செவ்வாய், 3 டிசம்பர், 2024

தமிழ் மக்களின் உணர்வுகள் பாதிக்க கூடாது!-EPDP


மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். 

 ஆட்சிப் பீடமேறியுள்ள தற்போதைய அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் 13 ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்படும் என்று ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுள் ஒருவரான ரில்வின் சில்வாவினால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகத்தினால் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "தற்போதைய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாணசபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வு என்பது, இதுவரை காலமும் கௌரவமான அரசியல் உரிமைகளை இந்த நாட்டிலே பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கு கிடைத்துள்ள சிறிதளவான பரிகாரமாகவே நோக்கப்படுகின்றது.

 மாகாணசபை முறைமையினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலமே தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கான தீர்வை காண முடியும் என்பதை ஈ.பி.டி பி. கட்சியினாராகி நாமும் கடந்த 35 வருடங்ளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றோம். கடந்த காலங்களில் 13 ஆம் திருத்தச் சட்டத்தினை பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளையும் நாம் மேற்கொணாடிருந்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். 

 குறிப்பாக 2010 - 2015 காலப் பகுதியிலும் 13 ஆம் திருத்தச் சட்டத்தினை வலுவிழக்கச் செய்யும் முயற்சியை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த அப்போதைய ஆட்சியாளர்கள் முன்னெடுத்திருந்த நிலையில், அரசாங்கத்தின் அங்கமாக நாம் இருந்தபோதிலும், ஆளும் தரப்பில் அப்போதிருந்த தென்னிலங்கையை சேர்ந்த முற்போக்காளர்களான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து எமது ஆட்சேபனையை வெளிப்படுத்திய நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது. 

 அண்மையில் சிநேகிதபூர்வமாக உங்களை சந்தித்த வேளையிலும், 13 ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினையும், அதனை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமான பொறிமுறையாக இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தோம். அத்துடன், அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ் மக்களின் கணிசமான ஆதரவு உங்களுக்கு கிடைத்திருக்கின்ற நிலையில், அவர்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம். 

 அதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள உங்களுக்கு, புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிந்திப்பதற்கு முன்னர் தற்போதைய அரசியலமைப்பினை முழுமையாக நடைமுறைப்படுத்தி பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை இருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

 ஆக, உங்களுக்கு இருக்கும் தார்மீக கடப்பாட்டின் அடிப்படையிலும், தேர்தல் காலத்தில் எமது மக்களுக்கு நீங்கள் வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையிலும், 13 ஆம் திருத்தச் சட்டத்தினை தொடர்ந்தும் பாதுகாப்பதோடு மாகாணசபைகளுக்கான தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 வருடங்களாக கார்சியாவில் சிக்கியிருந்த 60 இலங்கைத் தமிழர்கள்!

பிரித்தானியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள இவர்களுக்கு, 6 மாதா காலம் தங்கியிருக்க அனுமதி!இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த புலம்பெயர்ந்த இலங்கைர்கள் குழுவொன்று பிரித்தானியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

16 குழந்தைகள் உட்பட 60 பேர் அடங்கிய இலங்கைத் தமிழர்கள் குழுவொன்றே இவ்வாறு இங்கிலாந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. கடந்த 2021 நவம்பர் மாதம் முதல் இந்த குழுவினர் டியாகோ கார்சியா தீவில் அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் மோசமான நிலையில் வசித்து வந்துள்ளனர். 

இவ்வாறு, இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள், அந்நாட்டில் 6 மாதக்காலம் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த ஆறு மாதங்களுக்கு தேவையான நிதி வசதியையும் அந்நாட்டு வௌிவிவகார அமைச்சு வழங்க தீர்மானித்துள்ளது. இவர்கள் தீவில் இருந்த காலப்பகுதியில், பல உண்ணாவிரதங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் அதில் சிலர் சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிரியாவின் இரண்டாவது பெரிய நகரத்தை கைப்பற்றிய கிளர்ச்சிக்குழு!!

சிரியா அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக இல்லாத அளவிலான மிகப்பெரிய தாக்குதலை கிளர்ச்சிக்குழுக்கள் கடந்த புதன்கிழமை தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை, சிரியா நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவில் அதிகளவிலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு தெற்கில் உள்ள ஹமாவை நோக்கி கிளர்ச்சிக்குழுக்கள் முன்னேறின. சிரியாவில் நடக்கும் மோதலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும், இஸ்லாமிய ஆயுதக் குழுவான ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (Hayat Tahrir al-Sham- HTS)’ தலைமையில் இந்த திடீர் தாக்குதல் நடந்துள்ளது. 2016 க்குப் பிறகு முதல் முறையாக அலெப்போவின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த இத்தாக்குதல் ரஷ்யாவைத் தூண்டியது.

2011 இல் அல் கொய்தாவின் நேரடி இணைப்பாக ‘ஜபத் அல்-நுஸ்ரா’ (Jabhat al-Nusra) என்ற வேறு பெயரில் ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ அமைக்கப்பட்டது. இஸ்லாமிய அரசு (IS) என தன்னை தானே அழைத்துக்கொள்ளும் குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியும் ஜபத் அல்-நுஸ்ராவின் உருவாக்கத்தில் ஈடுபட்டார். சிரியா அதிபர் அசாத்துக்கு எதிரான குழுக்களில், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கொடிய குழுவாக இது கருதப்பட்டது. ஆனால் அதன் புரட்சிகரக் கொள்கையை விட, ‘ஜிஹாதி சித்தாந்தம்’ அக்குழுவின் உந்து சக்தியாக கருதப்படுகிறது. 

 மேலும் அந்த நேரத்தில், “சுதந்திர சிரியா” எனும் பெயரில் இயங்கும் முக்கிய கிளர்ச்சிக் கூட்டணியுடன் இந்தக்குழு முரண்படுவதாகவும் அறியப்பட்டது. 2016-ஆம் ஆண்டில், இக்குழுவின் தலைவரான அபு முகமது அல்-ஜவ்லானி, அல் கொய்தாவுடன் உள்ள தொடர்பைப் பகிரங்கமாகப் பிரிந்து, ஜபத் அல்-நுஸ்ராவை கலைத்தார். 

பின்னர் ஒரு புதிய அமைப்பை நிறுவினார். ஒரு வருடம் கழித்து, இதே போன்ற பிற குழுக்களுடன் இணைந்தபோது ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ என்ற பெயரை இக்குழுப் பெற்றது.கடந்த நான்கு ஆண்டுகளாக சிரியாவில் போர் முடிந்துவிட்டதாக கருதப்பட்டது. நாட்டின் முக்கிய நகரங்களில், பிற ஆட்சியாளர்களின் போட்டியின்றி, சிரிய அதிபர் பஷர் அல்-அசாத்தின் ஆட்சி உள்ளது. ஆனால் அதே நேரத்தில், சிரியாவின் வேறு சில பகுதிகள் அவரது நேரடி கட்டுப்பாட்டில் இல்லை.

 கிழக்கில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகள் இதில் அடங்கும். அவை மோதலின் தொடக்க காலம் முதல், சிரியா அரசின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. 2011 இல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக தெற்கில் புரட்சி தொடங்கியது. அதைத் தொடந்து, அங்கு அமைதியின்மை நிலவத் தொடங்கியது. 

பரந்த சிரியா பாலைவனத்தில், ஐ.எஸ் அமைப்பு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். குறிப்பாக அதிக லாபம் ட்ரப்ல் எனும் காளான் வகையை சேகரிக்க மக்கள் அப்பகுதிக்குச் செல்லும் போது, அவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். சிரியாவின் வடமேற்கில் உள்ள ‘இட்லிப் மாகாணம்’ ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

இட்லிப்பில் உள்ள ஆதிக்க சக்தியான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பு அலெப்போ மீது திடீர் தாக்குதலை நடத்தியது.பல ஆண்டுகளாக, சிரியா அரசாங்கப் படைகள் தனது கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயன்றதால், இட்லிப் பகுதி போர்க்களமாகவே இருந்தது. ஆனால் நீண்டகாலமாக அசாத்தின் முக்கியக் கூட்டாளியாக இருந்த ரஷ்யா மற்றும் கிளர்ச்சியாளர்களை ஆதரித்த துருக்கியால் 2020 இல் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது .

சுமார் நான்கு மில்லியன் மக்கள் அங்கு வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர், போரில் அசாத்தின் படைகள் வென்ற நகரங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள். அலெப்போ கடும் பாதிப்பை சந்தித்த போர்க்களங்களில் ஒன்று .மேலும் போராட்டக்காரர்கள் பெரிய அளவில் தோல்வியடைந்த இடங்களிலும் ஒன்றாகும். வெற்றி அடைய, ரஷ்ய விமானப்படை மற்றும் இரானின் ராணுவ உதவியை அசாத் நம்பினார்.முக்கியமாக இரானால் ஆதரிக்கப்படும் ஆயுதக்குழுவின் உதவி மூலம் அசாத் வெற்றியை எதிர்நோக்கி இருந்தார். 

இதில் ஹெஸ்பொலாவும் அடங்கும். லெபனானில் ஹெஸ்பொலா மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல் மற்றும் சிரியாவில் இரானிய ராணுவத் தலைவர்கள் மீது நடந்த தாக்குதலின் விளைவாக, இட்லிப்பில் உள்ள ஜிஹாதிகள் மற்றும் புரட்சிக் குழுக்கள், இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி அலெப்போ மீது திடீர் தாக்குதல் நடத்த ஊக்குவித்திருக்கலாம்.

திங்கள், 2 டிசம்பர், 2024

ஈரானிய ஆதரவு போராளிகள் இராணுவத்திற்கு ஆதரவாக சிரியாவிற்குள்!!


அசாத்தின் இராணுவத்திற்கு ஆதரவாக ஈரானிய ஆதரவு போராளிகள் இரவோடு இரவாக சிரியாவுக்குள் நுழைந்தனர் - அறிக்கைகள்
ஈரானிய ஆதரவு போராளிகள் ஈராக்கில் இருந்து இரவோடு இரவாக சிரியாவிற்குள் நுழைந்து, கிளர்ச்சியாளர்களுடன் போரிடும் சிரிய இராணுவப் படைகளை வலுப்படுத்த வடக்கு சிரியாவிற்குச் சென்று கொண்டிருந்ததாக இரண்டு சிரிய இராணுவ வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளன.

"இவை வடக்கில் முன்னணியில் உள்ள எங்கள் தோழர்களுக்கு உதவுவதற்காக அனுப்பப்படும் புதிய வலுவூட்டல்கள்" என்று ஒரு மூத்த இராணுவ வட்டாரம் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.


பத்தரமுல்ல கல்வி அமைச்சுக்கு அருகில் ஆர்ப்பாட்டம்!!

பத்தரமுல்ல, இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பொலிஸார் கலைக்க முற்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையில், சம்பவத்தின் போது பல பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர், அதே நேரத்தில் மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

தம்மை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக்குமாறு கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் காரணமாக கல்வி அமைச்சுக்கு முன்பாக கொட்டாவ - பொரளை வீதி (174 பஸ் பாதை) போக்குவரத்து முற்றாக தடைப்பட்டதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

மாவனெல்ல தெவனகல 2 கோடி ரூபா பெறுமதியான சிலை திருட்டு-28 வயது தேரை!!

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நாக தேவதையுடன் கூடிய பழங்கால உலோக புத்தர் சிலையை திருடிய இரண்டு தேரர்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை மாவனெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். கரஹம்பிட்டிகொடவில் உள்ள கெத்தாராம எனும் புராதன விகாரையில் வைக்கப்பட்டிருந்த உலோக புத்தர் சிலையையே சந்தேகநபர்கள் இவ்வாறு திருடியுள்ளனர். 

மாவனெல்ல தெவனகல, வரலாற்று சிறப்பு மிக்க ரஜமஹா விகாரைக்கு சொந்தமான கரஹம்பிட்டிகொட கெத்தாராம புராதன விகாரையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான நாகையுடன் கூடிய புராதன உலோக புத்தர் சிலையை சிலர் திருடிச் சென்றுள்ளதாக தெவனகல ரஜமஹா விகாரையின் தலைவர் மாதிரிகிரி புக்னசார தேரர் சமீபத்தில் மாவனெல்ல பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். 

அதற்கமைய, சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, திருட்டு தொடர்பான விசாரணைகளை கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​கிம்புல்விலவத்த தொம்பே பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் 28 வயதுடைய தேரர், கண்டி மஹய்யாவ பிரதேசத்தில் உள்ள விகாரையின் தேரர் மற்றும் பேராதனை கன்னோறுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தொம்பே விகாரையின் தேரரின் திட்டத்திற்கமைய இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் மாவனெல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

அநுர அரசிடம் கையளிக்கப்பட்ட சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம்!!

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம், அவர் இறந்து ஐந்து மாதங்களின் பின்னர் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ இல்லத்தை கையளிப்பதற்கு அமைச்சு ஐந்துக்கும் மேற்பட்ட அறிவிப்புகளை விடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. 


கொழும்பு 7, மலலசேகர மாவத்தையில் உள்ள இந்த உத்தியோகபூர்வ இல்லம் 2015 ஆம் ஆண்டு சம்பந்தனுக்கு வழங்கப்பட்டது.பின்னர், நல்லாட்சி அரசாங்கத்தின் போது 2019 பெப்ரவரி 26 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம், இரா.சம்பந்தனுக்கு அமைச்சரவைப் பத்திரத்தில் உத்தியோகபூர்வ வாசஸ்தலமானது அவர் இருக்கும் வரையில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வழங்கப்பட்டது.

உத்தியோகபூர்வ இல்லம் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளதுடன், அதன் பராமரிப்பு பணிகள் அனைத்தும் கடந்த காலத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில், உத்தியோகபூர்வ இல்லம் கடந்த 12ஆம் திகதி அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என இரா.சம்பந்தனின் மகள் எழுத்து மூலம் அமைச்சுக்கு அறிவித்திருந்த போதிலும் அன்றைய தினம் அது கையளிக்கப்படவில்லை.இதன்படி, சம்பந்தன் உயிரிழந்து சுமார் ஐந்து மாதங்களின் பின்னர் தற்போது குறித்த இல்லம் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு வணக்கம்

தமிழ் மக்களின் உணர்வுகள் பாதிக்க கூடாது!-EPDP

மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அ...