறைபிடித்ததை அடுத்து, ஓமன் வளைகுடாவில் அமெரிக்க ராணுவக் கப்பல்கள் மீது இரான் டிரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

 இரானின் அரசாங்கத்துடன் தொடர்புடைய செய்தி நிறுவனமான தஸ்னிம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்த டிரோன் தாக்குதல்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. அமெரிக்க கடற்படையின் இந்த நடவடிக்கை போர் நிறுத்தத்தை மீறுகிறது எனக் கூறி, இரானின் உயர்மட்ட ராணுவக் கட்டளைப் பிரிவான கத்தம் அல்-அன்பியா மத்தியத் தலைமையகம் ஏற்கனவே பதிலடி கொடுக்கப்போவதாக எச்சரித்திருந்தது. 

 தனது கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக வளைகுடா பகுதியில் இரானியக் கொடி ஏந்திய சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். பயணத்தை நிறுத்துவதற்கான எச்சரிக்கைகளுக்குப் பதிலளிக்காதபோது 'டோஸ்கா' என்ற பெயருடைய அந்தக் கப்பல் அமெரிக்க கடற்படையால் கைப்பற்றப்பட்டதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

 "இன்று, இரானியக் கொடி ஏந்திய டோஸ்கா கப்பல் கடற்படை முற்றுகையை மீற முயன்று தோல்வியடைந்தது. அந்தக் கப்பல் 900 அடி நீளமும், கிட்டத்தட்ட ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு இணையான எடையும் கொண்டது" என்று டிரம்ப் எழுதியிருந்தார். 

 மேலும் , கப்பலை நிறுத்த அமெரிக்கா எச்சரித்ததாகவும், அது புறக்கணிக்கப்பட்டதால், "எங்கள் கடற்படைக் கப்பல் அதன் எஞ்சின் அறையைத் தாக்கி அங்கே அதை நிறுத்தியது" என்றும் அவர் கூறினார்.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

ரிஃபார்ம் யூகே £100,000 வரி செலுத்தத் தவறியதாகக் கூறப்படுகிறது.

ரிஃபார்ம் யூகே அமைப்பைச் சேர்ந்த ரிச்சர்ட் டைஸ், 2020 முதல் 2022 வரை லாபத்தின் மீது வரி செலுத்தாத போலி நிறுவனங்களை நடத்தி வந்ததாகவும், அந்தக் காலகட்டத்தில் அவரது நிறுவனம் கட்சிக்கு £1.1 மில்லியன் நன்கொடையாக வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

ரிச்சர்ட் டைஸ், தனது முதலீட்டு நிறுவனத்தின் நலனுக்காக கிட்டத்தட்ட £100,000 பெருநிறுவன வரியைச் செலுத்தத் தவறியதாகக் கூறப்படுகிறது. 

அந்த முதலீட்டு நிறுவனம், பதிலுக்கு ரிஃபார்ம் யுகே (Reform UK) அமைப்புக்கு நன்கொடைகளை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டே டைம்ஸ் பத்திரிகையின் இந்த அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, ரிஃபார்ம் யுகே அமைப்பின் துணைத் தலைவர் X தளத்தில் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர், “பல வணிகங்களைக் கொண்ட ஒரு நீண்ட தொழில் வாழ்க்கையில் 

சில தவறுகள் ஏற்படுவது இயல்பு. இயல்பாகவே, தவறுகளைச் சரிசெய்வதில் நான் எப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். 

மேலும், கணக்குகளை மீண்டும் சரிபார்க்க வேண்டியிருந்தால், செலுத்த வேண்டிய தொகையை - அது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தாலும் - நிச்சயமாக நான் செலுத்துவேன்” என்று கூறியுள்ளார்.

பயணச்சீட்டுகளை வழங்காத பேருந்துகள் குறித்து முறையிடுமாறு அறிவிப்பு!

அதிகக் கட்டணம் வசூலிக்கும் மற்றும் பயணச்சீட்டுகளை வழங்காத பேருந்துகள் குறித்து புகார் அளிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

 இது தொடர்பாக எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்ய முடியும் என அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரெண்டா தெரிவித்தார். 

 அத்துடன், மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் இது குறித்து அறிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். முறைப்பாடுகளை அறிவிக்க 1955 என்ற உடனடி தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயல்படும் என்றும் கலாநிதி நிலான் மிரெண்டா மேலும் குறிப்பிட்டுள்ளார். 

 இதேவேளை, புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிகப்படியான கட்டணங்களை அறவிட்ட 80 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் நடமாடும் பேருந்து பரிசோதனை பிரிவின் பிரதானி ரோஹண வத்தகே இது குறித்து தெரிவிக்கையில், கடந்த 8ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை 680 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறினார். 

இதன்போது அதிக கட்டணம் வசூலித்த 80 பேருந்துகள் கண்டறியப்பட்டதுடன், மேலதிகமாகப் பெறப்பட்ட பணம் மீளவும் பயணிகளுக்கே வழங்கப்பட்டது. மேலும், குறித்த பேருந்து நிர்வாகங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

நேற்று (18) மாத்திரம் சுமார் 150 பேருந்துகள் சோதனையிடப்பட்டதில், 12 பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி வரை 24 மணித்தியாலங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thank You Google

Thank You Google
Thanks