ஞாயிறு, 15 நவம்பர், 2026

ரோஹிங்கியா இனப்படுகொலை – தீர்ப்பு

மியன்மார் இராணுவம் தனது சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக இனப்படுகொலை (Genocide) புரிந்ததா என்பது குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கின் தீர்ப்பை, உலகின் உச்ச நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம் (ICJ) இவ்வாரம் வியாழக்கிழமை (நவம்பர் 19) காலை வழங்கவுள்ளது. 

 இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சர்வதேசச் சட்ட வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாகவும், 21 ஆம் நூற்றாண்டின் பாரிய சர்வதேசக் குற்றங்களுக்கான தீர்க்கமான அளவுகோலாகவும் இத்தீர்ப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாஜிப் படுகொலைகளுக்குப் (Holocaust) பின்னர் வரையறுக்கப்பட்ட ‘இனப்படுகொலை’ குற்றத்திற்காக, எந்தவொரு நாட்டையும் சர்வதேச நீதிமன்றம் இதுவரை குற்றவாளியாகத் தீர்ப்பளித்ததில்லை. இத்தீர்ப்பானது இஸ்ரேலுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள மற்றுமொரு முக்கிய இனப்படுகொலை வழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

இலட்சக்கணக்கான முஸ்லிம் ரோஹிங்கியா மக்கள் எல்லையைத் தாண்டித் தப்பிச் செல்லக் காரணமாக அமைந்த இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்று ஏறத்தாழ ஒரு தசாப்தம் ஆகியுள்ள நிலையில், 1948 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலைத் தடுப்புச் சாசனத்தை மியன்மார் மீறியதாக முஸ்லிம் பெரும்பான்மை நாடான காம்பியா (The Gambia) தொடுத்த வழக்கை ICJ நீதிபதிகள் கடந்த ஏழு ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றனர்.

மியன்மாருக்கான முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் புலனாய்வாளர் யாங்கி லீ (Yanghee Lee) கருத்துத் தெரிவிக்கையில், “உலகெங்கிலும் உள்ள ரோஹிங்கியா உயிர் பிழைத்தவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ICJ தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும். 

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ரோஹிங்கியாக்களுக்கு எதிரான மியன்மார் இராணுவத்தின் அட்டூழியங்களைத் தடுக்கச் சர்வதேச சமூகம் தவறிவிட்டது. இறுதியாக அவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

 நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா மக்களின் சார்பாக வாதாடும் ‘லீகல் ஆக்‌ஷன் வேர்ல்ட்வைட்’ (Legal Action Worldwide – LAW) அமைப்பின் நிறுவனர் அன்டோனியா முல்வே (Antonia Mulvey), மியன்மாரை நீதிமன்றம் முழுமையாகப் பொறுப்புக்கூற வைக்கும் எனத் தான் “எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கையுடன்” இருப்பதாகக் கூறினார். 

கிராமங்கள் மீதான தாக்குதல்கள் ஒரே மாதிரியான திட்டமிட்ட பாணியில் (Patterns of conduct) நடத்தப்பட்டதாகவும் — பொதுமக்களைத் தாக்குவது, கிராமங்களை எரிப்பது, ஆண்களையும் பெண்களையும் பிரித்து பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது மற்றும் தப்பி ஓடுபவர்களைத் தொடர்ந்து கொல்வது போன்ற செயற்பாடுகள் அந்த இனத்தை அழிக்கும் தெளிவான நோக்கத்தை நிரூபிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

சர்வதேசச் சட்டங்களின்படி, ஒரு தேசிய, இன, நிற அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் “உள்நோக்கத்துடன்” (Intent) மேற்கொள்ளப்படும் செயல்களே ‘இனப்படுகொலை’ என வரையறுக்கப்படுகின்றன. 

முந்தைய பல சர்வதேச வழக்குகளில் இந்த “உள்நோக்கத்தை” நிரூபிப்பதே மிக முக்கிய சட்டச் சவாலாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks