செவ்வாய், 17 நவம்பர், 2026

இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கமானது இன்று (17) அதிகாலை 2.41 மணியளவில் 6.6 மெக்னிடுயிட்டாக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் பெண்டா கடற்பரப்பில் 20 கிலோமீற்றர் கடல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வௌியாகவில்லை. எவ்வாறாயினும் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திங்கள், 16 நவம்பர், 2026

சிவாஜிலிங்கத்திற்கு பெருந்திரளானோர் அஞ்சலி

நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளரும், தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை (14) நள்ளிரவு காலமான சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் வல்வெட்டித்துறை, நெடியகாடு, கல்றோட் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (16) காலை நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் வீட்டிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு வல்வெட்டித்துறை சந்தியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தி வருவதுடன் அஞ்சலி உரைகளும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், கட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.இதேவேளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவனும் சிவாஜிலிங்கத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

ஊடகவியலாளர்கள் தினத்தில்-முதல்வர் விஜய் வாழ்த்து

பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என்றும் துணை நிற்போம் என்று தேசிய பத்திரிகை தினத்தில் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய பிரஸ் கவுன்சில் (Press Council of India) சட்டம் 1965-ன் அடிப்படையில், இந்நிறுவனம் நவம்பர் 16, 1966 அன்று முறைப்படி செயல்படத் தொடங்கியது. அதைக் குறிக்கும் விதமாகவே இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. பொதுக் கருத்தை வடிவமைப்பதிலும், வளர்ச்சியை அதிகரிப்பதிலும், அதிகார மையங்களை கேள்வி கேட்பதிலும் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. முன்னேற்றத்திற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக, பத்திரிகைகள் உள்ளன. கோடிக்கணக்கான மக்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், வெளிப்படைத்தன்மையை வளர்ப்பதிலும் ஊடகங்கள் முன்னணியில் உள்ளன.பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என்றும் துணை நிற்போம்.

 முதல்வர் விஜய் வாழ்த்து நாட்டில் பதிவுசெய்யப்பட்ட பத்திரிகை வெளியீடுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2004-05-ம் ஆண்டில் இது 60,143 ஆக இருந்த நிலையில் 2024-25-ம் ஆண்டில் 1.54 லட்சமாக உயர்ந்துள்ளது. 

பணிபுரியும் பத்திரிகையாளர்கள் சட்டம் -1955, பத்திரிகை, பருவ இதழ்கள் பதிவு சட்டம்- 2023 போன்றவற்றின் மூலம், பத்திரிகையாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது. நாட்டில் செயல்படும் செய்தித்தாள் பதிவாளர் அலுவலகம் எனப்படும் ஆர்என்ஐ, பத்திரிகை, பருவ இதழ்கள் பதிவுச் சட்டத்தின் படியான ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக செயல்படுகிறது. 

 இந்நிலையில் முதல்வர் விஜய் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியப் பத்திரிகை கவுன்சில் செயல்படத் தொடங்கியதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் தேசிய பத்திரிகை நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில், அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறையானது, சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து, மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு மக்களாட்சியின் மாண்புகளைக் காக்கும் பணிகளையும் செம்மையாக மேற்கொண்டு வருகிறது. 

உண்மை, நேர்மை, நடுநிலை, நம்பகத்தன்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டுவரும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என்றும் துணை நிற்போம்!

லாஃப்ஸ் ​நிறுவன அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டமை தொடர்பில் உரிய காரணங்களைக் கோரி விளக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

 அதற்கமைய, இது குறித்த விளக்கங்களைச் சமர்ப்பிப்பதற்காக லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு இன்று (16) காலை 10 மணிக்கு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு வருகை தந்துள்ளது.

கடந்த 13ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் கேஸ் சிலிண்டர்களின் விலைகளைத் திடீரென உயர்த்த அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது. 

 இதன் அடிப்படையில், 4,965 ரூபாவாக விற்கப்பட்டு வந்த 12.5 கிலோகிராம் வீட்டு பாவனை எரிவாயு சிலிண்டரின் மீள் நிரப்பல் விலை 1,775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 6,740 ரூபாவாக உயர்த்தப்பட்டது. அதேநேரம், 1,988 ரூபாவாக இருந்த 5 கிலோகிராம் வீட்டு பாவனை எரிவாயு சிலிண்டரின் மீள் நிரப்பல் விலையும் 732 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, தற்போது 2,720 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 

 சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரங்கள், கப்பற் கட்டணங்கள் மற்றும் காப்பீட்டுக் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளமையால், நாட்டுக்கு எரிவாயு தொகையைக் கொள்வனவு செய்வதற்கான மொத்தச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நலின் குருக்குலசூரிய அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இத்தகைய தவிர்க்க முடியாத சூழல் காரணமாகவே எரிவாயு விலையைத் திருத்தவேண்டி ஏற்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 15 நவம்பர், 2026

ரோஹிங்கியா இனப்படுகொலை – தீர்ப்பு

மியன்மார் இராணுவம் தனது சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக இனப்படுகொலை (Genocide) புரிந்ததா என்பது குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கின் தீர்ப்பை, உலகின் உச்ச நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம் (ICJ) இவ்வாரம் வியாழக்கிழமை (நவம்பர் 19) காலை வழங்கவுள்ளது. 

 இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சர்வதேசச் சட்ட வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாகவும், 21 ஆம் நூற்றாண்டின் பாரிய சர்வதேசக் குற்றங்களுக்கான தீர்க்கமான அளவுகோலாகவும் இத்தீர்ப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாஜிப் படுகொலைகளுக்குப் (Holocaust) பின்னர் வரையறுக்கப்பட்ட ‘இனப்படுகொலை’ குற்றத்திற்காக, எந்தவொரு நாட்டையும் சர்வதேச நீதிமன்றம் இதுவரை குற்றவாளியாகத் தீர்ப்பளித்ததில்லை. இத்தீர்ப்பானது இஸ்ரேலுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள மற்றுமொரு முக்கிய இனப்படுகொலை வழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

இலட்சக்கணக்கான முஸ்லிம் ரோஹிங்கியா மக்கள் எல்லையைத் தாண்டித் தப்பிச் செல்லக் காரணமாக அமைந்த இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்று ஏறத்தாழ ஒரு தசாப்தம் ஆகியுள்ள நிலையில், 1948 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலைத் தடுப்புச் சாசனத்தை மியன்மார் மீறியதாக முஸ்லிம் பெரும்பான்மை நாடான காம்பியா (The Gambia) தொடுத்த வழக்கை ICJ நீதிபதிகள் கடந்த ஏழு ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றனர்.

மியன்மாருக்கான முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் புலனாய்வாளர் யாங்கி லீ (Yanghee Lee) கருத்துத் தெரிவிக்கையில், “உலகெங்கிலும் உள்ள ரோஹிங்கியா உயிர் பிழைத்தவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ICJ தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும். 

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ரோஹிங்கியாக்களுக்கு எதிரான மியன்மார் இராணுவத்தின் அட்டூழியங்களைத் தடுக்கச் சர்வதேச சமூகம் தவறிவிட்டது. இறுதியாக அவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

 நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா மக்களின் சார்பாக வாதாடும் ‘லீகல் ஆக்‌ஷன் வேர்ல்ட்வைட்’ (Legal Action Worldwide – LAW) அமைப்பின் நிறுவனர் அன்டோனியா முல்வே (Antonia Mulvey), மியன்மாரை நீதிமன்றம் முழுமையாகப் பொறுப்புக்கூற வைக்கும் எனத் தான் “எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கையுடன்” இருப்பதாகக் கூறினார். 

கிராமங்கள் மீதான தாக்குதல்கள் ஒரே மாதிரியான திட்டமிட்ட பாணியில் (Patterns of conduct) நடத்தப்பட்டதாகவும் — பொதுமக்களைத் தாக்குவது, கிராமங்களை எரிப்பது, ஆண்களையும் பெண்களையும் பிரித்து பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது மற்றும் தப்பி ஓடுபவர்களைத் தொடர்ந்து கொல்வது போன்ற செயற்பாடுகள் அந்த இனத்தை அழிக்கும் தெளிவான நோக்கத்தை நிரூபிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

சர்வதேசச் சட்டங்களின்படி, ஒரு தேசிய, இன, நிற அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் “உள்நோக்கத்துடன்” (Intent) மேற்கொள்ளப்படும் செயல்களே ‘இனப்படுகொலை’ என வரையறுக்கப்படுகின்றன. 

முந்தைய பல சர்வதேச வழக்குகளில் இந்த “உள்நோக்கத்தை” நிரூபிப்பதே மிக முக்கிய சட்டச் சவாலாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மக்களே சிவப்பு எச்சரிக்கை..!

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இலங்கையின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


 அதன்படி தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பு மற்றும் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பயணிக்கும் பலநாள் கடற்றொழில் படகுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் வடக்கு நோக்கிய சாய்வுடன் வடமேற்குத் திசையில் நகர்ந்து, இன்று (15) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைய அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, வட அட்சரேகை 5 முதல் 15 வரையிலும், கிழக்கு நெடுங்கோடு 80 முதல் 90 வரையிலும் அமைந்துள்ள கடற்பரப்புகளிலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளிலும் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 அத்துடன், ஏற்கனவே குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

மறைந்த எம்.கே சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியை

 எம்.கே சிவாஜிலிங்கத்தின் இறுதிக் கிரியைகள் நாளை (16) நடைபெறவுள்ளது. அன்னாரின் உடல் வல்வெட்டித்துறை, நெடியகாட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நாளை மதியம் 12 மணியளவில் வல்வெட்டித்துறை சந்தியில் அன்னாரின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர், வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்திற்கு அன்னாரது பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தமது 69 வயதில் நேற்று (14) இரவு காலமானார். 

நீண்ட காலமாக உடலநலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்றிரவு 11.35 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. சிலவருடங்களாக சிறுநீரக செயலிழப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த சிவாஜிலிங்கத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் , கொழும்பில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

பின்னர் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய அவருக்கு, சில வாரங்களுக்கு முன்னர் கடுமையான உடல்நலகுறைவு ஏற்பட்டது இதனை அடுத்து அவர் பருத்தித்த்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பியிருந்தார். 

இந்நிலையிலேயே ,நேற்றைய தினம் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமராட்சி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.கே சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) போராளியாக இருந்து, தனது நீண்ட அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 தொடர்ந்து வந்த கால பகுதியில் வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும், கடந்த ஆண்டு முதல் வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவராகவும் பொறுப்பேற்று, மக்கள் சேவையை முன்னெடுத்து வந்தார். தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனநாயக போராட்டங்களில் ஈடுபட்டு குரல் கொடுத்து வந்தார். 

அவரது மறைவு தமிழ் தேசிய அரசியல் வட்டாரத்திலும், அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறை மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்களும் தமது இரங்கலை வௌியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Thank You Google

Thank You Google
Thanks