இலங்கை திறைசேரி நிதியிலிருந்து திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் அமெரிக்க அஞ்சல் அதிகாரிகளுக்குச் செலுத்தப்படவிருந்த 625,000 டொலர் நிதி மோசடி ஆகிய இரண்டு பிரதான சம்பவங்கள் தொடர்பாக, உள்ளூர் அதிகாரிகளுக்குப் பக்கபலமாக நின்று புலனாய்வு செய்யவே இந்தத் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருடப்பட்ட பணம் அமெரிக்க நிதி அமைப்புகளின் ஊடாகக் கடத்தப்பட்டு, அந்நாட்டின் இரண்டு வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பல வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பது ஆரம்பகட்ட தடமறிதலில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதன்படி, தற்போது இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்திற்குள், இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) உயர் அதிகாரிகளுக்கும் FBI பிரதிநிதிகளுக்கும் இடையில் பல சுற்று விரிவான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது களத்தில் இறங்கியுள்ள இரு நாட்டுப் புலனாய்வுக் குழுக்களும் இணைந்து, திருடப்பட்ட நிதியின் டிஜிட்டல் தடயங்களை மிகத் துல்லியமாக ஆராய்ந்து வருவதாக தெரியவருகிறது.
இந்த 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஹேக்கர்களை மறைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு போலி நிறுவனம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
அதன்போது, இணையவழி வணிகப் பதிவுச் சேவைகளில் ஈடுபடுவதாகக் காட்டிக்கொண்டுள்ள "பிஸ் சொல்யூஷன்ஸ்" (Biz Solutions) என்ற இந்த மூன்றாம் தரப்பு நிறுவனம், அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் (ERD) அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் தொடர்பு வழிகளைச் சட்டவிரோதமாக ஊடுருவியே ஹேக்கர்கள் இந்த மோசடியைச் செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்தப்படவிருந்த 22.9 மில்லியன் டொலர் இருதரப்புக் கடன் மறுசெலுத்துகை நிதியை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய அமெரிக்காவில் வசிக்கும் சந்தேக நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும், இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க அமெரிக்க அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக