வெள்ளி, 22 மே, 2026

நைஜரின் உரேனியம் ஐரோப்பாவின் விளக்குகளை எரியவைத்தது.

58 ஆண்டுகளாக நைஜரின் உரேனியம் ஐரோப்பாவின் விளக்குகளை எரியவைத்தது.

ஆனால், நைஜர் மக்களோ இருளில் மூழ்கிக்கிடந்தார்கள். ஆப்பிரிக்க வரலாற்றில் ஒரு புதிய விடியலையும், நவீன காலனித்துவத்திற்கு (Neo-colonialism) எதிரான ஒரு மரண அடியையும் நைஜர் நாடு பதிவு செய்துள்ளது. 

கடந்த மே 18, 2026 அன்று, நைஜர் நாட்டின் அமைச்சரவை எடுத்த ஒரு அதிரடி முடிவு, ஒட்டுமொத்த சர்வதேச அரசியலையும் உலுக்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் அணுசக்தி ஆணையத்திற்கு 1968-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 'அர்லிட்' (Arlit) சுரங்க உரிமத்தை முற்றிலும் ரத்து செய்வதற்கான அரசாணையை நைஜர் அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. 

இதன் மூலம், 360 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அந்த நிலம், இனி எந்தவொரு வெளிநாட்டு சக்தியின் பிடியும் இன்றி, நைஜர் மக்களுக்கே முழுமையாகச் சொந்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1968-இல், 75 ஆண்டுகால குத்தகைக்காக இந்த நிலம் பிரான்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரான்ஸின் அணுசக்தி ராட்சதனான 'ஒரானோ' (Orano - பழைய பெயர் Areva) நிறுவனம், அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்த மண்ணிலிருந்து டன் கணக்கில் உரேனியத்தை உறிஞ்சியெடுத்தது. 

நைஜரின் அர்லிட் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட உரேனியத்தைக் கொண்டு பிரான்ஸ் தன் நாட்டு வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்கியது. பிரான்ஸில் இருக்கும் 56 அணு உலைகள் ஆப்பிரிக்காவின் உரேனியத்தால் தான் இயங்குகின்றன. 

ஆனால், அதே உரேனியத்தை அள்ளிக் கொடுத்த அர்லிட் பகுதி மக்களோ, ஒரு நிலையான மின்சார வசதி கூட இல்லாமல் பல தசாப்தங்களாக இருளில் தவித்தனர். கேள்வி இதுதான்: ஆப்பிரிக்க உரேனியத்தைக் கொண்டு 56 அணு உலைகளைக் கட்டிய பிரான்ஸ், நைஜரில் எத்தனை பள்ளிக்கூடங்களைக் கட்டியது? ஒன்றுகூட இல்லை என்பதே கசப்பான உண்மை. 

நைஜர் அரசு பிரான்ஸுடனான ஒப்பந்தத்தை வெறும் காகிதத்தில் மட்டும் ரத்து செய்யவில்லை; அதற்கு மாற்றாக ஒரு மாபெரும் வரலாற்றுப் புரட்சியைச் செய்துள்ளது. நைஜர் அமைச்சரவை, 'தெலுவா பாதுகாப்பான உரேனிய சுரங்க நிறுவனம்' (TSUMCO) என்ற புதிய அரசு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது. இனி நைஜர் மண்ணில் இருக்கும் உரேனியம், நைஜர் நாட்டுத் தொழிலாளர்களின் கரங்களால் மட்டுமே எடுக்கப்படும். 

அதன் மூலம் கிடைக்கும் முழு லாபமும் நைஜர் மக்களின் நல்வாழ்விற்காக மட்டுமே பயன்படுத்தப்படும். பிரான்ஸ் நாட்டை நைஜர் சும்மா விட்டுவிடவில்லை. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அர்லிட் சுரங்கப் பகுதியில் ஒரானோ நிறுவனம் செய்த சுற்றுச்சூழல் பேரழிவிற்குப் பிரான்ஸ் பொறுப்பேற்க வேண்டும் என்று நைஜர் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

பிரான்ஸ் நிறுவனம் நைஜர் நாட்டுக்குச் செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான வரிப் பாக்கிகளை முழுமையாக வசூலிக்க நைஜர் அரசு உத்தரவிட்டுள்ளது. உரேனியச் சுரங்கத்தால் அங்குள்ள மண், நிலத்தடி நீர் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் (Biodiversity) ஆகியவை மிகக் கொடூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 

பிரான்ஸைச் பணக்கார நாடாக்க, நைஜரின் இயற்கை வளம் விஷமாக்கப்பட்டது. இதற்கான முழு நஷ்டஈட்டையும் பிரான்ஸ் தந்தே ஆக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2023-ஆம் ஆண்டு நைஜரில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகே, பிரான்ஸிற்கான உரேனிய விநியோகத்தை நைஜர் நிறுத்தியிருந்தது. ஆனால், இந்த வாரம் எடுக்கப்பட்ட முடிவின் மூலம், பிரான்ஸுடனான அந்தப் பிரிவை நிரந்தரமானதாகவும், சட்டப்பூர்வமானதாகவும், எவராலும் மாற்றியமைக்க முடியாததாகவும் (Irreversible) நைஜர் மாற்றியுள்ளது.

 இது வெறும் நைஜர் நாட்டின் வெற்றி மட்டுமல்ல; ஒட்டுமொத்த ஆப்பிரிக்கக் கண்டமும் தங்களின் இயற்கை வளங்களைச் சுரண்டும் மேலைநாடுகளுக்கு எதிராக கிளர்ந்து எழுப்பபட்ட புரட்சி.
முகிந்தன் துரைராஜசிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks