திங்கள், 19 அக்டோபர், 2026

சென்னை, புறநகரில் கனமழை -செம்பரம்பாக்கம், புழல் ஏரி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி விளங்குகிறது. கடந்த சில நாட்களாக அதிகப்படியான புவி வெப்பத்தின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து, ஆங்காங்கே தரைகள் தெரியும் அளவிற்கு காட்சியளித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில் தற்போது தண்ணீர் 14.21 அடியாகவும், மொத்த நீரின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில் 1,390 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 655 கன அடியாகவும் உள்ளது. 

தற்போது தினமும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சென்னை குடிநீர் மற்றும் சிப்காட் தேவைகளுக்காக 203 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்ந்து மழை பெய்தால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் எந்தவித தட்டுப்பாடும் ஏற்படாது எனவும், அவ்வாறு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையில், சிக்கராயபுரம் கல்குவாரியில் தேங்கியிருக்கும் அதிகப்படியான மழைநீரை சுத்தம் செய்து சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் ஏரியை கண்காணித்து வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் சோழவரம், செங்குன்றம், புழல் சுற்றுவட்டார இடங்களில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்குன்றத்தில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு நேற்று முன்தினம் 663 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1485 கன அடியாக அதிகரித்துள்ளது. 

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், 2037 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 14.95 அடி உயரத்தில் நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக புழல் ஏரியில் இருந்து 171 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. புழல் ஏரிக்கு ஒரே நாளில் 111 மில்லியன் கன அடி நீர்வரத்து வந்துள்ளதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது.

ஞாயிறு, 18 அக்டோபர், 2026

பிரான்சில் போராட்டங்கள் தொடர்பான கைதுகளின் எண்ணிக்கை 1,800

பிரான்சில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,800 ஆக உயர்வு சனிக்கிழமையன்று பிரான்சில் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக 1,800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சக அதிகாரி லாரன்ட் நுனெஸ் தெரிவித்துள்ளார்.

 'எக்ஸ்' (X) தளத்தில் பதிவிட்டுள்ள நுனெஸ், "குடியரசு ஒருபோதும் பணியாது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் போராட்டங்களின் போது 500-க்கும் மேற்பட்ட காவலர்கள், துணை ராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர். சேதமடைந்த கடைகளைச் சுட்டிக்காட்டிய நுனெஸ், "பொருளாதார ரீதியான சேதங்கள் மிக அதிகம்" என்று கூறினார். 

 பிரான்ஸ் முழுவதும் கட்டடங்களைச் சூறையாடிய மற்றும் கொள்ளையடித்த "குற்றவாளிகள்" மற்றும் ஆயிரக்கணக்கான "தீவிர இடதுசாரி" போராட்டக்காரர்களே இதற்கு காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார். "குழப்பத்தையும் வன்முறையையும் திணிக்க முயல்பவர்களுக்கு முன்னால், குடியரசு எதற்கும் பணியாது" என்று அவர் தெரிவித்தார்.

வன்முறையின் மூலம், திட்டமிட்ட முறையில் குழப்பத்தை விளைவிப்பது ஏற்புடையதல்ல. காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது, அரசு நிறுவனங்களை இலக்கு வைப்பது, பொதுக் கட்டிடங்களைச் சேதப்படுத்துவது, அரசு அலுவலகங்கள் அல்லது நகர மன்றங்களுக்குள் அத்துமீறி நுழைவது மற்றும் வணிக நிறுவனங்களைக் கொள்ளையடிப்பது - இவை எதையும் நியாயப்படுத்த முடியாது. 

அக்டோபர் 17 அன்று நடந்த நிகழ்வுகளுக்குப் பிறகு - சில நகரங்களில் இவை நள்ளிரவு வரை நீடித்தன - பிரான்ஸ் முழுவதும் மிகக் கடினமான சூழலில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் முழுமையான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

நண்பகல் நேரத்திற்குள்ளேயே - மார்சேய் நகரில் காலை முதலே - தீவிர இடதுசாரிச் சிந்தனை கொண்ட ஆயிரக்கணக்கான நபர்கள், பொதுக் கட்டிடங்களைத் தாக்க வேண்டும் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் மோத வேண்டும் என்ற நோக்கத்துடன் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர்.

அவர்களுடன் குற்றவாளிகளும் இணைந்து, பாரிஸ், மார்சேய், லியோன், போர்டோ, ரென்ஸ், ஸ்ட்ராஸ்பர்க், கிரெனோபிள், நைஸ், லிமோஜஸ் உள்ளிட்ட பல பிரெஞ்சு நகரங்களில் வணிக நிறுவனங்களைக் கொள்ளையடித்தும், சூறையாடியும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். 

தற்போதைய நிலவரப்படி, 1,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளைக் கண்டறிந்து, அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, பொறுப்புக்கூற வைப்பதற்கான விசாரணைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்த வன்முறையின் விளைவாக, இதுவரை 500-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர். 

 துரதிர்ஷ்டவசமாக, இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்காலிகமானதுதான். ஏற்பட்டுள்ள பொருள் சேதம் மிக அதிகம்; நூற்றுக்கணக்கான வணிக உரிமையாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழப்பத்தையும் வன்முறையையும் திணிக்க முயல்பவர்களுக்கு முன்னால், இந்த குடியரசு ஒருபோதும் பணியாது.

சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் இசையமைப்பாளர் தேவாவின் உடல்

நேற்றையதினம் அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அரசியல் பிரமுகர்கள் மற்றம் சினிமாப் பிரபலங்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் பூதவுடன் இன்று (18) பகல் 1 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகில் மாங்காடு கிராமத்துக்கு இறுதிச் சடங்குகளுக்காக கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவாவின் உடலுக்கு சடங்குகள் முடிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. 

இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மறைவால் திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

2027 புதிதாக 30,000 ஆசிரியர்கள்--ஹரிணி அமரசூரிய

எதிர்வரும் ஆண்டில் 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்காகப் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் மாநாட்டில் இன்று (18) கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், நடப்பு ஆண்டில் தரம் 1க்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

அனைத்துப் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் தற்போதைய அரசாங்கத்தினால் புதிய கல்வி முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

பரீட்சைக்கு மாத்திரம் முகங்கொடுக்கும் பிள்ளைக்குப் பதிலாக, எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புகளுடன் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பு எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

இதேவேளை, 17,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் நவம்பர் 20ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். 

பல்கலைக்கழக அமைப்புக்கு 2,000 விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளிப்படுத்தினார். 

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதமளவில் ஒட்டுமொத்தக் கல்வி கட்டமைப்புக்கும் புதிதாக சுமார் 30,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கு மேலதிகமாகப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

சனி, 17 அக்டோபர், 2026

யாழ் மாவட்டத்தில் மூன்று பிரதேச செயலக பிரிவில் 11.23 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிலும் பயன்பாட்டிலும் இருந்துவந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளன. இக் காணிகளை விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்து யாழ். மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனிடம் கையளிக்கப்பட்டன. 

பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஒருங்கிணைப்பு அதிகாரி கேர்ணல் W.M.A.M. நிசங்கவினால் இவ் ஆவணங்கள் மாவட்ட செயலரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்து வைக்கப்பட்டன.


விடுவிக்கப்பட்ட காணிகளின் பிரதேச செயலகப் பிரிவு ரீதியான விபரம்:
 வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவு): 1.29 ஏக்கர் 

 நல்லூர் பிரதேச செயலகப் பிரிவு: 5.06 ஏக்கர் 

 வடமராட்சி கிழக்கு (மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவு): 4.88 ஏக்கர்

 இதற்கமைய, மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மொத்தம் 11.23 ஏக்கர் காணிகள் பொதுமக்களின் மீள்குடியேற்றம் மற்றும் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டு அதற்கான ஆவணங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் அருகே 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிய சொகுசுப் பேரூந்து!

புத்தளம் அருகே சொகுசுப் பேரூந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து புத்தளம் வழியாக அநுராதபுரம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சொகுசுப் பேரூந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த பேரூந்து புத்தளம் மற்றும் கருவலகஸ்வெவ பிரதேசங்களுக்கு இடைப்பட்ட மீஒய பாலத்தில் இருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடும் மழை காரணமாக பாதையில் வழுக்குப்பட்டு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தநிலையில் பேரூந்து மீஒய பாலத்தில் இருந்து பள்ளத்தில் பாய்ந்துள்ளது.

நாகப்பட்டினத்தில் 135 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த தவெக நிர்வாகி பதுக்கி வைத்திருந்த ரூ.135 கோடி மதிப்பிலான உயர் ரக போதை பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். 

ரூ.270 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தப்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். தவெக நிர்வாகி பூபாலன், அவரது கூட்டாளிகள் சுகன், சதீஷ், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

போதைப் பொருள் வழக்கில் நாகை சுங்கத்துறை அலுவலகத்தில் தவெக நிர்வாகியிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். நாகை சுங்கத்துறை அலுவலகத்தில் தவெக நிர்வாகி உள்ளிட்ட 4 பேரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். 

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு தஞ்சையில் உள்ள போதைப் பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர்.

Thank You Google

Thank You Google
Thanks