அந்தத் தோல்வியின் பெயர்தான் 'ஆபரேஷன் ஈகிள் கிளா' (Operation Eagle Claw - கழுகின் நகம்).
1979-ல் ஈரானில் ஆயதுல்லாஹ் கொமேனி தலைமையில் இஸ்லாமியப் புரட்சி வெடித்தது. அமெரிக்காவின் கைக்கூலியாகச் செயல்பட்ட ஷா மன்னர் நாட்டை விட்டு விரட்டப்பட்டார். ஈரானிய மாணவர்கள் கொதித்தெழுந்து, தெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த 52 அமெரிக்க அதிகாரிகளைப் பிணைக் கைதிகளாகப் பிடித்தனர்.
அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் உலக அரங்கில் பெரும் அவமானத்தைச் சந்தித்தார். பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், பிணைக் கைதிகளை ராணுவ பலத்தைப் பயன்படுத்தி மீட்க ஒரு ரகசியத் திட்டத்தைத் தீட்டினார்.
இந்த நடவடிக்கை ஹாலிவுட் திரைப்படங்களை மிஞ்சும் ஒரு சிக்கலான திட்டம். அமெரிக்காவின் சிறப்புப் படையான 'டெல்டா ஃபோர்ஸ்' கமாண்டோக்களை ஏற்றிக்கொண்டு C-130 ரகப் போக்குவரத்து விமானங்கள் ஈரானுக்குள் நுழைய வேண்டும்.
அதே நேரம், விமானம் தாங்கிக் கப்பலான USS நிமிட்ஸ்-ல் இருந்து எட்டு RH-53D ஹெலிகாப்டர்கள் ஈரானுக்குள் பறந்து வர வேண்டும். இவை இரண்டும் தெஹ்ரானுக்குத் தென்கிழக்கே 200 மைல் தொலைவில் உள்ள 'தஸ்த்-இ-கவிர்' ன்ற பெரும் பாலைவனத்தில் ரகசியமாகச் சந்திக்க வேண்டும். இந்த இடத்தின் குறியீட்டுப் பெயர்தான் டெசர்ட் வன்.
அங்கிருந்து கமாண்டோக்கள் தெஹ்ரானுக்குள் நுழைந்து, தூதரகத்தைத் தாக்கி அமெரிக்கர்களை மீட்க வேண்டும் என்பதுதான் திட்டம்.
எல்லாம் திட்டப்படியே சென்றிருந்தால் அமெரிக்கா வெற்றி பெற்றிருக்கும். ஆனால், ஈரானின் புவியியல் அமைப்பும், இயற்கையும் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பொறியை வைத்திருந்தன.
ஹெலிகாப்டர்கள் ஈரானுக்குள் நுழைந்ததும், 'ஹபூப்' எனப்படும் மிகக் கொடூரமான பாலைவன மணல் புயலில் சிக்கிக்கொண்டன. கண்மூடித்தனமாக வீசிய புயலில் சிக்கி இரண்டு ஹெலிகாப்டர்கள் பழுதாகின.
ஒன்று பாதியிலேயே திரும்பிச் சென்றது. எஞ்சிய ஐந்து ஹெலிகாப்டர்கள் மற்றும் கமாண்டோக்களுடன் 'டெசர்ட் வன்' பகுதியை அடைந்தபோது, திட்டம் கைமீறிப் போனதை அமெரிக்க ராணுவம் உணர்ந்தது.
திட்டத்தைக் கைவிட்டுத் திரும்பிச் செல்ல ஜிம்மி கார்ட்டர் உத்தரவிட்டார்.
அப்போதுதான் அது நிகழ்ந்தது. இருட்டிலும், கடும் மணல் புயலிலும் ஒரு ஹெலிகாப்டர் கிளம்ப முற்பட்டபோது, அருகிலிருந்த பிரம்மாண்டமான C-130 விமானத்தின் மீது மோதி வெடித்துச் சிதறியது.
8 அமெரிக்கக் கமாண்டோக்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். அமெரிக்கப் படைகள் எஞ்சிய ஹெலிகாப்டர்களையும், ரகசிய ஆவணங்களையும் பாலைவனத்திலேயே விட்டுவிட்டு, அடிபட்ட பாம்பாகத் தப்பியோடின.
ஆயதுல்லா கொமேனி அப்போது கூறினார்: "அமெரிக்கர்கள் நவீன ஆயுதங்களை நம்பி வந்தார்கள். ஆனால், ஈரானின் பாலைவன மணல் துகள்கள் இறைவனின் தூதர்களாக மாறி அவர்களை அழித்துவிட்டன!" என்றார்.
இன்று ஈரான்-அமெரிக்கா-ஆக்கிரமிப்பு தேச முக்கூட்டு யுத்தம் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அதிபர் மசூத் பெஜெஷ்கியன் 'ஆபரேஷன் ஈகிள் கிளா' தோல்வியைக் குறிப்பிட்டுப் பதிவு செய்திருப்பது மிகச்சிறந்த உளவியல் போர்.
"46 ஆண்டுகளுக்கு முன் ஒரு தூதரகத்தைக் காப்பாற்ற வந்தபோதே ஈரானின் பாலைவனத்தில் உங்கள் ராணுவம் கருகிப்போனது. இன்று (2026-ல்) எங்களிடம் அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளும், வான்பாதுகாப்பு அமைப்புகளும் உள்ளன.
மீண்டும் ஈரானுக்குள் நேரடியாக நுழைய நினைத்தால், 'டெசர்ட் ஒன்' சம்பவத்தை விடப் பன்மடங்கு அழிவைச் சந்திப்பீர்கள்" என்பதை மறைமுகமாக ஆக்கிரமிப்பு தேசத்திற்கும் அமெரிக்காவிற்கும் உணர்த்துகிறார். போரினால் பதற்றத்தில் இருக்கும் ஈரானிய மக்களுக்கும், ராணுவத்திற்கும் இது ஒரு மாபெரும் தார்மீக ஊக்கத்தை அளிக்கிறது.
வரலாறு எப்போதுமே சுழன்றுகொண்டே இருக்கும் ஒரு சக்கரத்தை போன்றது. 1980-ல் ஜிம்மி கார்ட்டரின் அரசியல் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது இதே ஏப்ரல் 25 ஈரானியப் பாலைவன நிகழ்வுதான். இன்று, 2026-ல் அதே தேதியில், நவீன ஆயுதங்களோடு நடக்கும் இந்த முக்கூட்டு யுத்தத்தில், ஈரானின் புவியியல் அரண்களும், கடந்த காலத்தின் வெற்றிக் கதைகளும் மீண்டும் ஒருமுறை வல்லரசுகளுக்குச் சவாலாக உருவெடுத்துள்ளன.
கழுகின் நகங்களை (Eagle Claw) ஈரானின் பாலைவனம் அன்று எப்படி உடைத்தெறிந்தது என்பது, இன்றைய உலக அரசியல் சதுரங்கத்திலும் ஒரு பாடமாகும்!
