ஞாயிறு, 27 செப்டம்பர், 2026

வடக்கின் 2025 ஆம் ஆண்டில் சிறந்த 15 பிரதேச செயலகங்கள்!

2025 ஆம் ஆண்டில் சிறந்த முறையில் பணியாற்றிய வட மாகாணப் பிரதேச செயலகங்களை மதிப்பீடு செய்து கௌரவிக்கும் நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.


பொதுமக்களுக்கு மிகவும் திறமையாகவும் விரைவாகவும் சேவைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளைப் பிரதேச செயலக மட்டம் வரை பரவலாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகங்களுக்கு இடையில் ஜனாதிபதி நிதியத்தின் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்வது மற்றும் அவற்றுக்குக் விரைவாகப் பதிலளிக்கும் திறனின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 3 பிரதேச செயலகங்கள் வீதம், தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பிரதேச செயலகங்கள் இவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டன. 

 அதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலாம் இடத்தை நல்லூர் பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை சாவகச்சேரி பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டன. கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாம் இடத்தை கிளிநொச்சி பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை பூநகரி பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டன. 

மன்னார் மாவட்டத்தில் முதலாம் இடத்தை நானாட்டான் பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை மன்னார் பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை மாந்தை மேற்கு பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டன. முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாம் இடத்தை கரைதுறைப்பற்று பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை ஒட்டுசுட்டான் பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டன. 

வவுனியா மாவட்டத்தில் முதலாம் இடத்தை வவுனியா பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை வவுனியா வடக்கு பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை வெண்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டன.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்லத்தம்பி திலகநாதன், எம். ஜெகதீஸ்வரன் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சனி, 19 செப்டம்பர், 2026

BRICS அமைப்பு 21 நாடுகளின் வலிமைமிக்க கூட்டணி!!

வரலாற்றில் எப்போதாவதுதான் உலக ஒழுங்கைத் தலைகீழாக மாற்றக்கூடிய மாபெரும் திருப்பங்கள் நிகழும். அப்படியொரு வரலாற்றுத் தருணத்தில்தான் இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஐந்து நாடுகளின் எளிய கூட்டமைப்பாகத் தொடங்கப்பட்ட BRICS அமைப்பு, இன்று உலக வரைபடத்தில் வல்லாதிக்க சக்திகளின் கணக்கைப் புரட்டிப் போடும் ஒரு பிரமாண்டமான பொருளாதாரப் பேரரசாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

தொடக்கத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டிருந்த இந்த அமைப்பு, தற்போது 11 முழு உறுப்பினர்களையும், 10 பங்குதாரர் நாடுகளையும் கொண்டு 21 நாடுகளின் வலிமைமிக்க கூட்டணியாக உருவெடுத்துள்ளது. 

இதன் முழு உறுப்பினர்கள் யாரெனில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியா. இதன் பங்குதாரர் நாடுகள் யாரெனில் பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம். இந்த 21 நாடுகளின் கூட்டணி, இன்று உலக மக்கள் தொகையில் பாதியளவைக் கொண்டுள்ளது. 

அதுமட்டுமின்றி, உலகளாவிய Purchasing Power Parity 40 சதவீத பங்களிப்பையும், உலகளாவிய வர்த்தகத்தில் நான்கில் ஒரு பகுதியையும் தன்வசப்படுத்தி நிற்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியமும் மேற்குலக நாடுகளும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து, அதன் பொருளாதாரத்தை முடக்க முயன்றபோது, அவை ஒரு புதிய உலகப் போருக்கான விதையைத் தாங்களே அறியாமல் விதைத்தன.

ரஷ்யாவைத் தனிமைப்படுத்தி முடக்க முயன்ற அமெரிக்காவின் திட்டங்கள் தறிக்கெட்டுப் போயின. ரஷ்யா துவண்டுவிடவில்லை; மாறாக, மாற்றுப் பாதைகளைத் தேடியது. BRICS அமைப்பு மூலமாக ரஷ்யாவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் புதிய கதவுகள் திறக்கப்பட்டன. 

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களையும் தடைகளையும் தாண்டி, ரஷ்யா ஈட்டிய இந்த வெற்றியானது உலக நாடுகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்தக் கூட்டணியின் மிக முக்கிய ஆயுதம் டாலர் ஒழிப்பு (De-dollarization) ஆகும். இனி இந்த 21 நாடுகளும் அமெரிக்க டாலரை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. தங்களுக்கிடையேயான வர்த்தகத்தை சீன யுவான் (Yuan) அல்லது தங்களது சொந்த உள்ளூர் நாணயங்களிலேயே மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. 

தசாப்தங்களாக உலகப் பொருளாதாரத்தை ஒடுக்கி வந்த அமெரிக்க டாலரின் ஏகபோக அதிகாரம் இதன் மூலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. உலக நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அமெரிக்கா பயன்படுத்தி வந்த பொருளாதாரக் கயிறு அறுபட்டு வருகிறது. 

BRICS அமைப்பு இப்போது வெறும் நாடுகளின் கூட்டமைப்பு அல்ல,அது உலகப் பொருளாதாரத்தின் புதிய மையப்புள்ளி. இந்த மகத்தான எழுச்சி தொடர்ந்தால், உலக அரங்கில் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களும், பொருளாதாரத் திமிர்த்தனமும் காலாவதியாகிவிடும். 

மேற்குலகின் பிடியில் சிக்கித்வித்த உலகப் பொருளாதாரம், இப்போது பலமுனை அதிகார மையமாக (Multi-polar world order) மாறிவருகிறது. அமெரிக்காவின் மிரட்டல்களுக்குப் பயப்பட இனியும் இவர்கள் தயாரில்லை.

 அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கமும், அதன் ஒடுக்குமுறை அரசியலும் முடிவுக்கு வரும் காலம் உறுதியாக நெருங்கிவிட்டது. BRICS அமைப்பின் இந்த மாபெரும் எழுச்சி மற்றும் உள்ளூர் நாணயங்களிலான வர்த்தகம் ஆகியவை, அமெரிக்கா தனது ஏகபோக சக்தியை இழந்து வருவதற்கான தெளிவான சாட்சிகளாகும். 

 இனி உலகப் பொருளாதாரம் ஒருசில நாடுகளின் பிடியில் இருக்காது,மாறாக, சமமான பலமுனை கொண்ட (Multi-polar) ஒரு புதிய உலக ஒழுங்கு அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றும். 

 அமெரிக்காவின் மிரட்டல்களும் பொருளாதார ஏகாதிபத்தியமும் முடிவுக்கு வரும் இந்த வரலாற்றுத் திருப்பம், உலக வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமையவிருக்கிறது. இந்த மாற்றத்தின் தாக்கம் வரவிருக்கும் காலங்களில் உலக அரசியலையும் பொருளாதாரத்தையும் முற்றிலும் மாற்றி எழுதும் என்பதில் ஐயமில்லை.
முகிந்தன் துரைராஜசிங்கம்

புதன், 9 செப்டம்பர், 2026

அமெரிக்காவின் பிடியிலிருந்து உலக நாடுகள் மெல்ல நழுவுகின்றன

இன்றைய உலக நிதிச் சந்தையில் அரசியல் தலைவர்களின் வார்த்தைகளை விட, மத்திய வங்கிகளின் ரகசிய நகர்வுகள்தான் உண்மையான பொருளாதார உண்மைகளை நமக்கு உரக்கச் சொல்கின்றன. 

 அமெரிக்காவின் பிடியிலிருந்து உலக நாடுகள் எப்படி மெல்ல நழுவுகின்றன என்பதை விளக்கும் ஒரு விரிவான பார்வை இது. சமீபத்தில் நெதர்லாந்து நாடு அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்த தனது தங்கத்தை மிக அமைதியாக வெளியேற்றி லண்டனுக்கு மாற்றியுள்ளது. சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள 86 டன் தங்கம் எந்தவித ஆரவாரமும் இன்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

பல தசாப்தங்களாக, உலக நாடுகள் தங்கள் நாட்டு தங்கத்தை அமெரிக்காவின் நியூயார்க் Federal Reserve வங்கியிலும் கனடாவிலும் பாதுகாப்பாக வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக (குறிப்பாக உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவின் வெளிநாட்டுச் சொத்துக்கள் அமெரிக்காவால் முடக்கப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு) உலக நாடுகளின் பார்வை முற்றிலும் மாறியது. 

அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படும் நாடுகளின் நிதிச் சொத்துக்களை ஒரே கிளிக்கில் முடக்க முடியும் (Sanctions and Asset Freezes) என்ற நிலை உருவாக்கப்பட்டபோது, அமெரிக்காவின் federal reserve ல் இருக்கும் தங்களுடைய தங்கம் கூட இனி முற்றிலும் பாதுகாப்பானதல்ல” என்ற சந்தேகம் ஐரோப்பிய நாடுகளுக்குள் எழுந்தது. 

நெதர்லாந்து 86 டன் தங்கத்தையும், பிரான்ஸ் 129 டன் தங்கத்தையும் நியூயார்க்கிலிருந்து ரகசியமாகத் திரும்பப் பெற்றமை இதற்கு சிறந்த சான்றாகும். அதிகாரப்பூர்வமாக இது "தளவாடப் பாதுகாப்பு" (Crisis preparedness & Logistics) என்று கூறப்பட்டாலும், உண்மை என்னவென்றால், அமெரிக்க அதிகார வரம்பிலிருந்து தங்கள் நாட்டின் மிக மதிப்புமிக்க சொத்தை வெளியே கொண்டு செல்வதே இதன் பிரதான நோக்கமாகும்.

 டச்சு மத்திய வங்கியான DNB (De Nederlandsche Bank) கடந்த செப்டம்பர் 2-ம் தேதி ஒரு பெரிய உண்மையை ஒப்புக்கொண்டது. இந்த ஆண்டின் மார்ச் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள், அது 86 மெட்ரிக் Ton தங்கத்தை இடம் மாற்றியுள்ளது. மதிப்பீட்டின்படி, 86 டன் தங்கத்தின் மதிப்பு சுமார் 12 பில்லியன் டாலர்கள் என்பதே அந்த செய்தி. 

இதில் வியப்பு என்னவென்றால், சுமார் 21 Ton தங்கம் விமானம் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து Zeist என்ற சிறிய நகருக்கு அருகில் உள்ள இரகசிய இராணுவ தளத்திற்கு முதலில் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து லண்டனுக்கு மாற்றப்பட்டது. 

மீதமுள்ள 65 டன் தங்கம் நியூயார்க்கிலேயே விற்கப்பட்டு, அந்தப் பணத்தைக் கொண்டு லண்டனில் புதிய தங்கம் வாங்கப்பட்டது. இதை ஏன் இவர்கள் இவ்வாறு இரகசியமாக செய்யவேண்டும் ? டச்சு மத்திய வங்கியின் ஆளுநர் Olaf Sleijpen இதற்கு விளக்கம் அளித்தார். அவருன் கூற்றுப்படி, லண்டனில் உள்ள தங்கம்தான் உலகிலேயே மிக எளிதாக வணிகம் செய்யக்கூடியது (Most easily tradable gold).

ஒருவேளை அவசர காலம் (Crisis) ஏற்பட்டால், அதை உடனடியாக விற்றுப் பயன்படுத்த முடியும் என்றார். நெதர்லாந்து மட்டுமா இந்தச் செயலில் ஈடுபட்டது என்றால் அதுதான் இல்லை. பிரான்சின் மத்திய வங்கியும் கிட்டத்தட்ட இதே போன்றதொரு காரியத்தை மிக அமைதியாகச் செய்துள்ளது. 2025 ஜூலைக்கும் 2026 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில், பிரான்ஸ் தனது 129 டன் தங்கத்தை நியூயார்க்கிலிருந்து ரகசியமாகத் திரும்பப் பெற்றது. 

இது பிரான்சின் மொத்த தங்க இருப்பில் 5 சதவீதமாகும். ஐரோப்பாவின் மிகவும் எச்சரிக்கையான இந்த இரண்டு நிதி நிறுவனங்களும் அடுத்தடுத்து ஒரே மாதிரியான முடிவை எடுத்திருப்பது வெறும் சாதாரண நிகழ்வு அல்ல. இதுவொரு தெளிவான பாரிய உலக பொருளாதார மாற்றம் தொடர்பான Signal ஆகும். ஏன் திடீரென இவ்விரு நாடுகளும் தங்கள் தங்கங்களை மீள பெற்றுக் கொள்கின்றன என நீங்கள் நினைக்கலாம்.

சமீப கால உலக அரசியல் நிகழ்வுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளன: உக்ரைன் போரைத் தொடர்ந்து, ரஷ்யாவின் பல நூறு பில்லியன் டாலர் மதிப்புள்ள வெளிநாட்டுச் சொத்துக்களை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஒரே நொடியில் முடக்கின, 

எந்தவொரு நாடாவது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டால், அமெரிக்காவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் சொத்துக்களும் தங்கமும் பாதுகாப்பாக இருக்காது என்ற கடுமையான அச்சம் ஐரோப்பிய நாடுகளுக்குள் எழுந்துள்ளது.

நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் பாரம்பரியமாக அமெரிக்காவுடன் நட்பில் இருந்தாலும், "எங்கள் நாட்டின் இறுதிப் பாதுகாப்பு அரணான தங்கத்தை மற்றொரு நாட்டின் கட்டுப்பாட்டில் வைப்பது ஆபத்தானது" என்ற எச்சரிக்கை உணர்வின் காரணமாகவே இந்த மீட்கும் படலத்தை ரகசியமாக அரங்கேற்றின. 

உலகளாவிய பொருளாதார நிலையற்ற தன்மையும், போர்ச் சூழல்களும் அதிகரித்து வரும் தற்காலத்தில், தங்கத்தைத் தங்களுக்கு மிக அருகில் அல்லது எளிதில் கையாளக் கூடிய லண்டன் போன்ற பாதுகாப்பான மையங்களுக்கு மாற்ற வேண்டிய அவசியத்தை இந்தச் சூழல் ஏற்படுத்தியது. ஐரோப்பிய நாடுகள் பகிரங்கமாக அமெரிக்க டாலரை எதிர்க்காவிட்டாலும், அமெரிக்க டாலர் மற்றும் நியூயார்க் நிதிச் சந்தையை மட்டும் முழுமையாக நம்பியிருக்கும் நிலையை மாற்ற விரும்புகின்றன. 

தங்கள் நாட்டின் சொத்துக்களை அமெரிக்காவின் பிடியிலிருந்து சிறிது சிறிதாக வெளியேற்றுவதன் மூலம், தங்களது பொருளாதாரச் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ள முயல்கின்றன. ஐரோப்பாவின் மிகவும் பழமைவாத மற்றும் கவனமாகச் செயல்படக்கூடிய இரண்டு மத்திய வங்கிகள் (நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ்) ஒரே காலகட்டத்தில் இந்த முடிவை எடுப்பது என்பது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. 

இது அமெரிக்க டாலர் மையப்படுத்தப்பட்ட உலக அமைப்பின் மீதான மறைமுக எதிர்ப்பும், தங்கத்தை மையமாகக் கொண்ட பாதுகாப்பான மாற்று ஏற்பாட்டை நோக்கிய நகர்வும் ஆகும். சுருக்கமாக சொன்னால் உலகம் Dedollarisation நோக்கியே செல்கிறது. Dedollarisation என்பது ஒரே இரவில் அமெரிக்க டாலரைத் தூக்கி எறிந்துவிட்டு வேறு ஒரு கரன்சியை ஏற்பது அல்ல.

மாறாக, உலக நாடுகள் டாலர் மீதான தங்களது பல தசாப்த கால குருட்டு நம்பிக்கையைக் கைவிட்டு, எந்தவொரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லாத ‘தங்கத்தை’ (Gold) தங்களது இறுதிப் பாதுகாப்பு அரணாக மாற்றுவதே உண்மையான Dedollarisation ஆகும். நெதர்லாந்து (86 டன்) மற்றும் பிரான்ஸ் (129 டன்) நாடுகள் தங்களுடைய கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கத்தை நியூயார்க்கிலிருந்து ரகசியமாகத் திரும்பப் பெற்றது இந்த Dedollarisation துரிதப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை தெளிவாக காட்டுகிறது. 

இந்த ஐரோப்பிய நாடுகள் தற்போது வெளியேற்றக் காரணம் வெறும் தற்செயல் அல்ல, இது டாலர் சார்ந்த அமைப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒரு வியூகம் . இதன் மூலம், அமெரிக்காவின் நேரடி நிதி அதிகாரத்திலிருந்து தங்கள் நாட்டின் மிக மதிப்புமிக்க சொத்தை அவர்கள் விடுவித்துக் கொண்டுள்ளனர். 

இது டாலர் கட்டமைப்பின் மீதான நேரடியான அவநம்பிக்கையை தெளிவாக காட்டுகிறது. ஐரோப்பாவின் மிகவும் எச்சரிக்கையான இந்த இரண்டு மத்திய வங்கிகள் ஒரே காலகட்டத்தில் இந்த முடிவை எடுப்பது, "அமெரிக்க டாலர் மையப்படுத்தப்பட்ட தற்போதைய நிதி அமைப்பு இனி பாதுகாப்பானதல்ல" என்பதை உலகிற்குச் சொல்லாமல் சொல்லும் Signalலாகவே பார்க்க வேண்டும்.

 மத்திய வங்கிகள் டாலரை விடுத்து தங்கத்தைக் குவிப்பதன் மூலமும், அதனைச் சொந்தக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதன் மூலமும் என்ன உணர்த்துகின்றனவெனில்…

தங்கம் என்பது எந்தவொரு தனிப்பட்ட அரசாங்கத்திற்கும் கட்டுப்படாத, எவராலும் முடக்க முடியாத (Sanctions மூலம் முடக்கம் செய்ய முடியாத) ஒரே சொத்து என்பதையும் உலகம் இனி ஒற்றை டாலர் நாணயத்தின் கீழ் இயங்காது என்றும் பலமுனை நிதி உலகத்தின் (Multi-polar Financial System) படியே இயங்கும் என்பதையும் இந்த இரு நாட்டு மத்திய வங்கிகளின் இந்தப் பயணம் திட்டவட்டமாக நிரூபிக்கிறது. 

அமெரிக்க அரசியல்வாதிகள் டாலரின் பலத்தைப் பற்றியும் பேசலாம் ஆனால் மத்திய வங்கிகளின் ‘தங்கம் மீளப்பெறுதல்கள்” உலகப் பொருளாதாரம் எவ்வளவு வேகமாக அதலபாதாளத்திற்கு செல்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. 

டாலரின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த அமைதியான De-Dollarisation புரட்சி, உலக நிதி வரலாற்றின் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.

இது ஒரு முகப்புத்தகத்தின் பிரதியாக்கம்.

Thank You Google

Thank You Google
Thanks