திங்கள், 23 மார்ச், 2026

வட கொரியாவின் கிம் ஜாங் உன், அரச விவகாரங்களுக்கான தலைவராக!!

தனிமைப்படுத்தப்பட்ட நாடான வட கொரியா, ஒரு நாள் முன்னதாக தனது உச்ச மக்கள் பேரவையின் முதல் அமர்வைக் கூட்டியதைத் தொடர்ந்து, அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் மீண்டும் அரச விவகாரங்களுக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அரசு ஊடகமான கே.சி.என்.ஏ திங்களன்று செய்தி வெளியிட்டது. 

பியாங்யாங்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், சோசலிச அரசியலமைப்பில் திருத்தங்கள் மற்றும் துணைச் சேர்க்கைகள் குறித்தும், அரச விவகார ஆணையத்தின் தலைவர் மற்றும் பிற அரசு தலைமை அமைப்புகளின் தலைவர் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்படும். 

 அரசின் கொள்கைகளுக்கு முறையாக ஒப்புதல் அளிக்கும் வட கொரியாவின் ஒப்புதல் வழங்கும் சட்டமன்றமான இந்தப் பேரவை, வழக்கமாக ஆளும் தொழிலாளர் கட்சி மாநாட்டைத் தொடர்ந்து கூடி, கட்சியின் முடிவுகளைச் சட்டமாக்குகிறது.

பிப்ரவரியில் நடைபெற்ற ஒன்பதாவது கட்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட நாட்டின் ஐந்தாண்டு பொருளாதாரத் திட்டத்தையும் இந்தக் கூட்டம் ஆய்வு செய்யும் என்று கே.சி.என்.ஏ கூறியது. 

தென் கொரியாவை நோக்கிய தலைவர் கிம் ஜாங் உன்னின் "இரு விரோத நாடுகள்" கொள்கையை முறைப்படுத்த, பியாங்யாங் தனது அரசியலமைப்பைத் திருத்துமா என்பதில் கவனம் குவிந்துள்ளது. 

சமீபத்திய ஆண்டுகளில், கிம், பியாங்யாங்கின் நீண்டகால இலக்கான அமைதியான மறு ஒன்றிணைப்பைக் கைவிட்டு, தெற்கை ஒரு விரோத நாடாக மறுவரையறை செய்துள்ளார். 

கிம்மின் சக்திவாய்ந்த சகோதரியான கிம் யோ ஜோங், 2021 முதல் பணியாற்றி வந்த நாட்டின் மிக உயர்ந்த தலைமை அமைப்பான அரச விவகார ஆணையத்தின் உறுப்பினர்கள் பட்டியலில், கே.சி.என்.ஏ-வின் (KCNA) குறிப்பிடத்தக்க வகையில் இடம்பெறவில்லை.

அவர் ஏன் இனி பட்டியலில் இல்லை என்பது குறித்து விசாரித்து வருவதாக தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் கூறியது, ஆனால் இந்த நடவடிக்கை செல்வாக்கு இழப்பைக் குறிக்க வேண்டிய அவசியமில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 

 "அவரது வருகையின்மை, அந்தஸ்தில் ஏற்பட்ட சரிவை அல்ல, மாறாகப் பொறுப்புகளின் ஒரு உத்திசார்ந்த பிரிவினையையே சுட்டிக்காட்டுகிறது," என்று கியுங்னம் பல்கலைக்கழகப் பேராசிரியர் லிம் யூல்-சுல் கூறினார். மேலும், இளைய கிம் ஆளும் தொழிலாளர் கட்சியில் ஒரு துறை இயக்குநராகத் தொடர்ந்து உண்மையான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார் என்றும், அங்கு அவர் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் ஒரு உயர்நிலை, கட்சி சார்ந்த பாத்திரத்தை வகிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ் ஊரெழு 5 ஆயிரத்து 900 ஆயிரம் லீட்டர் எரிபொருளுடன் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரத்து 900 ஆயிரம் லீட்டர் எரிபொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றில் பெருமளவான எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த களஞ்சிய சாலையை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சுற்றுவளைத்தனர்.

 அதன்போது 4700 லீற்றர் வரையிலான டீசலும் 800 லீற்றர் பெற்றோலும் 400 லீற்றர் மண்ணெண்ணெயும் கைப்பற்றப்பட்டது. அதனை அடுத்து களஞ்சியசாலை பொறுப்பாளர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறையினா் கைப்பற்றப்பட்ட எரிபொருட்களுடன் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அமெரிக்க பிரஜைகளுக்கு அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக, உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்களுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. 

 தற்போதைய சூழ்நிலை காரணமாக, உலகெங்கிலும் குறிப்பாக மத்திய கிழக்கில் தங்கியுள்ள அமெரிக்கர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இராஜாங்கத் திணைக்களம் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து அமெரிக்கர்களும் தமக்கு அருகிலுள்ள அமெரிக்க தூதரகம் அல்லது தூதரக அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.விமான எல்லைகள் அவ்வப்போது மூடப்படலாம் என்பதுடன், மத்திய கிழக்குக்கு வெளியேயுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இராஜதந்திர வசதிகள் இலக்கு வைக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரான் ஆதரவு குழுக்களினால் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க நலன்கள் அல்லது அமெரிக்கர்களுடன் தொடர்புடைய இடங்கள் இலக்கு வைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கெமுனு விஜேரத்ன பேருந்து சேவை நட்டத்தினால் ஏற்பட்ட விலகல்!!

இன்றைய தினம் (23) பேருந்து சேவைகளிலிருந்து விலகியமை ஒரு வேலைநிறுத்தப் போராட்டம் அல்ல என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், பழைய கட்டணத்தின் கீழ் பேருந்துகளை இயக்க முடியாது என்பதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 

அரசாங்கம் நேற்று முதல் புதிய கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்தியிருக்க முடியும் என்றும், அவ்வாறு செய்யாததே இந்த நிலைக்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இன்றைய தினம் 90 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகள் சேவையிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிவித்த அவர், எவருக்கும் அழுத்தம் கொடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், ஒரு சில பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். 

எவ்வாறாயினும், 'சிசு செரிய' பாடசாலை பேருந்து சேவைகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டதாக அவர் மேலும் உறுதிப்படுத்தினார். "இதனை ஒரு வேலைநிறுத்தப் போராட்டமாக நாம் கூறவில்லை. நட்டத்தை ஈடுகட்ட முடியாததால் சேவையிலிருந்து விலகியுள்ளோம். 

குறுகிய தூர சேவைகளுக்கு 5,000 முதல் 6,000 ரூபா வரையிலும், நீண்ட தூர சேவைகளுக்கு 15,000 முதல் 20,000 ரூபா வரையிலும் நட்டம் ஏற்படுகிறது. எவரும் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய மாட்டார்கள். 

இது ஒரு தொழில். கடந்த காலங்களில் எரிபொருள் விலை உயர்ந்தவுடன் அதிகாரிகள் எம்முடன் கலந்துரையாடினர். ஆனால் இம்முறை எவ்வித பேச்சுவார்த்தையும் இன்றி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் அமைச்சும் செயற்பட்டுள்ளன.

 எம்முடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு ஒரு சிறிய சமிக்ஞையை வழங்கியுள்ளோம்."

ஈரான் அரபு நாடுகளுக்கு கொடுத்த எச்சரிக்கை!

அமெரிக்க இராணுவ முகாம்களுக்கு மின்சாரம் வழங்கும் மத்திய கிழக்கு பிராந்திய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய காலக்கெடு முடிவடையவுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரானிய புரட்சிகர இராணுவத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, வளைகுடா பிராந்திய அரபு நாடுகள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கு டெஹ்ரான் எடுக்கும் புதிய முயற்சியாகக் கருதப்படுகிறது. 

 ஈரானிய தாக்குதல்கள் காரணமாக ஹோர்முஸ் நீரிணை ஊடாக கப்பல் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டால், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 22 மார்ச், 2026

படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளா் தயாளினி திலீபனின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று , அங்கிருந்து பூதவுடல் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்திற்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது

 அதன் போது , பல்கலைக்கழக துணைவேந்தர் , பேராசிரியர்கள் , விரிவுரையாளர் , மாணவர்கள் கல்வி சாரா ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கிருந்து பூதவுடல் கோம்பயன் மணல் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

குறித்த மூத்த விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் இணைந்து அவரை கடந்த 18ஆம் திகதி படுகொலை செய்து சடலத்தை தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் வீசிய நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!!

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இன்று (22) நண்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதன்படி, சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 மேலும், இந்த மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Thank You Google

Thank You Google
Thanks