மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக மூவர் காணாமல் போயிருந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்த அனைவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்விபத்தில் காயமடைந்த 7 பேர் தற்போது ஹொணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், அந்த மையத்தில் இருந்த சுமார் 51 பேர் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அங்குருவாதொட, படகொட பகுதியில் அமைந்துள்ள 'மவ்பிய செவன செநெஹஸே கெடெல்ல' என்ற முதியோர் பராமரிப்பு நிலையத்தில் நேற்று (03) பிற்பகல் இந்தத் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், இந்தத் தீ விபத்தினால் அந்த மையத்திற்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த இல்லத்திற்குள் சுமார் 72 பேர் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனமாக நடத்தப்பட்டு வந்த இந்த மையத்தில், மனநலக் குறைபாடுடைய நபர்களும் தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்து காரணமாக இல்லத்தில் இருந்த சிலர் தீயில் கருகியுள்ளனர்.
அவ்வாறு தீயில் கருகிய 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று (04) காலை நடத்தப்பட்ட பின்னர், சடலங்களை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கத் தளங்களையும், ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே இருந்த ஒரு கப்பலையும் குறிவைத்ததாக ஈரான் கூறியது.
கார்க் தீவில் உள்ள ஈரானியத் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போட்ஸ்வானா கொடி ஏற்றப்பட்ட எண்ணெய் கப்பலை செயலிழக்கச் செய்ய அமெரிக்க இராணுவம் ஹெல்ஃபயர் ஏவுகணையைச் செலுத்தியதைத் தொடர்ந்து இது நிகழ்ந்தது.ஈரானியத் தாக்குதல்களில் ஒன்றில் குவைத் விமான நிலையத்தில் ஒரு இந்தியர் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் குவைத் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் தொடங்கியதிலிருந்து இப்பகுதியில் நடந்த ஈரானியத் தாக்குதல்களில் ஏற்பட்ட மிக அதிகமான உயிரிழப்புகளில் இவையும் அடங்கும்.
ஹென்றி நோவாக்கின் கொலை விவகாரத்தில் பதற்றத்தைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக மூத்த காவல்துறை அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அதிகாரிகள் வெள்ளையின மக்களுக்கு எதிராகப் பாரபட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டுகளால், காவல்துறை செயல்பாடு 1960-களுக்குப் பின்னோக்கிச் செல்லக்கூடும் என்று பிரிட்டனின் கறுப்பின அதிகாரிகளின் தலைவர் கூறியுள்ளார்.
தேசிய கறுப்பினக் காவல்துறை சங்கத்தின் தலைவரான தலைமை ஆய்வாளர் ஆண்டி ஜார்ஜ், நைஜல் ஃபாரேஜ் போன்ற அரசியல்வாதிகள் ஆதாரமற்ற மற்றும் ஆத்திரமூட்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பதின்பருவத்தினர் ஹென்றி நோவாக்கின் கொலைச் சம்பவம் தொடர்பாகப் பதற்றத்தைத் தூண்டிவிடுகிறார்கள் என்ற அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் இவ்வாறு பேசினார்.
கடந்த டிசம்பரில் சவுத்தாம்ப்டனில் குத்தப்பட்ட பிறகு, நோவாக்கிற்கு அதிகாரிகள் கைவிலங்கிட்டது என்பது இரு அடுக்குக் காவல் முறைக்கும் வெள்ளையின மக்களுக்கு எதிரான பாரபட்சத்திற்கும் சமம் என்ற ஃபாரேஜின் கூற்றை, காவல்துறையின் மூத்த தலைவர்கள் உட்படப் பலரும் எதிர்த்தனர்.
மேலும், இந்தக் கொலைக்கு எதிரான நடவடிக்கைக்கு "குளிர்ச்சியான சீற்றம்" தேவை என்று கூறியதற்காக ஃபாரேஜையும் அவர்கள் கண்டனம் செய்தனர்.இறந்த பதின்வயது இளைஞனின் குடும்பத்தினரின் விருப்பங்களை ரிஃபார்ம் யுகே தலைவர் புறக்கணித்துவிட்டதாக கெய்ர் ஸ்டார்மர் குற்றம் சாட்டினார், மேலும் ரிஃபார்ம் தலைவரின் செயல்களை "மன்னிக்க முடியாதவை" என்றும் கூறினார்.
நோவாக்கின் தந்தை மார்க், காவல்துறையினரால் தன் மகனுக்கு இழைக்கப்பட்ட "மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான" நடத்தையைக் கண்டித்திருந்தார்.
ஆனால் அவர் மேலும் கூறியதாவது: "அவனுடைய மரணம் மேலும் பிளவு, வெறுப்பு அல்லது பதற்றத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. அவனது கதை, நம் தெருக்களை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்ற உதவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
இந்தச் சம்பவத்தைக் கையாண்ட விதம் குறித்து விசாரணைக்கு உள்ளாகியுள்ள ஹாம்ப்ஷயரின் தலைமைக் காவலர் அலெக்சிஸ் பூன், புதன்கிழமை அன்று, நோவாக் கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்ட விதத்திற்காக மன்னிப்புக் கோரினார்.
அவர் மேலும் கூறியதாவது: "நீங்கள் இதை அனுபவிக்க நேர்ந்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன்."
எம்பிலிபிட்டியவில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
எம்பிலிபிட்டிய நோனாகம சுதுபாலம அருகிலுள்ள பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் களஞ்சியசாலைக்குள் இன்று காலை இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 22 பேர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
யாழ்ப்பாணம், வடமராட்சி வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியில் உள்ள வீட்டொன்றில், ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் 16 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட இருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் தலைமறைவாகியுள்ளார்.
சீட்டுத் தொழில் செய்யும் நபர் ஒருவரின் வீட்டின் புகைக்கூட்டை (சமையலறைப் பகுதி) உடைத்து, ஆட்கள் இல்லாத வேளையில் இந்தத் திருட்டு அரங்கேறியுள்ளது.
வீட்டின் உரிமையாளர் வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, கெருடாவிலைப் பகுதியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவனும் 19 வயது இளைஞனும் முறையே வல்லைச் சந்தியிலும், யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியிலும் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில், வீட்டின் உள்ளே புகுந்து பணத்தைக் கண்டதும், அவர்கள் நெடுங்கேணியைச் சேர்ந்த ஒருவருக்கு ‘வீடியோ கோல்’ மூலம் தொடர்பு கொண்டு காட்டியுள்ளனர்.
அவரின் அறிவுறுத்தலின் பேரில், அனைத்துப் பணத்தையும் நெடுங்கேணிக்கு எடுத்துச் சென்று அங்குள்ள காணியொன்றில் புதைத்து வைத்துவிட்டு, பின்னர் யாழ்ப்பாணம் திரும்பியதாகக் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து விரைந்து செயற்பட்ட காவற்துறையினர், நெடுங்கேணிப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த 74 இலட்சம் ரூபா பணத்தை மீட்டுள்ளனர். எஞ்சிய தொகையுடன் நெடுங்கேணியைச் சேர்ந்த நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கைது செய்யக் காவற்துறையினர் வலைவீசியுள்ளனர்.
நீதிமன்ற அனுமதியைப் பெற்றுச் சந்தேகநபர்களைத் தடுப்புக்காவலில் வைத்து வல்வெட்டித்துறை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லாததால், சிகிச்சைக்காக வரும் ஏழை நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீர் வசதி, கழிவறைகளில் தண்ணீர் தட்டுப்பாடு, லிப்ட் செயல்படவில்லை என நோயாளிகள் குற்றச்சாட்டிவருகின்றனர்.
5 தளங்கள் கொண்ட தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லிப்ட் இயங்காததால் நோயாளிகள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
இதனால் முதியவர்கள் மற்றும் படுக்கையில் உள்ள நோயாளிகளை அழைத்துச் செல்ல பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். உடைமைகள், உணவுப் பொருட்களை நோயாளிகளுக்கு எடுத்துச் செல்ல 5 மாடிகள் ஏறி இறங்க வேண்டி உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
கழிவறையில் தண்ணீர் தட்டுப்பாடு நிகழ்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் இருப்பதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். மருத்துவமனையின் ஐந்து தளங்களிலும் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரங்கள் கடந்த சில மாதங்களாகச் செயல்படவில்லை.
இதனால் நோயாளிகள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் கடும் அவதி.
எனவே அரசு உடனடியாக தலையிட்டு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.