புதன், 18 நவம்பர், 2026

தலைமன்னார் ரூ. 160 மில்லியன தங்கத்தை கடத்த முயன்ற நால்வர் கைது!

இலங்கை கடற்படையினரால் நேற்று தலைமன்னார் பேசாலை மற்றும் புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பிற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட இருவேறு விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, கடல் மார்க்கமாகக் கடத்த முயன்ற 4 கிலோகிராமுக்கும் அதிகமான தங்கத்துடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 



அத்துடன், 2 டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 160 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தங்கத்தை கடல் மார்க்கமாக தென்னிந்தியாவிற்குக் கொண்டு செல்ல முயற்சித்திருக்கலாம் என சந்தேகம் வடமத்திய கடற்படைக் கட்டளை பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, தலைமன்னார் வடக்குக் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகொன்று சோதனையிடப்பட்டது. 

குறித்த படகில் மணல் சாக்குக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கிலோகிராம் 410 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதனுடன் தொடர்புடைய 25 மற்றும் 28 வயதுடைய பேசாலைப் பகுதியைச் சேர்ந்த 2 சந்தேகநபர்கள் டிங்கி படகொன்றுடன் கைது செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பிரதி சுங்கப் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 


இதேவேளை, வடமேற்கு கடற்படைக் கட்டளை பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பில் ​நேற்றிரவு விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது குறித்த பகுதியில் சோதனையிடப்பட்ட டிங்கி படகின் எரிபொருள் கொள்கலனுக்குள் சூட்சுமமாக மறைத்து வைத்து கடத்தப்பட்ட சுமார் 3 கிலோகிராம் 25 கிராம் தங்கம் மீட்கப்பட்டது. 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 40 மற்றும் 50 வயதுடைய கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 2 சந்தேகநபர்கள், டிங்கி படகுடன் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கட்டுநாயக்க சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நானுஓயா குளவி கொட்டு 6 மாணவர்கள் வைத்தியசாலையில் !

நானுஓயா - எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 6 மாணவர்கள் குளவிக்கு கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று (18) காலை பாடசாலை கட்டடமொன்றின் கூரையிலிருந்த குளவிக்கூடு கலைந்ததில், அங்கு நின்ற மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். 

 இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பாடசாலை நிர்வாகத்தினரும் பிரதேசவாசிகளும், 1990 அவசர அம்பியூலன்ஸ் வண்டி மூலம் அவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 17 நவம்பர், 2026

செம்மணி மனிதப் புதைகுழியை வந்தடைந்த பேரணி

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரித்தும் அரியாலை தபால் கட்டை சந்தியிலிருந்து ஆரம்பமான கவனயீர்ப்புப் பேரணி தற்போது செம்மணி மனிதப் புதைகுழி பகுதியை வந்தடைந்துள்ளது. அத்துடன் செம்மணி மனிதப்புதைகுழி அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானம் முன்பாக பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாக குறிப்பிட்டு வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை இதன்போது வாசிக்கப்பட்டது. 

 ராஜ்சோமதேவாவின் அறிக்கையையும் அவருடைய உருவப் பொம்மையையும் இவ்விடத்திலே தீயிட்டு எரிக்கப்போவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்த நிலையில் ராஜ்சோமதேவாவின் அறிக்கையையும் அவருடைய உருவப் பொம்மையையும் தீயிட்டு எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரித்தும் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. 

 அரியாலை தபால் கட்டை சந்தியிலிருந்து ஆரம்பமான கவனயீர்ப்புப் பேரணி செம்மணி மனிதப் புதைகுழியை நோக்கி நகர்ந்து செல்கின்றது. செம்மணி மனிதப் புதைகுழி குறித்து பேராசிரியர் ராஜ் சோம தேவா நீதிமன்றுக்கு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பலாம் என கூறப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகவும், இந்த விவகாரத்தில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டு தமக்கு நீதியை வழங்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமது உறவுகள் சித்திரவைதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டு இந்த செம்மணி மனிதப் புதைகுழியிலே புதைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஏதோ ஒரு வகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாக இருக்கலாம் எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இதன்போது ”செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டும்”, “ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிக்கின்றோம்“, “எமது உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும்“ ஆகிய கோசங்களை எழுப்பியவாறு பேரணியை முன்னெடுக்கின்றனர்.

இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.

அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் மத்திய கிழக்குக்கு!!

அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பல், ஆயிரக்கணக்கான கூடுதல் வீரர்களை மத்திய கிழக்குக்கு அழைத்து வருகிறது.

ஈரான் போரில் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான தனது வாய்ப்புகளை டொனால்ட் டிரம்ப் திறந்து வைத்திருக்கும் நிலையில், மூன்றாவது அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மத்திய கிழக்குக்கு வந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் திங்களன்று ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது. 

இது அவரது இராணுவ பலத்தை வியத்தகு முறையில் வெளிக்காட்டும் ஒரு செயலாகும். ஈரான் மீது கூடுதல் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்துவதாக அச்சுறுத்துவதற்கும், எட்டு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்தப் போர் "இராணுவ ரீதியாக திறம்பட முடிந்துவிட்டது" என்று வலியுறுத்துவதற்கும் இடையில் டிரம்ப் ஊசலாடிக்கொண்டிருக்கும் வேளையில், யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் ஆயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்களை மத்திய கிழக்குக்குக் கொண்டுவருகிறது. 

 ரூஸ்வெல்ட், அதனுடன் இணைந்த தாக்குதல் படையுடன், செப்டம்பர் மாதம் சான் டியாகோவிலிருந்து புறப்பட்டது. ஈரானிய கப்பல் போக்குவரத்திற்கு கடற்படை முற்றுகையை பராமரிப்பதற்காக இப்பகுதியில் உள்ள யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் மற்றும் யுஎஸ்எஸ் ஜார்ஜ் வாஷிங்டன் விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் சிறிய கடற்படைக் கப்பல்களுடன் இதுவும் இணைகிறது. ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் ஏப்ரல் மாதத்திலும், ஜார்ஜ் வாஷிங்டன் ஆகஸ்ட் மாதத்திலும் இப்பகுதிக்கு வந்தடைந்தன. 

2003-க்குப் பிறகு முதன்முறையாக, கடற்படை ஏப்ரல் மாதத்தில் மத்திய கிழக்கில் மூன்று விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுக்களைக் கொண்டிருந்தது. கடற்படையின்படி, மூன்று விமானம் தாங்கிப் போர்க்கப்பல்களுடன், அரபிக்கடலில் உள்ள இந்த கப்பற்படையில் தற்போது 13 அழிப்புக் கப்பல்கள், இரண்டு போர்க்கப்பல்கள் மற்றும் ஒரு கடலோரப் போர்க்கப்பல் ஆகியவை அடங்கும். 

மேலும் இரண்டு அழிப்புக் கப்பல்கள் செங்கடலில் உள்ளன. ரூஸ்வெல்ட் கப்பலானது, யுஎஸ்எஸ் ஜான் பி முர்தா மற்றும் யுஎஸ்எஸ் ஆங்கரேஜ் ஆகிய நீர்நிலத் தரையிறங்குக் கப்பல்களையும் சுமார் 2,000 கடற்படை வீரர்களையும் உள்ளடக்கிய யுஎஸ்எஸ் மேக்கின் ஐலேண்ட் நீர்நிலத் தயார்நிலைக் குழுவுடன் சேர்ந்து நிலைநிறுத்தப்பட்டது. அந்தக் கப்பல்கள் இன்னும் அப்பகுதிக்கு வந்து சேரவில்லை.

ஈரான் போரின் மக்கள் செல்வாக்கின்மை மற்றும் அதன் பொருளாதார விளைவுகளால் ஓரளவு உந்தப்பட்டு, டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு வாக்காளர்கள் பெரும் இழப்புகளை அளித்த இடைக்காலத் தேர்தல்களுக்குப் பிறகு, மூன்றாவது விமானம் தாங்கிப் போர்க்கப்பல் வந்து சேர்ந்தது. 

இந்த முடிவுகள், ஜே.டி. வேன்ஸை இந்த மோதல் விவகாரத்தில் டிரம்புடன் பகிரங்கமாக முரண்படச் செய்தது. அவர் சமூக ஊடகங்களில், "நாம் தோற்றதற்குக் காரணம் போர்தான்" என்று பதிவிட்டார்.

இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கமானது இன்று (17) அதிகாலை 2.41 மணியளவில் 6.6 மெக்னிடுயிட்டாக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் பெண்டா கடற்பரப்பில் 20 கிலோமீற்றர் கடல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வௌியாகவில்லை. எவ்வாறாயினும் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திங்கள், 16 நவம்பர், 2026

சிவாஜிலிங்கத்திற்கு பெருந்திரளானோர் அஞ்சலி

நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளரும், தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை (14) நள்ளிரவு காலமான சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் வல்வெட்டித்துறை, நெடியகாடு, கல்றோட் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (16) காலை நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் வீட்டிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு வல்வெட்டித்துறை சந்தியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தி வருவதுடன் அஞ்சலி உரைகளும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், கட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.இதேவேளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவனும் சிவாஜிலிங்கத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

ஊடகவியலாளர்கள் தினத்தில்-முதல்வர் விஜய் வாழ்த்து

பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என்றும் துணை நிற்போம் என்று தேசிய பத்திரிகை தினத்தில் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய பிரஸ் கவுன்சில் (Press Council of India) சட்டம் 1965-ன் அடிப்படையில், இந்நிறுவனம் நவம்பர் 16, 1966 அன்று முறைப்படி செயல்படத் தொடங்கியது. அதைக் குறிக்கும் விதமாகவே இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. பொதுக் கருத்தை வடிவமைப்பதிலும், வளர்ச்சியை அதிகரிப்பதிலும், அதிகார மையங்களை கேள்வி கேட்பதிலும் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. முன்னேற்றத்திற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக, பத்திரிகைகள் உள்ளன. கோடிக்கணக்கான மக்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், வெளிப்படைத்தன்மையை வளர்ப்பதிலும் ஊடகங்கள் முன்னணியில் உள்ளன.பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என்றும் துணை நிற்போம்.

 முதல்வர் விஜய் வாழ்த்து நாட்டில் பதிவுசெய்யப்பட்ட பத்திரிகை வெளியீடுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2004-05-ம் ஆண்டில் இது 60,143 ஆக இருந்த நிலையில் 2024-25-ம் ஆண்டில் 1.54 லட்சமாக உயர்ந்துள்ளது. 

பணிபுரியும் பத்திரிகையாளர்கள் சட்டம் -1955, பத்திரிகை, பருவ இதழ்கள் பதிவு சட்டம்- 2023 போன்றவற்றின் மூலம், பத்திரிகையாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது. நாட்டில் செயல்படும் செய்தித்தாள் பதிவாளர் அலுவலகம் எனப்படும் ஆர்என்ஐ, பத்திரிகை, பருவ இதழ்கள் பதிவுச் சட்டத்தின் படியான ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக செயல்படுகிறது. 

 இந்நிலையில் முதல்வர் விஜய் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியப் பத்திரிகை கவுன்சில் செயல்படத் தொடங்கியதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் தேசிய பத்திரிகை நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில், அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறையானது, சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து, மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு மக்களாட்சியின் மாண்புகளைக் காக்கும் பணிகளையும் செம்மையாக மேற்கொண்டு வருகிறது. 

உண்மை, நேர்மை, நடுநிலை, நம்பகத்தன்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டுவரும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என்றும் துணை நிற்போம்!

Thank You Google

Thank You Google
Thanks